November 13, 2017

அயினிப்புளிக்கறி -ஜெயமோகன்

ஜெயமோகனின் இந்தக் கதையை ஒரு மரத்தைப் பற்றிய கதை என்பதாகவே நாம் படித்துச் செல்கிறோம். எனவே கதையின் இடையே ஆசான் குடும்ப வாழ்க்கை பற்றிய ஒன்றிரண்டு வரிகள் வரும்போது, அசிரத்தையாக வாசிக்கிறோம். ஆனால் கதையில் இறுதியில் அதே போல ஒன்றிரண்டு வரிகளில் அவற்றை தொடர்பு படுத்திவிடுவதோடு, அயினி மரத்திற்குமான தொடர்பையும் அனாயசமாக ஜெயமோகன் சொல்லிச் சென்றுவிடுகிறார். மிக நுட்பமான இந்த எழுத்தாற்றல் படைப்பில் தோய்ந்த அனுபவத்தினால் மட்டுமே வரக்கூடியது. பார்ப்பதற்கு மிக எளிமையாகத் தோன்றினாலும் இது அவ்வளவு சுலபமல்ல. 


ஜி.நாகராஜனின் யாரோ முட்டாள் சொன்ன கதையைப் பற்றி குறிப்பிடும் சுந்தர ராமசாமி, “யாரோ முட்டாள் சொன்ன கதையை அவர் நிகழ்த்திக்கொண்டு போகும் முறை ரசிக்கும்படியாக இருக்கிறது. நிகழ்காலத்தில் இரண்டு கீற்று, நிகழ்ந்து முடிந்தவை இரண்டு கீற்று, இப்படி முடைகிறார் ஆசிரியர். மேற்பரப்பில் இது சாதாரணமாகத் தெரியலாம். எளிது என்று கூடப் படலாம். கை வந்த வித்தைகளில்-பானை வனைவதிலிருந்து பல்லாங் குழி ஆடுவது வரையிலும்-அவற்றின் நேர்த்தி அவற்றைச் சாதாரணம் போல் காட்டுகிறது” என்கிறார். அது இந்தக் கதைக்கும் பொருந்தும்.

மரத்தை வெட்டுவது பற்றி மகனுக்கும் தந்தைக்குமுள்ள கருத்து வேறுபாட்டில் இந்தக் கதை ஆரம்பிக்கிறது. ஒன்றின் பயன்பாடு குறித்த வேற்றுமையே இன்றைய தலைமுறையின் இடைவெளியாக இருக்கிறது. யாருக்கும் எதற்கும் பிரயோஜனமில்லாத அயினி மரம் எதற்கு என்கிறான் மகன். இந்தத் தலைமுறையின் அப்பட்டமான சுயநலத்தின் வெளிப்பாடாக அவன் இருக்கிறான். ஆனால் தந்தையோ, “இந்த சுத்துவட்டத்திலே உள்ள அத்தன கிளியும் குருவியும் மைனாவும் இங்கதான் இருக்கும். மனுசன் தின்னாட்டி என்னலே?” என்கிறார். நம்மைச் சுற்றியுள்ளவை வளமாக இருந்தால்தான் நாம் வளமாக இருக்க முடியும். அவை வேறு நாம் வேறு அல்ல. எல்லாமே இப்பிரபஞ்சத்தின் உறுப்புகள். இதில் ஒன்றில் ஏற்படும் பாதிப்பு அனைத்திலும் பாதிப்பை ஏற்படுத்தும்.

எனவே மகனோடு மேற்கொண்டு இருக்கப் பிரியப்படாத ஆசான் தனியே சென்று வசிக்க முடிவு செய்கிறார். அதை அறியும் குணமணி ருசி கண்ட நாக்கு இனி தனியே சென்று சமைத்திருக்க முடியுமா என்று கேட்கிறான். அப்போது, “அயினிப்புளிசேரி வச்சு சோறுதின்னு வருசம் நாப்பதாகுது” என்று சொல்லும் ஆசான் தன் முதல் மனைவியை நினைவு கொள்கிறார். அவள் வைப்பது போல அயினிப்புளிச்சேரி வைக்கமுடியாது என்றும் அவளும் தானும் சேர்ந்து வாழ்ந்த ஒன்பது மாதத்திலேயே கருத்து வேறுபாட்டால் பிரிய நேர்ந்துவிட்டதைச் சொல்கிறார்.

மறுநாள் காலையில் அங்கிருந்து கிளம்பும் அவர் கால்களே இட்டு வந்தது போல தன் முதல் மனைவி இருந்த இடத்தை அடைகிறார். நேற்றைய இரவில் அவர் மண்டையில் அறைந்த புளிப்பே அவரை இங்கே கொண்டுவந்து சேர்த்திருக்கிறது! “வாறியாடீ?” என்று அவளைப் பார்த்துக் கேட்க அவள், “வாறேன்” என்கிறாள். மிக எளிமையாகக் கதை முடிந்து விடுகிறது.

இந்தச் சிறுகதையை வாசிக்க ஆரம்பித்த போதும் வாசித்து முடித்தபின்னும் மனத்தின் பின்புலமாக,

காயிலே புளிப்பதென்ன கண்ண பெருமானே - நீ
கனியிலே இனிப்பதென்ன கண்ண பெருமானே

என்ற பாரதியின் வரிகளே தொடர்ந்து கேட்டவண்ணமிருந்தன. காய் எனில் புளிப்பதும் கனி எனில் இனிப்பதும் இயல்புதானே? ஆனால் அந்தக் காய்தான் குறிப்பிட்ட இடைவெளியில் கனியாகக் கனிந்து இனிப்பை ஊட்டுகிறது. இதை மையமாகக் கொண்டு இந்த அற்புதமான காதல் கதையை பின்னியிருக்கிறார் ஜெயமோகன். இது ஒரு காதல் கதை என்றோ அல்லது எதைப்பற்றிய கதை என்றோ கதையை கடைசி வரை வாசித்து முடிக்காதவரை நாம் ஊகிக்க முடியாது.

கதையின் இறுதியல் ஆசான் மனைவியிடம், “நேற்று அயினிப்புளிக்கறி வச்சேன்.. செரியா வரேல்ல கேட்டியா” என்கிறார். அவர் அயினிப்புளிக்கறி மட்டுமா சரியாக வரவில்லை என்கிறார். தான் இதுவரை வாழ்ந்த வாழ்கை முழுவதுமே சரியாக வரவில்லை என்பதாகவே அவர் சொல்கிறார். இரண்டாவது திருமணம் செய்துகொண்டது, மகனும் மருமகளும் தன் பேச்சைக் கேட்காதது இப்படி அனைத்துமே சரியாக அமையவில்லை என்றே அவர் சொல்கிறார்.

எந்த இரு உறவும் இணையும் போது அது காயாகவே இருக்கும். அது கனியாகும்வரை காத்திருக்கும் பொறுமை வேண்டும். அயினி மரத்தின் காய் புளிப்பாகத்தான் இருக்கும். ஆனால் அதன் இனிப்பை சுவைக்க அது பழமாகும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். காயாக இருக்கும்பொதே வெட்டிவிட்டால் அதன் இனிப்பை சுவைக்க முடியுமா?


Read more ...

November 5, 2017

திருக்குறள் உரை

எல்லோரையும் போலவே திருக்குறள் எனக்கு அறிமுகமானது மனப்பாடச் செய்யுளாகத்தான். குறைந்த அடிகளில் நிறைந்த மதிப்பெண் தரும் ஒரு சாதனமாகவே அது இருந்தது. குறளிலிருந்து அதிகாரத்திற்குச் செல்லவே பல வருட பள்ளிப் படிப்பு தேவைப்பட்டது. யோசித்துப் பார்க்கையில் குறள் எப்போது தனித்துவமிக்க ஒன்றாகவும் ஒப்பற்றதாகவும் தோன்றியது என்பது நினைவில் இல்லை. குறளிலில்லாதது என ஏதுமில்லை என்று அறிந்த போதுதான் அதன் முழுமையான சிறப்பும் ஆழமும் தெரியத் தொடங்கியது என நினைக்கிறேன். 

குறளில் என்னை வெகுவாகக் கவர்ந்த அம்சம் என்னவெனில், முதல் மூன்று சீர்களில் ஒரு கருத்தைச் சொல்லும் வள்ளுவர் நான்காவது சீரில் ஒரு கேள்வியைத் தொடுப்பார். பிறகு அடுத்து வரும் மூன்று சீர்களில் கேள்விக்கான பதிலைச் சொல்லுவார். இது அவரின் பெரும்பாலான குறள்களில் காணக் கிடக்கும் ஓர் அரிய அம்சமாக எனக்குத் தோன்றியது. அடுத்து முக்கியமான ஒரு சிறப்பு குறளின் ஓசை நயம். எல்லாக் குறள்களுமே ஓசை நயம் கொண்டவைதான். எதுகை மோனையினூடே அந்த ஓசை நயத்தை வள்ளுவர் திறம்படக் கையாண்டிருப்பார். குறளின் அடுத்த பெருஞ்சிறப்பு அதன் ஆழம். இரண்டடிகளில் அவர் பொதிந்து வைத்திருக்கும் விசயங்கள் எண்ணற்றவை. பல இடங்களில் அந்த ஆழம் நுட்பமாக வெளிப்பட்டு நம்மை அதிசயிக்க வைக்கும். ஆக இவையெல்லாம் குறளின் மீது எனக்கு ஈடுபாடு தோன்றக் காரணங்கள் என்று சொல்லலாம். 

குறளுக்கு எத்தனையோ ஜாம்பவான்கள் உரை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் சாதிக்காத எதையும் நான் சாதித்துவிடப் போவதில்லை. மாறாக குறளின் மீது கொண்ட காதலின் காரணமாகவே இந்த உரையை எழுத விருப்பம் கொண்டேன். மற்றபடி நான் குறளில் புலமையும் பாண்டித்யமும் பெற்றவன் அல்ல. குறளை நேசிக்கும் ஒரு சாதாரண வாசகன் என்ற நிலையிலேயே இந்த உரையை எழுதியிருக்கிறேன். குறளைப் போன்றே இரண்டடிகளில் எழுதியிருக்கிறேன். வேண்டுமிடங்களில் குறளின் வார்த்தைகளையே தக்கவைத்துமிருக்கிறேன். 

இதை எழுதும் பொருட்டு அனைத்துக் குறள்களையும் வாசிக்க நேர்ந்தது ஓர் அற்புதமான அனுபவம். அந்த அனுபவம் தந்த பாடம், குறள் இந்த உலகம் உள்ளளவும் நிலைத்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை என்பதே. 

இந்தப் புத்தகம் டிசம்பர் இறுதி அல்லது ஜனவரி முதல் வாரத்தில் தயாராகிவிடும். வழக்கம் போல அமேசானில் வெளியிட உத்தேசம். பதிப்பகம் ஏதேனும் கிடைப்பின் இங்கேயே வெளியிடவும் நேரலாம்.

Read more ...

அடக்க விலைக்கு எனது புத்தகங்கள்

பல முயற்சிகளுக்குப் பிறகு எனது பேப்பர்பேக் புத்தகங்கள் திருப்தியான வடிவத்தை எட்டியிருக்கின்றன. முதல் கட்டமாக சில பிரதிகளைத் தருவித்துப் பார்வையிட்டேன். புத்தகங்களின் கட்டமைப்பும் அச்சும் தாளும் தரமானதாக அமைந்திருக்கின்றன. குறிப்பாக அட்டை Matt Finish-ல் இவ்வளவு சிறப்பாக வரும் என நானே எதிர்பார்க்கவில்லை.

இந்தப் புத்தகங்களை விருப்பமுள்ளவர்களுக்கு அடக்கவிலைக்கு கொடுக்க விரும்புகிறேன். எனவே தேவையுள்ளவர்கள் tpkesavamani@gmail.com எனும் முகவரிக்குத் தொடர்பு கொண்டால் தபால் செலவின்றி அனுப்புவதற்குத் தயாராய் இருக்கிறேன்.
  1. முக்கிய தமிழ்ச் சிறுகதைகள் ஒரு பார்வை ரூ. 310
  2. ஜெயமோகன் நாவல்களும் சிறுகதைகளும் ரூ.330
  3. முக்கிய தமிழ் நாவல்கள் சில குறிப்புகள் ரூ.360
  4. என் கட்டுரைகள் ரூ.380
இந்நூல்கள் அனைத்தும் கிண்டில் வடிவிலும் புத்தக வடிவிலும் உலகெங்கும் கிடைக்கும்
Read more ...

October 25, 2017

ஆழமற்ற நதி -ஜெயமோகன்

இந்தக் கதையை வாசிக்கும் போது சுஜாதாவின் டாக்டர் நரேந்திரனின் விநோத வழக்கு நாடகம் நினைவில் வந்தது. “கோமா பத்தி எங்களுக்கு எவ்வளவு தெரியும்? ஒருவேளை அவர் ஒருவிதமான மேம்போக்கான ஸ்டுப்பர்ங்கிற நிலையிலே இருந்து எல்லாத்தையும் கேட்டுகிட்டு இருக்கார்னா என்ன ஒரு பரிதாப நிலை அது” என்று நினைக்கும் டாக்டர் நரேந்திரன் கோமாவில் இருக்கும் நோயாளியின் ஆக்சிஜன் குழாய்களைப் பிடுங்கி விடுதலை தருவார். கருணையின் பாற்பட்டு நரேந்திரன் இதைச் செய்கிறார்.

இருந்தும் இப்படியான நிகழ்வுகள் என்னதான் “கருணைக் கொலை” எனினும், அந்த சொல்லாட்சியில் “கொலை”யும் இருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது. காசிநாதன் இதையே தேவையின் பாற்பட்டு செய்கிறார். செயல் ஒன்றுதான் ஆனால் அதன் பின்னுள்ள நோக்கம் வேறுபடுகிறது. ஒரு செயலின் பின்னுள்ள நோக்கமே ஒரு செயலின் தரத்தை நிர்ணயிக்கிறது. எனவே, அந்த குற்றவுணர்வின் உந்துதலினாலே காசிநாதன் பாவத்திற்கான பிரயாச்சித்தத்தைச் செய்ய முனைகிறார்.


“பாவத்தைக் கரைப்பதற்கான எந்த ரசாயனமும் கங்கையில் இல்லை. ஆனால் இந்த சமூகத்தின் 'கங்கையின் மூழ்கினால் பாவம் நீங்கும்' எனும் கூட்டு மனம், பாவத்தை நீக்கும் நம்பிக்கையைத் தருகிறது” என்று ஓஷோ ஓர் அற்புதமான கருத்தைச் சொல்கிறார். உண்மையில் பாவம் அல்லது புண்ணியம் என்பதைத் தீர்மானிப்பது யார்? இந்த உலகத்தில் பிறந்தவர்கள் அனைவரும் பாவமும் புண்ணியமும் செய்தே ஆகவேண்டும். பாவத்திற்குப் பலனும் புண்ணியத்திற்குத் தண்டணையும் தனித்தனியே கிடைக்கும் என்று வியாசர் மகாபாரதத்தில் சொல்கிறார். ஆக மனித மனம் தான் பாவம் என நினைக்கும் ஒன்றிலிருந்து விடுபட அதற்கான பிராயச்சித்தத்தை நோக்கி நகர்கிறது எனினும், காசிநாதன் போன்றவர்கள் அதிலும் ஒரு பொய்த்தோற்றத்தையே சிருஷ்டிக்கிறார்கள் என்பதை இந்தக் கதையில் அருமையாகப் படம் பிடிக்கிறார் ஜெயமோகன்.

எய்தவன்-அம்பு இரண்டில் யார் குற்றவாளி என்று கேட்டால், ஒரு செயலுக்கு ஜடப்பொருளை யாரும் குற்றம் சுமத்த முடியாது. அதை எய்தவனே எப்போதும் செயலுக்கு ஆதாரமாக இருப்பவன். கதிரை ஒரு ஜடப்பொருளாகக் கருதியே காசிநாதன் குடும்பத்தார் அவன் மூலமாக தாங்கள் விரும்பியதைச் செய்துகொள்கிறார்கள். அப்போது கதிரின் சம்மதத்தை யார் கேட்டார்கள்? கதிரை ஒரு பொருட்டாக மதிக்காத அவர்கள் பிராயச்சித்தத்தை மட்டும் அவனைக் கொண்டு செய்விப்பது எந்த விதத்தில் நியாயம்? பாவத்தைச் செய்தவர்கள் ஒருவராக இருக்க அதற்கான பிராயச்சித்தத்தைச் செய்வது மற்றொருவர் என்பது எந்தவிதத்தில் ஏற்புடையது? இதுதான் கதிரின் அழுகைக்குக் காரணமா?

இந்தக் கதையில் கதிரின் அழுகைக்கான காரணங்களை கண்டடைவதன் மூலமே வாசிப்பில் இக்கதையை நாம் விரித்தெடுக்க முடியும். இந்தச் செயலைச் செய்யும்போது கதிர் ஏன் சிறு எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை? என்ற கேள்வியின் உள்ளே நுழைகையில் நமக்கு கதிரின் அழுகைக்கான வேறு காரணங்கள் புலப்படுகின்றன. வாழ்க்கையில் தான் இத்தனை நாளும் பட்ட அவஸ்தைகளைத் தன்னுடைய தந்தையும் படக்கூடாது என்றுதான் கதிர் அச்செயலுக்கு எதிர்ப்பு காட்டவில்லை என்று கொண்டால், இப்போது கதிர் அழுவது ஏன்? ஒரு செயலைச் செய்து முடிக்கும் வரை உள்ள உணர்வும், அதைச் செய்து முடித்தபின் எழுகின்ற உணர்வும் எப்போதுமே வேறானவை. தான் இந்த நிலையில் இருந்தபோதும் தன் தந்தை தன்னைக் கைவிட முனையவில்லை. ஆனால் நானோ தந்தையைக் கைவிட்டு விட்டேன் என்ற குற்ற உணர்வினால் கதிர் அழுதிருக்கலாம். அப்படி விட நேர்ந்துவிட்ட கையறு நிலையில் தான் இருந்துவிட்டதை எண்ணி அவன் அழுதிருக்கவும் கூடும்.

கடைசியில் கதிரின் அழுகையைக் கேட்டு காசிநாதனும் அவர் குடும்பத்தாரும் ஏன் கலவரமுற்று அச்சப்பட வேண்டும்? தாங்கள் இது நாளும் செய்து வந்தவை வெட்ட வெளிச்சமாயிற்றே என்றா? தன் செயல்கள் அனைத்தையும் கடவுள் கவனிக்கிறார் என்று மனிதன் நம்புவதால்தான் சிலவற்றைச் செய்வதற்கு அவன் தயக்கம் காட்டுகிறான். சிலர் அந்த தயக்கத்தை விட்டு வெளியேறி விடுவதும் உண்டு. அப்படி வெளியேறியவர்கள் ஏனைய மனிதர்களோடு சகஜமாக இருக்க முடியாது என்பதும் வெளிப்படை. தாங்கள் அத்தகைய ஒரு நிலையை அடைந்து விட்டோமோ என்றுதான் அவர்கள் அச்சப்படுகிறார்கள். மனிதர்கள் தாங்கள் நல்லவர்கள் என்பதைவிடவும், தாங்கள் நல்லவர்கள் என்பது பொய்யாகி விடக்கூடாது என்றுதான் அதிகமும் அச்சம் கொள்கிறார்கள்.

உயிருள்ள அனைத்துமே உணர்வுகள் உள்ளவைதான் என்பதைச் சொல்லும் ஜெயமோகனின் ஆழமற்ற நதி ஓர் ஆழமான சிறுகதை. சாதாரண மனிதர்களிடையே கதிரைப் போன்றவர்களை இறைவன் ஏன் படைக்கிறான் என்பது புரியாத புதிர். அந்தச் சாதாரண மனிதர்கள் இத்தகைய அசாதாரணமான மனிதர்களை எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதை இந்தக் கதை சொல்கிறது. கதிரைப் போன்ற துரதிருஷ்டசாலிகள் ஒரு சாதாரணமான குடும்பத்தில் பிறந்தாலே அவர்களின் நிலை பரிதாபத்திற்குரியது எனில் காசிநாதன் போன்று செல்வச் செழிப்பில் திளைக்கும் ஒரு குடும்பத்தில் பிறந்தால் என்னவாகும்?

என்னதான் நதி ஆழமற்றிருந்தாலும் அதன் இயல்பு மாறுவதில்லை என்பதைப் போலவே உயிருள்ள அனைத்தின் இயல்பும் ஒன்றுதான் என்பதை நாம் ஏனோ மறந்துவிடுகிறோம். அதை நினைவில் நிறுத்தும்போதுதான் நாம் முழுமையான மனிதர்களாவோம்.

இந்தக் கதை கச்சிதமான வார்த்தைகளால் கட்டமைக்கப் பட்டுள்ளது. அவற்றில் கவனம் செலுத்தும்போதே இந்தக் கதை செல்லும் திசையை நாம் அறிய முடியும். ஆங்காங்கே அவ்வாறு வெளிப்படும் வார்த்தைகளும் சரி இக்கதையின் தலைப்பும் சரி நமக்குக் காட்டுவது ஒன்றெனில், இறுதியில் வெளிப்படும் கதிரின் அழுகை அதன் எதிர்த்திசையைக் காட்டுகிறது. அதன் மூலமாகவே இக்கதையின் தரிசனம் வெளிப்படுகிறது.

சமீபமாக நான் வாசித்த கதைகளில் ஆழமற்ற நதி முக்கியமான, என்னை பாதித்த, ஒரு கதை.
Read more ...

September 18, 2017

நம் நற்றிணை

நற்றிணை பதிப்பகத்தின் காலண்டிதழான நம் நற்றிணையின் முதல் இதழ் வெளியாகியிருக்கிறது. இவ்விதழ் முழுவதும் இலக்கியத்தைக் குறித்த அம்சங்களே இடம் பெற்றிருப்பது வெகு சிறப்பு. பல இலக்கிய இதழ்கள் இன்று அரசியல் இதழாக மாறிவிட்ட நிலையில், முழுக்க முழுக்க இலக்கியம் சார்ந்ததாக நம் நற்றிணை வருவது வரவேற்கத் தக்கது. நான் எனது இலக்கிய ஆசானாகக் கருதும் சி.மோகன் அவர்களின் இலக்கிய உரையாடல் தொடர்வது உவப்பான செய்தி.

114 பக்கங்கள் கொண்ட இவ்விதழ் தரமான தாளில், நேர்த்தியான அச்சாக்கத்தில், உயர்தரமாக அமைந்திருக்கிறது. கவிதை, கதை, கட்டுரை என்றில்லாமல் நாவல் பகுதியில், நற்றிணையின் புதிய நாவல்களை அறிமுகப்படுத்தும் விதமாக, நாவலின் சில பகுதிகளை இடம்பெறச் செய்திருப்பது, அந்நாவல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்கிறது.

இவ்விதழில் ஜெயமோகனின் சமீபத்திய சிறுகதை தொகுப்பான உச்சவழு நூலுக்கு நான் எழுதிய மதிப்புரை இடம்பெற்றுள்ளது.Read more ...