September 6, 2017

சுந்தர மோகன் வீடு திரும்பினார்!

உடல் நலமின்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுந்தர மோகன் நேற்றைய தினம் வீடு திரும்பினார். அவரைப் பார்க்கச் சென்றிருந்தேன். அவர் அப்படி ஒன்றும் உற்சாகமாக இல்லை, சோர்வாகக் காணப்பட்டார். என்னைக் கண்டதும் சூரியனைக் கண்ட தாமரையாக அவர் முகம் மலர்ந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அவர் முகம் கடுகடுவென்றானது. நான் ஏதோ சொல்வதற்கு வாயைத் திறந்தேன். ஆனால் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். நான் அவரே பேசட்டும் என்று பேசாதிருந்தேன். அவர் கோபத்திற்கான காரணம் புரிந்தேயிருந்தது. ஆனால் செய்வதற்கு ஒன்றுமில்லை.

நான் அவர் அருகே அமர்ந்து, எங்கோ தூரத்தில் வானத்தை வெறித்தபடியிருந்தேன். சற்று நேரம் அமைதியாகக் கழிந்தது. பிறகு அவரே தொண்டையைக் கனைத்தவறாக, “மருத்துவ மனைக்குத்தான் வரவில்லை. நான் ஏன் அங்கு சென்றேன் என்பதாவது தெரியுமா?” என்று கேட்டார். எனக்கு எப்படித் தெரியும்! ஒரு மருத்துவமனைக்குச் செல்ல உடல்நலமில்லை என்பதைத் தவிர வேறு காரணமென்ன இருக்க முடியும். அவர் ஒரு வேளை உடல்நலமில்லாமற் போனதற்காக காரணத்தைச் சொல்ல வருகிறார் என்று புரியவே, “தெரியவில்லையே நீங்களே சொல்லுங்கள்” என்றேன்.

அவர் மீண்டும் ஒரு முறை தொண்டையைக் கனைத்தவராக, “கடந்த சில நாட்களாக பல தமிழ் திரைப்படங்களைத் தொடர்ச்சியாகப் பார்த்தேன்...” என்று இழுத்தார். அவர் மேற்கொண்டு சொல்லாமலே என்ன நடந்தது என்று புரிந்துவிட்டது! அவர் மருத்துவ மனைக்குச் சென்றதன் காரணமும் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது!

“தொடர்ச்சியாகவா?....” என்றேன்.

“ஆமாம்.”

“எத்தனை படங்களிருக்கும்?”

“சுமார் ஒரு இருபதிருக்கும்.”

“இருபதா?” என்று நான் அலறினேன். “உங்களுக்கு இந்த வயதில் ஏன் இந்த விஷப்பரிட்சை?”

“எல்லாம் விதி” என்றார்.

“சரி இப்போது ஒன்றும் பிரச்சினையில்லையே?”

“இல்லை என்றும் சொல்ல முடியாது. உண்டு என்றும் சொல்ல முடியாது...” என்று அவர் தொடங்கவே எனக்கு வயிற்றைக் கலக்கியது. மனிதர் என்ன சொல்லப் போகிறாரோ?

“வெகு சமீபத்தில் ஒரு திரைப்படத்தைப் பார்த்தேன். அது மண்டைக்குள் குடைந்து கொண்டிருக்கிறது.”

“சரிதான்” என்று நான் அவஸ்தையாக நெளிந்தேன். “எப்போது பார்த்தீர்கள்?”

“நேற்று இரவு” என்ற அவர் என் முகத்தைப் பார்க்காது எங்கோ ஏறிட்டார்.

“அதாவது நேற்று மருத்துவமனையிலிருந்து திரும்பிய பிறகு?...” என்று நான் கேட்கவும் அவர் நீண்ட மௌனம் சாதித்தார்.

எனக்குக்குள் கோபம் சுர்ரென்று தலைக்கு ஏறியது. ஏன் இந்த வேண்டாதவேலை என அவரை முறைத்தேன்.

“என்ன செய்ய? பழக்கதோஷம் விடமாட்டேங்கிறது. மேலும் நான் திரைப்படங்களுக்கு வசனம் எழுதப் போகலாமென்றிருக்கிறேன்” என்று பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார்.

“வசனம் மட்டும்தானா? இல்லை கதை, திரைக்கதை, இத்தியாதி...”

“எல்லாத்தையும் முயற்சிப்போமே அதில் என்ன தப்பிருக்கிறது?”

“தப்பில்லைதான்! இருந்தாலும்.....”

“ஒரு கதையும் தலைப்பும் ரெடியாக இருக்கிறது” என்று அவர் உற்சாகத்துடன் பேசினார்.

எனக்குத் தலை சுற்றியது. அதற்குள்ளாகவா?

“படத்தின் தலைப்பு அவிவேகம். இதற்கு சூப்பரான பன்ச் டைலாக் ரெடி!. சொல்லட்டுமா?

விதி வலியது. வேண்டாமெனினும் விட்டுவிடுமா என்ன?

“ம்” என்றேன் சுரத்தில்லாமல். 

“ஸ்கூல் வாத்தியார் மாடுமேய்க்கத்தான் லாயக்கு என்று சொன்னாலும், அம்மா அப்பா மக்குன்னு சொன்னாலும், இந்த உலகமே முட்டாள்னு சொன்னாலும், நானா பரிட்சை எழுதி பெயிலாகிற வரைக்கும் ஒத்துக்க மாட்டேன்” என்று ஏற்ற இறக்கத்துடன் பேசியவர், “எப்படி?” என என் முகத்தை ஏறிட்டார்.

நான் உடனடியாக அங்கிருந்து செல்லவேண்டும் என்று தோன்றியது! ஆனால் மனிதர் இலகுவில் விடுபவரல்லவே! நான் மிகுந்த பிரயாசைப்பட்டு அவர் கவனத்தை திரைப் படத்திலிருந்து புத்தகங்களுக்குத் திருப்பினேன்.

“நாம் ஏன் இன்னும் கிராஃபிக் நாவல்களிலும், காமிக்ஸ் புத்தகங்களிலும் அயல் தேசத்தையே நம்பியிருக்கிறோம்?” என்று கேட்டேன்.

வெகுநேரம் யோசித்த அவர், “கற்பனை வறட்சிதான்” என்று பொதுப்படையாகச் சொன்னார். பிறகு, “அது ஒரு கூட்டு முயற்சி. பலதரப்பினரின் உழைப்பு சம்பந்தப்பட்டது. ஆனால் இங்கு அப்படி இல்லை என்பதுதான் காரணம்” என்றார்.

அவர் சரியாகவே சொல்வதாகப் பட்டது. “ஒரு நிமிஷம்” என்றவர் எழுந்து உள்ளே சென்றார். சற்று நேரத்தில் திரும்பி வந்து சில காகிதங்களை என்னிடம் கொடுத்தார். நான் வாங்கிப் பார்த்தேன்.


எனக்கு சற்று நேரம் ஒன்றும் புரியவில்லை. அவரே சொல்லட்டும் என்றிருந்தேன். “இது நான் உருவாக்கத் திட்டமிட்டுள்ள கிராஃபிக்ஸ் புத்தகத்தின் மாதிரி” என்றார் அவர்.

நான் திடுக்கிட்டு அவரைப் பார்த்தேன்.

“நல்ல விசயங்களை இப்படியாகத்தானே கொண்டு சேர்க்க வேண்டும்? குறிப்பாக குழந்தைகளிடம்” என்ற அவர் புன்னகையுடன் என்னைப் பார்த்தார்.

இவர் மேதாவியா அல்லது கோமாளியா என்று தெரியாமல் முழித்தேன்.

“நீ நினைப்பது புரிகிறது. மேதாவிகள் எப்போதும் கோமாளிகளாகவும் இருப்பார்கள்” என்று சொல்லிச் சிரித்தார்.

நானும் வெகுநாட்களுக்குப் பிறகு வாய்விட்டுச் சிரித்தேன்.


Related Posts Plugin for WordPress, Blogger...