June 14, 2017

21. துஷ்யந்தன் சகுந்தலை விவாதம்

துஷ்யந்தன் சகுந்தலையை விட்டுச் சென்ற பிறகு, உரிய காலத்தில், அழகிய ஆற்றல் மிகுந்த மகனை சகுந்தலை பெற்றெடுத்தாள். அவள் அவனை மூன்று வருடங்களாக வளர்த்தாள். கண்வமுனிவர் அவனுக்கு பிறப்பிலிருந்து வளரும்வரை உரிய அனைத்து சம்பிரதாயங்களையும் செய்தார். அவன் அழகிலும் குணத்திலும் சிறந்து விளங்கினான். கூர்மையான வெண்ணிற பற்களை உடைய அவன் சிங்கத்தை கொல்லும்படியான ஆற்றல் கொண்டிருந்தான். அழகும் ஆற்றலும் மிக்கவனாய் அகன்ற நெற்றியைக் கொண்டிருந்தான். அவனுடைய உள்ளங்கையில் சக்ர ரேகை இருந்தது. அவன் தேவர்களின் மகனைப் போல மிக விரைவாக வளர்ந்தான். அவனுக்கு ஆறு வயதாக இருந்தபோது, கண்வமுனிவரின் பர்ணசாலை அருகே இருந்த மரத்தில், சிங்கங்கள், புலிகள், காட்டெருமைகள், யானைகள் இவற்றைக் கட்டி வைத்தான். அவன் அவற்றின் மீது சவாரி செய்தும், அவற்றோடு விளையாடியும், அவைகளைப் பழக்கினான். இவ்வாறு அவன் அனைத்தையும் தன் கட்டளைக்குக் கீழ்படிய வைத்ததால் அவனுக்கு அங்குள்ளவர்கள் சர்வதமனா என்று பெயரிட்டனர்.

குழந்தை இயல்புக்கு அதிகமான அவனது நடத்தையை கண்ட கண்வமுனிவர், அவனை வாரிசாக அறிவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாக சகுந்தைலையிடம் சொன்னார். எனவே தன் சீடர்களிடம், “சகுந்தலையையும் அவன் மகனையும் உடனடியாக அவளது கணவரிடம் கொண்டு சேருங்கள். மங்களகரமான அனைத்து குறிகளையும் கொண்ட அவள் மேலும் அவளுடைய உறவினர்களிடம் இருப்பது சரியல்ல. அங்ஙனம் இருப்பது அவளது புகழுக்கும், குணத்துக்கும், நடத்தைக்கும் களங்கம் ஏற்படுத்தும். எனவே தாமதிக்காமல் கூட்டிச் செல்லுங்கள்” என்றார். கண்வமுனிவரின் சீடர்கள் அவர்கள் இருவரையும் கூட்டிச் சென்றனர். தாமரையை ஒத்த கண்களும், அழகிய புருவங்களும் கொண்ட அந்த தெய்வீகக் குழந்தை சகுந்தலையுடன் அந்தக் காட்டிலிருந்து வெளியேறினான்.

ஒளிபொருந்திய காலைச் சூரியனைப் போல், சகுந்தலை தன் மகனுடன் துஷ்யந்தனின் அரண்மனைக்குள் நுழைந்தாள். அரசபையில் வீற்றிருந்த துஷ்யந்தனை வணங்கிய சகுந்தலை, “அரசே! இது தங்களுடைய மைந்தன். அவனை தாங்கள் தங்களது வாரிசாக அறிவிக்க வேண்டும். எனக்குக் கொடுத்த வாக்குறுதியை இப்போது நிறைவேற்றுங்கள். பல வருடங்களுக்கு முன்னால், நானும் நீங்களும் கண்வமுனிவர் ஆசிரமத்தில் கூடியபோது, தாங்கள் எனக்குக் கொடுத்த வாக்குறுதியை நினைவு படுத்திப் பாருங்கள்” என்றாள்.

சகுந்தலைக் கூறியதைக் கேட்ட துஷ்யந்தன் நினைவு படுத்திப் பார்த்தவனாக, “துறவு பூண்ட தீயவளே! எனக்கு எதுவும் நினைவில் இல்லை. நீ யாரிடம் இதைச் சொல்கிறாய்? உனக்கும் எனக்கும் எந்தவகையிலும் தொடர்பு இருப்பதாகத் தெரியவில்லை. நீ இங்கிரு அல்லது போ. நீ என்ன செய்ய விரும்புகிறாயோ அதைச் செய்” என்று துஷ்யந்தன் கோபமாகச் சொன்னான்.

அதைக் கேட்டு வெட்கம் கொண்டு, வேதனையில் ஆழ்ந்த சகுந்தலை தன்னுடைய சுயஉணர்வை இழந்தவளாக தூணைப் போல அசையாது நின்றாள். விரைவில் அவளுடைய கண்கள் கோவைப் பழமாகச் சிவக்க, இடை நடுங்க அசைந்து நின்றாள். தன்னுடைய ஓரக்கண்களால் துஷ்யந்தனை எரித்து விடுவது போல் நோக்கினாள். சினத்தின் வசப்பட்டிருந்தாலும், தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு, தன்னுடைய தவத்தின் பயனால் சாந்தமானாள். சற்று நேரம் அசையாது நின்றவளாக தன்னுடைய நினைவுகளை ஒருங்கமைத்துக் கொண்டாள். பிறகு தன் கணவனை நேருக்கு நேராக நோக்கியவளாக பேசினாள்.

“ஓ மன்னனே! அனைத்தும் நன்கறிந்தும் ஒரு சாதாரண மனிதனைப் போல எதுவும் தெரியவில்லை என்று எப்படிச் சொல்கிறாய்? என்னுடைய வார்த்தைகளின் உண்மை அல்லது பொய்யை உன் இதயம் அறியும். நீயே உனக்கு சாட்சி. எது நன்மை பயக்குமோ அதைச் செய். உன்னை நீயே தாழ்த்திக் கொள்ளாதே. எவனொருவன் தன் மனமறிந்த ஒன்றை இல்லை என்று சொல்கிறானோ, அவன் திருடனைப் போல, தன்னுடைய சுயத்தைத் தானே களவாடியவனாவான். அத்தகையவன் எந்த பாவத்தைச் செய்யாமல் விடுவான்? நீ உன்னுடைய சுயத்தில் நீ மட்டுமே இருப்பதாகக் கருதுகிறாய். ஆனால் தொன்மையான எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஒருவன் உன்னுள்ளே வாழ்கிறான் என்பதை நீ அறியமாட்டாய். உன்னுடைய அனைத்து நடத்தைகளையும், உன்னுடைய அனைத்து தீய செயல்களையும் அவன் நன்கறிவான். அவன் முன்னிலையில் இப்போது நீ பொய் சொல்கிறாய். தவறு செய்யும் போது ஒரு மனிதன் தன்னை யாரும் பார்க்கவில்லை என்று நினைக்கிறான். ஆனால் அவனைக் கடவுளும், அவனுள் உறையும் ஒருவனும் பார்க்கிறார்கள். சூரியன், சந்திரன், காற்று, அக்னி, நீர், நிலம், ஆகாயம், அவன் இதயம், யமன், பகல், இரவு, அந்தி, கருக்கல் மற்றும் தர்மம் இவை அனைத்துமே ஒரு மனிதனின் அனைத்து நடவடிக்கைகளையும் அறிகிறது.

ஒரு மனிதன் உள்ளத்தில் உறையும், அனைத்துக்கும் சாட்சியான கடவுள் அவனுடைய நடத்தையால் திருப்தியடைந்தால், யமன் அவனை மன்னிப்பான். அவ்வாறு அந்தக் கடவுள் திருப்தியடைவில்லை எனில், யமன் நிச்சயம் தண்டிப்பான். பொய்யை பிரதிநிதித்துவப்படுத்தி, தன் சுயத்தைத் தானே தாழ்த்திக் கொள்பவன் தெய்வத்திடம் தஞ்சமடைய முடியாது. அவனுடைய சொந்த ஆன்மாவே அவனை ஆசிர்வதிக்காது. நான் என்னுடைய கணவனுக்கு உண்மையானவளாக இருந்தேன். நான் என்னுடைய விருப்பத்தின் பேரில் இங்கு வந்ததால் தரக்குறைவாக நினைக்காதே. நான் உன்னுடைய மனைவி என்ற அந்தஸ்தில் எனக்கு உரிய மரியாதை செய்யப்பட வேண்டும். இந்த அரச சபையில் நீ என்னை ஒரு சாதாரணப் பெண்ணைப் போல நடத்துவது ஏன்? அதற்காக நான் அழப்போவது இல்லை. நான் கூறுவதை நீ ஏன் செவிமடுக்கவில்லை? ஓ துஷ்யந்தா! நான் உன்னிடம் என்ன கேட்டேனோ அதை நீ செய்யவில்லை எனில் இன்று உன்னுடைய தலை நூறு துண்டுகளாகச் சிதறும். கணவனே மனைவியின் கர்பத்தில் நுழைந்து மகனாக வெளிப்படுகிறான். எனவேதான் மனைவி என்பவள் ஜெயா என்று அழைக்கப்படுகிறாள். முன்னோர்களின் சந்ததியைக் காப்பவன் மகனே. முன்னோர்களை புத் என்ற நரகத்தல் விழாமல் காப்பாற்றுபவன் மகனே. அதனால்தான் பிரம்மன் மகனை புத்திரன் என்றான்.

வீட்டை நிர்வகிப்பவளும், குழந்தைகளைப் பெறுகிறவளும், கணவனுக்காக தன் வாழ்வை அர்ப்பணிப்பவளும், கணவனுக்கு உண்மையாக இருப்பவளும், ஆணின் பாதியாக இருப்பவளும், சிறந்த நண்பனாக இருப்பவளும் மனைவிதான். மனைவி என்பவள் மூன்று விஷயங்களுக்கு ஆதாரத் தேவையாக இருக்கிறாள். வாழ்க்கையின் முடிவில் நண்பனாக இருப்பது மனைவிதான். மனைவி இருப்பவனே சடங்குகளைச் செய்ய முடியும். மனைவி இருப்பவர்களே இல்லற வாழ்வை வாழ முடியும். மனைவி இருப்பவர்களே சந்தோஷமாக இருக்க முடியும். மனைவி இருப்பவர்களே அதிர்ஷ்டம் உடையவர்கள். தனிமையில் நண்பனாகவும், மதச்சடங்குகளில் தந்தையாகவும், துயரத்தில் தாயாகவும் இருந்து இனிமையாகப் பேசுபவள் மனைவியே. துன்பத்தில் உழலும் கணவனுக்கு புத்துணர்வு தருபவள் மனைவியே. ஒரு மனிதன் தன் மனைவியை நம்பவேண்டும். அப்போதே அவள் விடுதலைக்கான சிறந்த உபகரணமாக இருப்பாள்.

கணவன் இறக்கும் தருவாயில், அவனுக்குத் துணையாக இருப்பவள் அவனது உண்மையான மனைவி மட்டுமே. அவனது எல்லாத் துன்பங்களிலும் மனைவியாக இருப்பவள் அவள்தான். கணவனுக்கு முன்பே இறந்துபோனாலும், கணவனுடைய ஆத்மாவிற்காக காத்திருப்பவள் மனைவிதான். கணவன் முன்பே இறந்து போனால், உடனடியாக அவன் பின்னாலேயே செல்பவளும் அவள்தான். அரசனே! இதன் காரணமாகவே ஆண்கள் திருமணத்தை நாடுகிறார்கள். அறிவார்ந்தவர்கள் ஒரு ஆண், அவனுக்கு அவனே மகனாகப் பிறக்கிறான் என்று சொல்வார்கள். எனவே ஒரு ஆண் தனது தாயைப் போலவே தனது மகனுக்குத் தாயாக இருக்கிறான். தனக்கு மனைவி மூலமாகப் பிறந்த மகனில் ஒரு மனிதன் தன்னையே காண்கிறான். அதன் மூலம் மனம் மகிழும் அவன் சொர்க்கத்தை அடைவதற்கான நற்குணமுள்ள மனிதனாகிறான். அன்பு, ஆனந்தம், ஒழுக்கம் என அனைத்தும் மனைவியைச் சார்ந்தே இருப்பதால், கோபத்தில் கூட ஒருவன் தன் மனைவியிடம் கடுஞ் சொற்களை சொல்லக்கூடாது. மனைவி என்ற புனிதமான நிலத்தில் ஒரு கணவன் மீண்டும் பிறக்கிறான். மனைவி இல்லாமல் சாதுக்கள் குழந்தைகளை அடைய முடியாது.

மகன் தன்னுடைய அழுக்கடைந்த கால்களால் தந்தையைத் தழுவும்போது, ஒரு தந்தை அடையும் இன்பத்திற்கு ஈடான இன்பம் வேறுண்டோ? தங்களை காண விருப்பத்துடன் வந்து, தங்களை ஆசையோடு பார்த்து நிற்கும் அவனிடம் தாங்கள் சிடுசிடுப்பதும் அவனைப் புறக்கணிப்பதும் ஏன்? சிற்றெரும்புகள் கூட தங்களது முட்டைகளை உடையாமல் எடுத்துச் செல்கின்றன. நீங்களோ தர்மத்தின் வழிகளை நன்கு கற்றவர். நீங்கள் உங்களுடைய சொந்த மகனை ஆதரிக்காதது ஏன்? மலர்களையும், பெண்களையும், தண்ணீரையும் தொடுவதில் கிடைக்கும் இன்பத்தை விட தன்னுடைய சொந்தக் குழந்தையைத் தீண்டுவதில் கிடைக்கும் இன்பம் பேரின்பமன்றோ? இரண்டு கால் உயிரினங்களில் சிறந்தவன் அந்தணன். நான்கு கால் உயிரினங்களில் சிறந்தது பசு. சிறந்த அனைத்திலும் மேலானவர் குரு. தொட்டுணர்வதில் மகனே மேலானவன். இந்த அழகான மகன் தங்களைத் தொட்டுத் தழுவட்டும்.

எதிரிகளை விரட்டியடிப்பவரே! அரசனுள் தேவனே! உங்களுடைய மறைவால் நான் இவனை மூன்று வருடங்களாக வளர்த்தேன். நான் இவனை ஈன்ற போது வானத்திலிருந்து அசரீரி, “இவன் நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வான்” என்றது. இவனை பிற ஊர்களுக்கு எடுத்துச் செல்கையில், அங்குள்ளவர்கள் இவனை வாஞ்சையுடன் தங்கள் மடியில் அமரச்செய்து, அளவற்ற இன்பம் எய்தினார்கள். இவனது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது அந்தணர்கள் வேதங்களிலிருந்து, “நீ எனது கால்களிலிருந்து பிறந்தாய். நீ எனது இதயத்திலிருந்து பிறந்தாய். நீ எனக்குள் மகனாக இருக்கிறாய். நீ நூறு இலையுதிர் காலத்திற்கு வாழ வேண்டும். எனது வாழ்வும் சந்ததியும் உன்னைச் சார்ந்தே இருக்கிறது. ஆதலால் மகனே நீ நூறு இலையுதிர் காலத்திற்கு மகிழ்ச்சியாக வாழவேண்டும்” என்று சொன்னார்கள்.

அரசனே! நீ உன்னுடைய மகனை, தெளிந்த ஏரியில் பிரதிபலிக்கும் உன்னுடைய இரண்டாவது சுயமாகப் பார். வேள்வித் தீயை இல்லறத் தீ எரியச்செய்வதைப் போல இவன் உன்னிடமிருந்து பிறந்திருக்கிறான். நீ ஒருவனாக இருந்து, இப்போது இருவனாக பிரிந்திருக்கிறாய். நான் முன்னொரு ஜன்மத்தில் என்ன பாவம் செய்தேனோ? எனது குழந்தைப் பருவத்தில் எனது தாய் மேனகையாலும் தந்தை விஸ்வாமித்திராலும் நான் கைவிடப்பட்டேன். இப்போதோ உங்களால் கைவிடப்படுகிறேன். உங்களால் கைவிடப்பட்ட நான் என்னுடைய இருப்பிடம் செல்வதற்கு தயாராக இருக்கிறேன். ஆனால் இந்தக் குழந்தையைக் கைவிடாதீர்கள், இது உங்களது சொந்த மகன்.”

இவ்வாறு சகுந்தலை தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்தாள். அதைக்கேட்டு துஷ்யந்தன் கோபமடைந்து சகுந்தலையிடம், “சகுந்தலா! உனக்குப் பிறந்த மகன் என்னுடையவன் என்பது எனக்கு எப்படித் தெரியும்? பெண்கள் பொய்யர்கள். உன்னுடைய வார்த்தைகளை யார் நம்புவது? உன்னுடைய தாய் மேனகை ஒரு விலைமகள். கருணையற்ற அவள், வாடிய மலரென, உன்னை இமயமலைச் சரிவில் விட்டுவிட்டாள். உனது தந்தை விஸ்வாமித்திரனும் கருணையற்றவன். ஷத்திரிய குலத்தில் பிறந்த அவன் ஆசைகொண்டு, வெறியால் அந்தணன் ஆனவன். மேனகை அபசரஸில் சிறந்தவள், உனது தந்தை அந்தணர்களில் சிறந்தவர் எனில், நீ ஏன் விலைமகளைப் போலப் பேசுகிறாய்? அப்படிப் பேசும் நீ எப்படி அவர்களுக்கு மகளாக முடியும்? நீ இத்தகைய மரியாதைக் குறைவான வார்த்தைகளை என் முன்னிலையில் பேசுவதற்கு உனக்கு வெட்கமாக இல்லையா? ஓ சூனியத் துறவியே! சென்று விடு. முனிவர்களில் சிறந்த விஸ்வாமித்திரர் எங்கே? அபசரஸில் சிறந்த மேனகை எங்கே? நீ எங்கே? உனது மகன் ஆஜானுபாகுவாக இருக்கிறான். அவன் சிறுவனாக இருந்தபோதும் ஆற்றல் மிக்கவனாக இருக்கிறான். இவ்வளவு குறுகிய காலத்தில் அவன் எவ்வாறு சால மரத்தின் அடிமரம் போல வளர்ந்திருக்க முடியும்? கீழ்த்தரமான குலத்தில் பிறந்த நீ ஒரு விலைமகளைப் போல பேசுகிறாய். மேனகை தன்னுடைய காமத்தினால் மட்டுமே உன்னை ஈன்றிருக்கிறாள் என்பது தெரிகிறது. நீ சொன்ன எதுவுமே எனக்குத் தெரியாது. நீ யாரென்றும் எனக்குத் தெரியாது. தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடு” என்று கோபமாகப் பேசினான்.


“அரசனே! அடுத்தவர்களின் தவறு கடுகைப் போல சிறியதாக இருப்பினும் அதை நீ பெரியதாகப் பார்க்கிறாய். ஆனால் உன்னுடைய தவறு வில்வமரத்தைப் போல பெரியதாக இருப்பினும் அதைக் காணத் தவறுகிறாய். மேனகை முப்பது தேவகன்னிகையில் ஒருவள். அவர்கள் அனைவரிலும் அவளே சிறந்தவள். ஓ துஷ்யந்தா! என்னுடைய பிறப்பு உன்னுடைய பிறப்பை விடவும் மதிப்புடையது. நீ மண்ணை மட்டுமே ஆள்பவன் ஆனால் நான் விண்ணை ஆள்பவள். எனக்கும் உனக்கும் இடையிலான வேறுபாடு கடுகுக்கும் மலைக்கும் உள்ளது போல. எனவே என்னுடைய ஆற்றலை புரிந்துகொள். நான் இந்திரன், குபேரன், யமன், வருணன் இவர்களிடம் செல்வேன். உன்னிடம் உள்ள வெறுப்பால் அல்ல, என்னுடைய நிலையை விளக்க. எனவே என்னை மன்னித்து நான் சொல்வதைக் கேள். ஒரு அருவருப்பான முகம் கொண்ட ஒருவன், கண்ணாடியில் தன் முகத்தைப் பார்க்கும் வரை தானே அழகானவன் என நினைப்பான். ஆனால் கண்ணாடியில் தன் முகத்தை என்று பார்க்கிறானோ அப்போதே தனக்கும் பிறருக்கும் உள்ள வேறுபாட்டை அறிவான். அழகாக இருக்கும் ஒருவன் ஒருபோதும் பிறரை தரக்குறைவாகப் பார்க்கமாட்டான். மற்றவர்களை அவதூராகப் பேசுபவன் தீயவற்றைப் பேசுவதில் இன்பம் காண்பவன். அவன் பிறரிடம் எப்போதும் தவறானவற்றையே காண்பான் பன்றி மலத்தைக் கிளறுவது போல. ஆனால் அன்னம் எப்போதும் தண்ணீரிலிருந்து பாலையே தேடும். அது போலவே ஒரு அறிவுள்ளவன் பிறரது பேச்சிலிருந்து நல்லவற்றையே நாடுவான்.

உண்மையான மனிதன் எப்போதும் அடுத்தவர்களின் துயரத்தை தன் துயரமாக பாவிப்பான். ஆனால் பிறரோ அந்த துன்பத்தில் இன்பம் காண்பார்கள். நல்லவர்கள் எப்போதும் அறிவாளிகளுக்கு மரியாதை செலுத்துவதில் மகிழ்வார்கள். ஆனால் முட்டாள்கள் நல்லவர்களை தரம்தாழ்த்துவதிலேயே மகிழ்வார்கள். நல்லவர்கள் எதிலும் நல்லவற்றையே கண்டு மகிழும்போது, முட்டாள்கள் தீயவற்றைக் காண்பதிலேயே இன்பமடைவார்கள். பிறர் சொற்களால் காயம்பட்ட போதும் நல்லவர்கள் அவற்றை அவர்களுக்குத் திருப்பிச் சொல்லமாட்டார்கள். தீயவர்கள் நல்லதை தீயவையாக பிரதிநிதிப்படுத்துவைப் போல இந்த உலகத்தில் கேலிக்குரியது வேறோன்றில்லை. 

கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, தர்மத்திலிருந்து விலகியவர்களைக் கொடிய விஷநாகமென விலக்குவர். தன்னைப் போன்ற ஒருவனை மகனாகப் பெற்றும், அவனை ஏற்றுக்கொள்ளாதவன், மேலுலகத்தை அடையமாட்டான். கடவுள் அவனுடைய அபிவிருத்தியை அழிப்பார். எனவே ஒருவன் அவன் மகனை புறக்கணித்தல் கூடாது. தன் மனைவியிடமிருந்து மட்டுமில்லாது, வேறு வகையில் மகனைப் பெறும் ஐந்து முறைகளை மனு கூறியிருக்கிறார். பரிசாகப் பெறுதல், வாங்குதல், வளர்த்தல், தத்து எடுத்தல், பிற பெண்களிடம் பெறுதல் ஆகியன. ஒருவனுடைய புகழுக்கும் தர்மத்திற்கும் உறுதுணையாக இருந்து அவன் உள்ளத்தை மகிழ்விப்பவன் மகனே. முன்னோர்களை நரகத்திலிருந்து விடுவித்து அழைத்துச் செல்லும் தர்மம் எனும் படகாக மகனே இருக்கிறான். எனவே அரசனே நீ உன்னுடைய மகனைக் கைவிடுவது நல்லதல்ல. உண்மையையும், தர்மத்தையும் காப்பது போல நீ உன் மகனையும் காத்திடு.

நூறு கிணற்றை விட ஒரு குளம் மேலானது. நூறு குளங்களை விட ஒரு யாகம் செய்வது மேலானது. ஆனால் நூறு யாகங்களை விட ஒரு மகன் மேலானவன். நூறு மகன்களை விட உண்மை மேலானது. ஆயிரம் அஸ்வமேத யாகங்களையும், உண்மையையும் தராசில் நிறுத்திப் பார்த்தால் உண்மையே அதிக எடையுடையதாக இருக்கும். அனைத்து வேதங்களைக் கற்பதும், அனைத்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதும் உண்மைக்குச் சமமானது. உண்மையை விடவும் மேலான உயர்வான தர்மம் பிறிதில்லை. பொய்யை விடக் கொடுமையான தீமை வேறில்லை. அரசனே! உண்மையே சிறந்த ஆன்மா. உண்மையே மிகச்சிறந்த தவம். எனவே நீ உன்னுடைய சத்தியத்திலிருந்து விலகாதே. நீயும் உண்மையும் இணைந்திருப்பதே முறை. இருந்தபோதும், நீ பொய்யோடு இணைந்தும், என் வார்த்தைகளை நம்பாமலும் இருப்பாயானால் நான் இங்கிருந்து செல்கிறேன். அதன் பிறகு நான் எப்போதும் உன்னுடைய உறவை நாட மாட்டேன். ஆனால் துஷ்யந்தா, நீ இறந்த பிறகு, என்னுடைய மகன் இந்த மூவுலகங்களையும் ஆள்வான்” என்று சொன்ன சகுந்தலை அங்கிருந்து புறப்பட ஆயத்தமானாள்.

அப்போது, தன்னுடைய மதகுருவும், அமைச்சர்களும், ஏனைய குருமார்களும் சூழ வீற்றிருந்த துஷ்யந்தனிடம் வானத்திலிருந்து அசரீரி ஒன்று பேசியது.


“ஓ துஷ்யந்தா! நீரை தக்கவைக்கும் பாத்திரம் தாய் மட்டுமே. தந்தையிடமிருந்து பிறந்த மகன் அவனுக்கு ஒரு தந்தையே. எனவே உனது மகனை ஏற்றுக்கொள். சகுந்தலையையும் புறக்கணிக்காதே. யமனின் இருப்பிடத்திற்குச் செல்வதைத் தடுக்கும் ஆற்றல் வித்தை தன்னுள் அடக்கிய மகனுக்கே உண்டு. இந்தக் கருவை உருவாக்கியவன் நீயே. சகுந்தலை உண்மையே பேசினாள். மனைவி ஒரு மகனைப் பெறுவதற்கு தன்னுடலை இரண்டாக பிரித்துக்கொள்கிறாள். எனவே சகுந்தலையிடமிருந்து பிறந்த உன்னுடைய மகனை காப்பாயாக. தனது சொந்த மகனை கைவிட்டு வாழ்வதென்பது மிகப்பெரிய துரதிருஷ்டமாகும். புரூ வம்சத்து வழித்தோன்றலே! ஆகையால் உயரான்மா கொண்ட சகுந்தலை துஷ்யந்தன் மகனை சந்தோஷமாக ஏற்றுக்கொள். என்னுடைய வார்த்தைகளை ஏற்று நீ உன் மகனை ஏற்றுக்கொள்வதால் அவன் பரதன் என்று அறியப்படுவான்.”

அசரீரியின் குரலைக் கேட்ட துஷ்யந்தன் மிக்க மகிழ்வுற்றான். அவன் தனது அமைச்சர்கள் குருமார்களிடம், “அனைவரும் கடவுளின் தூதன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டீர்கள். இவன் என்னுடைய மகன்தான் என்பதை நான் நன்கறிவேன். ஆனால் அவளது வார்த்தைகளைக் கொண்டு மட்டுமே நான் அவனை மகனாக ஏற்றுக்கொண்டால், மக்கள் அனைவரின் மனதிலும் சந்தேகம் எழும். எனவே அவன் பரிசுத்தமானவனாக இருக்கமாட்டான்” என்ற துஷ்யந்தன் அசரீரியின் குரலால் அனைத்து சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தான். மிக்க மகிழ்ச்சியடைந்த அவன் தன் மகனை ஏற்றுக்கொண்டான்.

தன் மகனின் உச்சி முகர்ந்த துஷ்யந்தன் அவனை அன்போடு தழுவிக்கொண்டான். அந்தணர்கள் தங்களது வாழ்த்துக்களை அவனுக்குத் தெரிவிக்க, கவிஞர்கள் கவிதையால் அனைப் புகழ்ந்தார்கள். தன்னுடைய சொந்த மகனைத் தொடுவதால் பெறும் பேரின்பத்தை துஷ்யந்தன் அனுபவித்தான். சகுந்தலையை முறைப்படி மரியாதை செய்த துஷ்யந்தன் தர்மத்தின் படி அவளையும் ஏற்றுக்கொண்டான். அவளை அமைதிப்படுத்தும் விதமாக அளிடத்தில், “சகுந்தலையே! நான் உன்னோடு உறவு கொண்டதை இந்த மக்கள் அறியமாட்டார்கள். எனவேதான் நான் உன்னுடன் விவாதம் செய்தேன். நான் உன்னிடம் உறவு கொண்டது நீ ஒரு பெண் என்பதால்தான் என்று மக்கள் இயல்பாகவே நினைப்பார்கள். எனவே நான் ஏற்றுக்கொள்ளும் என் மகன் பரிசுத்தமானவனாக இருக்கமாட்டான். உன்னை நான் இவர்களுக்கு எவ்வாறு விளங்கவைப்பது என்று யோசித்தேன். அன்பானவளே! நீ என்னிடத்தில் கோபத்தில் சொன்ன வார்த்தைகள் அனைத்தையும் நான் மன்னித்து விட்டேன். நான் உன்னை நேசிக்கிறேன்” இவ்வாறு சொன்ன துஷ்யந்தன் அவளை ஆடை ஆபரணங்களால் அலங்கரிக்கச் செய்து உணவும் தண்ணீரும் கொடுத்தான். அதன் பிறகு துஷ்யந்தன் சகுந்தலையின் மகனை தன்னுடைய வாரிசாக அறிவித்து அவனுக்கு பரதன் என்ற பெயரைச் சூட்டினான்.

அன்றிலிருந்து பரதனின் புகழ் சக்கரம் உலகம் முழுதும், பிரகாசமான இடியுடன், தெய்வீகம் பொருந்தியதாக, வெல்லமுடியாததாக சுழன்றது. உலகத்தின் அனைத்து நாடுகளின் அரசர்களையும் வென்று அவர்களை தன்னுடைய குடையின் கீழ் கொண்டுவந்தான். தர்மத்தின் பாதையில் நடந்து மேலான புகழை அடைந்தான். ஆற்றல் மிகுந்த அவன் சக்கரவர்த்தி என்று அழைக்கப்பட்டான். கடவுளர்களான இந்திரன், வாயுவைப் போன்ற எண்ணற்ற யாகங்களைச் செய்தான். தன்னுடைய யாகங்களுக்கு கண்வமுனிவரையே தலைமை குருவாக நியமித்து, அளவற்ற தானங்களைச் செய்தான். அவன் செய்த அஸ்வமேத யாகத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான பசுக்களை தானமாகக் கொடுத்தான். பரத வம்சத்தின் புகழ் பரதனிடமிருந்தே வளர்ந்தோங்கியது. அவனைப் பின்பற்றியவர்கள் அனைவரும் பரத வம்சத்தைச் சேர்ந்தவர்களாகவே அறியப்பட்டனர். இவ்வாறு பரத வம்சத்தில் சிறந்த ஆற்றல் மிக்க பல அரசர்கள் தோன்றினர். அவர்களின் பெயர்களைப் பட்டியலிடுவது அசாத்தியமானது. அவர்கள் அனைவரின் தலைவன் வாய்மையும் நேர்மையும் உடைய பரதனே.

Related Posts Plugin for WordPress, Blogger...