June 12, 2017

20. சகுந்தலை

பர்ணசாலையில் நுழைந்த துஷ்யந்தன் தான் காணவிரும்பிய கண்வமுனிவர் அங்கில்லாததைக் கண்டான். எனவே அவன் உரத்த குரலில், “இங்கே யார் இருப்பது?” என்று கேட்டான். அவன் குரலைக் கேட்டதும் உள்ளேயிருந்து இளம் பெண்ணொருத்தி வெளிப்பட்டாள். இலக்குமியைப் போல அழகுடனிருந்த அவள் துறவிகளுக்குரிய காவியுடை உடுத்தியிருந்தாள். துஷ்யந்தனைக் கண்ட அந்த கருப்பு விழியழகி, அவனை வரவேற்று தக்க ஆசனம் கொடுத்து அமரச் சொன்னாள். அதன் பிறகு அவனுடைய நலத்தைப் பற்றி விசாரித்தாள். அவனை முறைப்படி உபசரித்து, தான் அவனுக்காக என்ன செய்யவேண்டும் என்று கேட்டாள். அந்தப் பெண்ணின் பண்பைக் கண்டு மகிழ்ந்த துஷ்யந்தன், களங்கமற்ற, இனிய வார்த்தைகள் பேசிய அவளிடம், “கண்வமுனிவரைக் கண்டு நான் என்னுடைய வணக்கத்தைத் தெரிவிக்க வந்தேன். அவர் எங்கு சென்றார்?” என்று கேட்டான். “என்னுடைய தந்தை பழங்கள் சேகரிக்கச் சென்றுள்ளார். சற்று நேரம் பொறுங்கள். அவர் இப்போது வந்துவிடுவார்” என்றாள் அவள்.

திகைப்பூட்டும் அழகும், வசீகரமான புன்னகையும், அழகிய இடையும் கொண்ட அந்த இளமங்கையை வியப்புடன் நோக்கினான் துஷ்யந்தன். அவளது உணர்வோடு கலந்த எளிமையும் பணிவும், அவளது அழகையும் இளமையையும் பன்மடங்கு கூட்டியது. துஷ்யந்தன் அவளிடம், “அழகிய இடையுடையவளே! நீ யார்? அழகும் பண்பும் நிறைந்திருக்கும் நீ எங்கிருந்து வந்தாய்? முதல் பார்வையிலேயே நீ என்னுடைய இதயத்தை திருடிவிட்டாய். உன்னைப் பற்றிய விவரங்களை நான் அறிய விரும்புகிறேன். தயவுசெய்து சொல்” என்றான். அந்த இளம்பெண் புன்னகையுடன் தன்னுடைய இன்குரலில், “துஷ்யந்தனே! நான் தவத்திற் சிறந்த கண்வ முனிவரின் மகள் சகுந்தலை” என்றாள். அதற்கு துஷ்யந்தன், “உலகம் முழுதும் வணங்கத்தக்க கண்வமுனிவர் ஒரு பிரம்மச்சாரி என்பதை யாவரும் அறிவர். அப்படியிருக்க நீ எவ்வாறு அவருக்கு மகளாக முடியும்? என் மனதிலிருக்கும் இந்த ஐயத்தைப் போக்குவாயாக” என்று கேட்டான்.

“அரசனே! முன்பொரு சமயம் என்ன நடந்தது என்பதையும், நான் எவ்வாறு அவரது மகளானேன் என்பதையும், நான் அறிந்தது எப்படி என்பதைச் சொல்கிறேன். ஒரு சமயம் இங்கே வந்த முனிவர் ஒருவர் என்னுடைய பிறப்பு குறித்து கேள்வி கேட்டபோது கண்வமுனிவர் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேட்டேன். அதைத் தங்களிடம் சொல்கிறேன்” என்று சகுந்தலா தான் அறிந்ததை துஷ்யந்தனிடம் சொன்னாள்.

முன்பொரு சமயம், விஸ்வாமித்திர முனிவர் கடுமையான தவத்தை மேற்கொண்டிருந்த காலத்தில், தனது இந்திரப் பதவிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்று அஞ்சிய இந்திரன் தேவகன்னி மேனகையை அழைத்து அவளிடம், “தெய்வீக மங்கையரில் நீயே சிறந்தவள். நான் என்ன சொல்கிறேன் என்பதைக் கவனமாகக் கேட்டு, எனக்கு நலம் தரும் அந்தக் காரியத்தைச் செய்” என்றான். சூரியனின் பிரகாசமான ஒளியைப் போல தேஜஸ் உடையவர் தவத்தில் சிறந்த விஸ்வாமித்திர முனிவர். அவர் மேற்கொண்டிருக்கும் கடுந்தவத்தைக் கண்டு என் உள்ளம் நடுங்குகிறது. மெல்லிடை கொண்ட மேனகையே! இனி விஸ்வாமித்திரர் உனது பொறுப்பு. அற்புதமான தவத்தை மேற்கொண்ட அவரது ஆன்மா கடுந்தவத்தில் நிலைத்துவிட்டது. எனவே அவரிடம் சென்று அவரை வஞ்சித்து, அவருடை தவத்திற்கு இடையூறு ஏற்படுத்தி, எனக்கு நன்மையைச் செய். உன்னுடைய அழகு, இளமை, சிரிப்பு, மொழி, இவற்றின் இனிமையால் அவரை அவரது தவத்தைக் கைவிடும்படி செய்” என்றான்.

இந்திரன் சொல்கேட்ட மேனகா, “அந்த தவஞானி தவத்தின் ஆற்றல் மிக்கவர். மேலும் அவர் ஒரு முன்கோபி என்பதைத் தாங்கள் அறிவீர்கள். அவரது ஆற்றலும், தவவல்லமையும் தங்களையே அச்சப்பட வைக்கையில் நான் எம்மாத்திரம்? அவர் ஆற்றல் மிகுந்த வசிட்ட முனிவரையே, அவரது மகனை அவன் ஆயுட்காலத்திற்கு முன்பே அகால மரணம் அடையச்செய்து, துன்பத்தில் ஆழ்த்தியவர். அவர் ஒரு ஷத்திரியராக இருந்தபோதும் தன்னுடைய தவ வல்லமையால் அந்தணரானவர். அவர் தன்னுடைய தவத்தை தடங்களின்றி செய்யும் பொருட்டு, யாரும் எளிதில் கடக்க முடியாத ஆறு ஒன்றை உருவாக்கியவர். அந்தப் புனித நதி இன்றும் கௌசிகி என்ற பெயரால் அனைவராலும் அறியப்படுகிறது.

இப்படிப் பட்டவர் முன்பு செல்ல நான் அஞ்சுகிறேன். நான் அவருடைய கோபத்தால் அழியாதிருப்பது எப்படி என்று சொல்லுங்கள். தன்னுடைய ஆற்றலால் உலகத்தை அழிக்கக்கூடியவர் அவர். தனது ஒரு உதையால் இந்த உலகத்தை பூகம்பத்தால் நடுங்கச் செய்பவர் அவர். மேரு மலையை தூக்கி சுழற்றக் கூடிய ஆற்றல் வாய்ந்தவர் அவர். என்னைப் போன்ற ஒரு பெண் அத்தகைய சக்தி கொண்டவரை, ஐம்புலன்களை அடக்கியவரை எவ்வாறு தொடமுடியும்? அவரது வாய் தீ ஜூவாலைக்கு நிகரானது. சூரிய சந்திரர்களே அவருடை கருவிழிகள். அவரது நாக்கே யமன். அவரைக் கண்டு அனைவருமே அஞ்சுகிறார்கள். என்னைப் போன்ற ஒரு அப்பாவி எவ்வாறு அச்சமற்று இருக்க முடியும்? இருந்தபோதும் தங்களது கட்டளையை ஏற்று அங்கு செல்கிறேன். உங்களது பாதுகாப்பின் பேரில், உங்கள் விருப்பத்தை நிறவேற்ற வழி ஒன்றைக் கண்டுபிடிக்கிறேன். நான் அவர் முன்னே நிற்கையில் வாயுதேவனை எனது ஆடைகளை களையச்சொல்லுங்கள். தங்கள் உத்தரவின்படி மன்மதனும் எனக்கு உதவ அங்கு வரட்டும். நான் அவரை உணர்ச்சிவயப் படும்படி செய்யும்போது, இனிய நறுமணம் மிக்க தென்றல் காற்று வீசட்டும்” என்று சொன்ன மேனகை, விஸ்வாமித்திரர் இருக்குமிடம் சென்றாள்.

வாயுவை அழைத்த இந்திரன், அவனை மேனகையுடன் செல்லுமாறு கட்டளையிட்டான். அழகிய இடை உடைய மேனகை விஸ்வாமித்திரர் இருக்குமிடம் சென்று அவர் குடிலுக்குள் நுழைந்தாள். தன்னுடைய அனைத்துப் பாவங்களையும் தவத்தில் எரித்த பிறகும், அவர் தொடர்ந்து தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவருக்கு மரியாதை செலுத்திய பிறகு அவள் அவர் முன்னிலையில் விளையாடினாள். அப்போது வாயு அவளது ஆடைகளைக் களைந்து, நிலவைப் போன்ற அவளது வெண்ணிற தேகத்தை வெட்ட வெளிச்சமாக்கினான். அப்போது அழகிய மேனகை, உடையைக் கைப்பற்றும் பாவனையில் தரையில் விழுந்தாள். அவள் உடையைப் பிடிக்க முயலுகையில், முனிவர்களில் சிறந்தவரான விஸ்வாமித்திரர், அவளது பளிங்கு போன்ற மேனியை ஆடையின்றி பார்த்தார். அவளது அழகைக் கண்டு காமுற்று தன் நிலை மறந்த அவர், அவளுடன் கூட விரும்பினார். அவர் அவளை அழைக்க, அவளும் அவரது அழைப்பை ஏற்றுக் கொண்டாள்.

அவர்கள் இருவரும் தாங்கள் விரும்பிய வண்ணம் வெகுகாலம் சல்லாபத்தில் திளைத்தனர். அவர்களுக்கு அது ஒரு நாள் என்றே தோன்றியது. அவர் மூலமாகவே மேனகைக்கு சகுந்தலை பிறந்தாள். மாலினி நதிக்கரையில் மேனாக சகுந்தலையை பெற்றெடுத்தாள். அதன் பிறகு தனது கடமை முடிந்த மேனகை குழந்தையை அங்கேயே விட்டுவிட்டு இந்திரனிடம் சென்றாள்.

அந்தக் குழந்தை அங்கேயே கிடக்க, சிங்கங்களும் புலிகளும் அங்கே வந்தன. அதைக் கண்ட பறவை இனங்கள் அனைத்தும் அந்தக் குழந்தையைச் சுற்றி பாதுகாத்தன. நீராடுவதற்காகச் சென்ற நான் அவளை எடுத்து வந்து என்னுடைய மகளாக வளர்த்தேன். புனித நூல்படி மூன்று வகையான தந்தையர்கள் இருக்கிறார்கள். உடல் கொடுத்தவர்கள், பாதுகாத்தவர்கள் மற்றும் உணவு கொடுத்தவர்கள் என்ற மூன்று வகையினர். தனிமையில் பறவைகள் சூழ காட்டில் இருந்ததால் அவளுக்கு சகுந்தலை என்று பெயரிட்டேன். இவ்வாறே சகுந்தலை எனது மகளானாள். களங்கமற்ற அவளும் என்னையே அவளுடையய தந்தையாகக் கருதுகிறாள்.

இவ்வாறாகவே அந்த முனிவரிடம் என்னுடைய பிறப்பைப் பற்றி கூறினார். நானாகவே அவற்றை அறியவில்லை. நான் என்ன கேட்டேனோ அதைத் தங்களிடம் சொல்லிவிட்டேன்” என்று சகுந்தலை துஷ்யந்தனிடம் அனைத்தையும் கூறினாள்.

“இளவரசியே! நீ நன்றாக பேசினாய். நீ என்னுடைய மனைவியாக வேண்டும். நான் உனக்கு என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல். அழகானவளே! இன்று நான் உனக்கு, தங்க மாலை, ஆடைகள், தங்க காதணிகள், மின்னும் வைரங்கள், பல்வேறு நாடுகளிலிருந்து ஆபரணங்கள், தங்க நாணயங்கள் இவை அனைத்தையும் உனக்குப் பரிசாகக் கொடுக்கிறேன். இன்றிலிருந்து என்னுடைய முழு ராஜ்யமும் உன்னுடையது. என்னுடைய மனைவியாகு! அழகிய தொடைகளை உடையவளே! காந்தர்வ முறைப்படி என்னை மணந்துகொள். மணமுடிப்பதில் காந்தர்வ மணமே சிறந்தது என்று சொல்லப்படுகிறது” என்றான் துஷ்யந்தன்.

“அரசனே! என்னுடைய தந்தை உணவிற்காக பழங்களைச் சேகரிக்கச் சென்றிருக்கிறார். அவர் வரும்வரை காத்திருக்கலாம். அவர் வந்ததும் என்னை உனக்குத் தருவார்” என்றாள் சகுந்தலை.

அவள் தயக்கத்தைக் கண்ட துஷ்யந்தன், “களங்கமற்றவளே! என்னை நீயே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். நான் உனக்காகவே இங்கே நிற்கிறேன். என்னுடைய இதயம் உன்னிலேயே லயித்திருக்கிறது. ஒருவனுக்கு அவனைவிடச் சிறந்த நண்பன் இருக்க முடியாது. ஒருவன் அவனுடைய சுயத்தையே சார்ந்திருக்க வேண்டும். ஆகவே எது தர்மம் என்பதை அறிந்து உன்னை நீயே பிறருக்குக் கொடுக்கலாம். பிரம்ம, தெய்வ, அர்ஷ, பிரஜாபத்ய, அசுர, காந்தர்வ, ராட்சத, பைசாச என்ற எட்டு வகையான மணங்களை தர்மம் அனுமதிக்கிறது. சுயம்புவாகத் தோன்றிய பிரம்மனின் வழித்தோன்றலான மனு, இவற்றின் தர்மங்களை முறைப்படி விவரித்துள்ளார். அந்த தர்மத்தின்படி முதல் நான்கும் அந்தணர்களுக்கும், முதல் ஆறும் சத்தியர்களுக்கும் உரியதாகும். வைசியர்களுக்கும் சூத்திரர்களுக்கும் அசுர முறை உரியது. அரசர்களுக்கு ராட்சத முறையும் அனுமதிக்கப் படுகிறது. இறுதியான ஐந்தில் மூன்று அவர்களுக்கு ஏற்புடையது ஆனால் மற்ற இரண்டும் ஏற்புடையதன்று. பைசாச, அசுர முறைகள் அவர்களுக்குரியது அல்ல. தர்மத்தில் சொல்லப்பட்ட இந்த முறைகளை எவரும் கடைபிடிக்கலாம். காந்தர்வ, ராட்சத முறைகள் ஷத்திரியர்களுக்கு உரியவை என்பதால் நீ அஞ்சத் தேவையில்லை. இவற்றில் ஒன்று அல்லது இரண்டுமே நமக்கு ஏற்றது என்பதில் நீ சந்தேகம் கொள்ளத்தேவையில்லை. நான் உன் மீது மிகவும் விருப்பம் கொண்டுள்ளேன். நீயும் அவ்வாறே என நம்புகிறேன். காந்தர்வ முறைப்படி தாரளமாக நீ என்னுடைய மனைவியாகலாம்” என்று எடுத்துரைத்தான்.

“புரூ வம்சத்தவரே! இந்த வழி தர்மத்தில் சொல்லப்பட்டிருக்கிறது எனில் நான் உன் மனைவியாக சம்மதிக்கிறேன். நான் என்னை உன்னிடம் கொடுக்கும் முன், எனக்கு சில நிபந்தனைகள் இருக்கின்றன. நமக்கிடையான இந்த ரகசிய ஒப்பந்தத்திற்கு நீ ஓப்புக்கொள்ள வேண்டும். ஓ துஷ்யந்தா! எனக்குப் பிறக்கும் என்னுடைய மகனே உனக்குப் பிறகு அரசாள வேண்டும் என நீ உண்மையாக சத்தியம் செய்ய வேண்டும். இதை ஒப்புக்கொள்வதாக இருந்தால் நீ என்னோடு கூடலாம்” என்றாள் சகுந்தலை.

அதைக்கேட்ட துஷ்யந்தன் சற்றும் யோசிக்காமல், “அழகிய சிரிப்புடையவளே! அது அப்படியே ஆகட்டும். நான் உன்னையும் எனது தலைநகரத்துக்கு கூட்டிச் செல்கிறேன். நீ என்ன விரும்பினாயோ அதை உண்மையாகச் செய்வேன் என்பது சத்தியம்” என்று சொல்லி அவள் கரம் பிடித்தான். களங்கமில்லாத நடையோடு முறையான சடங்குகளோடு அவள் அவனை ஏற்றாள்.

அதன் பிறகு அங்கிருந்து கிளம்பிய துஷ்யந்தன் திரும்பவும் அவளிடம், “நான்கு வகையான படைகளை உனது பாதுகாப்பிற்கு அனுப்பி வைக்கிறேன். அவற்றின் ஆரவாரத்தோடு உன்னை எனது அரண்மனைக்கு எடுத்துச் செல்கிறேன்” என்று உறுதியளித்து அகன்றான். அவ்வாறு சென்ற அவன் கண்வ முனிவரை நினைத்து சஞ்சலமடைந்தான். “அவர் இவற்றை அறியும்போது, தன்னுடைய தவத்தின் ஆற்றலால் என்ன செய்வார்? என யோசித்தவனாக தன்னுடைய தலைநகரை அடைந்தான்.

துஷ்யந்தன் சென்ற சிறிது நேரத்தில் கண்வ முனிவர் பர்ணசாலைக்குத் திரும்பினார். ஆனால் சகுந்தலை தனது தந்தையைச் சந்திப்பதற்கு மிகுந்த வெட்கம் கொண்டிருந்தாள். இருந்தும் தன்னுடைய ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்த அவர் மிக்க மகிழ்ச்சியுடன், “அதிர்ஷடம் உடையவளே! என்னுடைய அனுமதியின்றி நீ இன்று ரகசியமாக செய்த காரியம் தர்மத்திற்கு எதிரானதல்ல. விருப்பமுடைய ஆணும் பெண்ணும் எவ்வித மந்திரங்களும் இல்லாமல் காந்தர்வ முறைப்படி மணம்புரிவது ஷத்திரியர்களுக்கு மிகவும் ஏற்றதே. நீ மணாளனாகத் தேர்ந்த துஷ்யந்தன் மனிதர்களில் சிறந்தவன். உயரான்மா கொண்ட அவன் தர்மங்களை அனுசரிப்பவன். நீ ஈன்றெடுக்கும் மைந்தன் சிறந்த குணங்களோடும் வீரத்தோடும் இந்த உலகம் புகழத்தக்க வகையில் இருப்பான். கடல் கடந்த தேசங்களையும் அவன் தன்னுடைய ராஜ்யத்தோடு இணைப்பான். எதிரிகள் அவன் முன் நிற்க முடியாது தோற்றோடுவார்கள்” என்றார்.

அதன் பிறகு அவரெதிரே வந்த சகுந்தலை அவரது பாதங்களைக் கழுவினாள். “நான் துஷ்யந்தனை எனது கணவனாக வரித்துக்கொண்டேன். தாங்கள் நல்லாசி கூறுங்கள்” என்றாள். “நான் உன்னை ஆசீர்வதிக்கிறேன். நீ விரும்பும் வரத்தைக் கேள்” என்றார் கண்வ முனிவர். துஷ்யந்தனின் நலம் விரும்பிய சகுந்தலை, புரூ வம்சத்தினர் நீதிவழுவாமல், எப்போதும் அரியணை விட்டு இறங்காதவர்களாக இருக்கவேண்டும்” என்று கேட்டாள்.
Related Posts Plugin for WordPress, Blogger...