June 11, 2017

19. துஷ்யந்தன்

பௌரவ வம்சத்தை நிறுவியவன் ஆற்றல் மிகுந்த துஷ்யந்தன் என்ற அரசனாவான். நாற்புறமும் கடலால் சூழப்பட்ட இந்த பூமியை அவனே பாதுகாத்தான். நான்கில் ஒரு பகுதி பூமியும், கடல் நடுவேயிருந்த பல பகுதிகளும் அவனது ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. எதிரிகளை நடுங்கச் செய்யும் அவனே, கடலுக்கு அப்பால் வைரங்கள் நிறைந்த, நான்கு வர்ணத்தவர்களும் வாழ்ந்த, மிலேச்சர்களின் (ஆரியர்கள் அல்லாதவர்கள்) அனைத்து நாடுகளுக்கும் கடவுளெனத் திகழ்ந்தான். அவனுடைய ஆட்சியில் கலப்புச் சாதியினரோ, துர்க்குணம் கொண்டவர்களோ யாரும் இல்லை. யாரும் நிலத்தை உழவு செய்வதற்கும், சுரங்கம் தோண்டுவற்கும் தேவையில்லாதிருந்தது. ஒவ்வொருவரும் தர்மத்தை அனுசரித்தவர்களாக, நீதி வழுவாமல் வாழ்ந்தார்கள். அவன் அரசனாக இருந்தபோது கள்ளர்கள் பயம், பஞ்சம் குறித்த அச்சம், பிணிகளைப் பற்றிய கலக்கம் ஆகிய எதுவும் அறவே இல்லாமலிருந்தது. நான்கு வர்ணத்தவர்களும் பலனைப் பற்றிக் கவலையின்றி தங்களுக்கான கடமைகளை முறைப்படி செய்து வந்தனர். அவனைச் சார்ந்தவர்கள் அனைவரும் எங்கிருந்தும் எந்த அச்சமும் இன்றி வாழ்ந்தனர். வருண தேவன் சரியான காலத்தில் தவறாது மழையைப் பொழியச் செய்தமையால் பயிர்கள் வாடாமல் செழித்திருந்தன. பூமி அளவற்றச் செல்வச் செழிப்பு மிக்கதாய் விளங்கிற்று.

இளமை நிரம்பிய அவனது வீரம் அபரிமிதமானதாய் இருந்தது. அவனது உடல் இந்திரனின் வஜ்ராயுதத்தை எதிர்த்து நிற்கும் ஆற்றல் பெற்றிருந்தது. மந்தரா மலையை அதன் காடுகளோடு, தனது தோள்களில் தாங்கிப் பிடிக்கும் வல்லமை கொண்டிருந்தான். யானையேற்றம், குதிரையேற்றம், வில்வித்தை அனைத்திலும் நிகரற்றவனாக விளங்கினான். ஆற்றலில் விஷ்ணுவைப் போலவும், பிரகாசத்தில் சூரியனைப் போலவும் ஜொலித்தான். அவன் கடலைப் போன்ற சாந்தமும் பூமியைப் போன்ற பொறுமையும் கொண்டிருந்தான். நாட்டு மக்கள் அனைவராலும் மிகவும் நேசிக்கப்பட்டவனாக அவனிருந்தான்.

ஒரு நாள், நூற்றுக்கணக்கான குதிரைகள் யானைகள் மற்றும் வீரர்கள் கொண்ட பெரும் படையுடன் அடர்ந்த கானகத்திற்கு வேட்டைக்குப் புறப்பட்டான். நூற்றுக் கணக்கான வீரர்கள், பலவிதமான ஆயுதங்களுடன் அவனைச் சூழ, முன்னேறிச் சென்றான். அவன் முன்னேறும் போது வீரர்கள் சிங்கத்தைப் போன்று கர்ஜித்தனர். சங்குகளும், பேரிகைகளும் முழங்கின. ரதங்களின் சகட ஒலி இடியாய் ஒலித்தது. யானைகள் பிளிறின. குதிரைகள் கனைத்தன. வீரர்களின் கரவொலி காதைச் செவிடாக்கும்படி ஒலித்தது. அழகிய மங்கையர் பலர் தங்கள் வீட்டு மாடத்திலிருந்து புகழ்மிக்க அரசனைக் கூர்ந்து நோக்கினர். அவர்கள் தங்கள் அரசன் எதிரிகளை அழிப்பதில் இந்திரனுக்கு நிகரானவன் என்பதை அறிந்திருந்தனர். போரில் பேராற்றல் கொண்ட அவனை மானிடர்களில் புலி எனக் கண்டனர் அந்த மங்கையர். அவனது ஆற்றல் மிக்க கரம் எந்த எதிரியையும் விட்டுவைக்காது என்பதை அவர்கள் நன்கறிவர். எனவே அவன் மீது அன்புகொண்ட அவர்கள் மாடத்திலிருந்தபடி மன்னன் மீது பூமாரி பொழிந்தனர். அவன் சென்ற வழியெங்கும் அங்கிருந்த அந்தணர்கள் அவனுக்குத் தக்க மரியாதை செய்து உபசரித்தனர்.

இவ்வாறு வழியனுப்பப்பட்ட துஷ்யந்தன் மிக்க மகிழ்ச்சியுடன் வேட்டைக்குச் சென்றான். குடிமக்களும், அந்நகர வாசிகளும் வெகுதூரத்திற்கு அரசனைப் பின்தொடர்ந்து சென்றனர். அரசன் உத்தரவிட்டே பிறகே அவர்கள் பின்தொடராது நின்றனர். அதன் பிறகு அவனுடைய ரதம் பூமியையும் வானத்தையும் நிறையச் செய்தபடி ஒலியெடுத்து கருடனைப் போலப் பறந்தது. வெகுதூரம் சென்ற பிறகு அவன் இந்திரனின் நந்தவனத்தை போன்றதொரு அழகான கானகத்தைக் கண்டான். வில்வம், எருக்கு, கருங்காலி, விளா மற்றும் வேள்வேல மரங்கள் அந்தக் காடு முழுதும் நிரம்பியிருந்தன. எண்ணற்ற மலைச் சிகரங்களும், பள்ளத்தாக்குகளும் நிரம்பிய அந்தக் காட்டில் கற்பாறைகள் எங்கும் பரவியிருந்தன. தண்ணீரும் மனித உயிர்களும் இருப்பதற்கான அடையாளமே அங்கில்லை. அந்த பயங்கரமான காட்டில் மான்களும் பிற விலங்குகளும் மிகுந்திருந்தன. தனது வீரர்களின் உதவியுடன் துஷ்யந்தன் பலவகையான மான்களை வேட்டையாடினான். தனது அம்பின் இலக்கு எட்டும் தொலைவிலிருந்த பல புலிகளை அவன் கொன்றான். அவைகளில் பல துஷ்யந்தனின் அம்புகளால் துளைக்கப்பட்டன. பலவற்றை அவன் தனது வாளால் வெட்டி வீழ்த்தினான். ஈட்டி எறிவதில் வல்லமை கொண்ட அவன் புலிகளில் பலவற்றை குறி தவறாமல் கொன்றான். கதாயுதம் சுற்றுவதில் எல்லையற்ற பலம் கொண்ட அவன் அவற்றால் பல விலங்குளை சுழற்றியடித்தான். பல்வேறு ஆயுதங்களைக் கையாண்டு காட்டை வலம்வந்த அவன் கொடிய மிருகங்களைக் கொன்று குவித்தான். அந்த சிறந்த கானகம், ஆற்றலின் மிக்க அவனாலும் அவனது வீரர்களாலம் அதகளமாகியது. பல விலங்குகள் அங்கிருந்து ஓட்டம்பிடித்தன. தங்கள் தலைவனை இழந்த மான்கள் அச்சத்தில் ஓலமிட்டபடி நாலா திசைகளிலும் சிதறி ஓடின. கானகத்தின் ஆற்றின் கரைகள் வறண்டிருந்ததால், தங்கள் தாகத்தை தணிக்க வழியின்றி, பெருமூச்சு விட்டு மூச்சிரைத்தபடி, ஓடிய மான்கள் பசி தாகத்தால் களைப்படைந்து மயக்கமுற்று விழுந்தன.

வீரர்களில் பலர் புலியைப் போல அந்த மான்களை பச்சையாகச் சாப்பிட்டனர். வேறுசிலர், நெருப்பை பற்றவைத்து, அவற்றை வாட்டி, துண்டுகளாக வெட்டி சாப்பிட்டனர். பல யானைகள் காயமடைந்த காரணத்தால் பித்துப் பிடித்தவையாயின. துதிக்கையை உயர்த்தி பிளிறிய அவை, ஆக்ரோஷமாக நிலத்தை அறைந்தபடி ரத்தம் பெருக, அச்சத்தில் மலமும் மூத்திரமும் கழித்தன. அவற்றின் காலடியில் மிதிபட்டு பல வீரர்கள் செத்துமடிந்தனர். தன்னுடைய மேகம் போன்ற ஆற்றலாலும் மழையைப் போன்ற அம்பினாலும், கொடிய காட்டை புகலிடமாக உடைய விலங்குகளின் தாக்குதலை, வெறிபிடித்த எருமையாக முறியடித்தான் துஷ்யந்தன்.

ஆயிரக்கணக்கான விலங்குகளை கொன்றழிந்த துஷ்யந்தனும் அவனது வீரர்களும் மேலும் மற்றொரு காட்டில், மான்களை வேட்டையாட, நுழைந்தனர். அவன் அளவற்ற ஆற்றல் மிக்கவனாக இருந்தபோதும் பசியும் தாகமும் அவனை வாட்டின. அடர்ந்த கானகத்தினுள்ளே புகுந்து, பரந்த தரிசு நிலப்பகுதி வரும்வரையிலும் சென்றான். அதையும் கடந்த அவன் கண்களுக்கு இனிமையானதும், இதயத்திற்கு இதம் தருவதுமான, மரங்களினால் அமைக்கப்பட்ட சாதுக்களின் ஓய்வு இல்லங்கள் அமைந்த வனத்தை அடைந்தான். அதையும் கடந்த அவன், குளிர்ந்த காற்று வீசும் மற்றொரு வனம் ஒன்றில் நுழைந்தான். அந்த வனத்திலிருந்த மரங்கள் அனைத்தும் மலர்களால் நிரம்பியிருக்க, அதன் தரைப்பகுதி முழுவதிலும் மிருதுவான புற்கள் படர்ந்திருந்தன. அந்த வனம் பாடும் பறவைகளின் இன்னிசையை எதிரொலித்தது. எங்கு நோக்கினும் வளர்ந்திருந்த, பல்வேறு கிளைகளைக் கொண்ட பெரிய மரங்கள், இதமான நிழலைக் கொடுத்தன. செடிகளைச் சுற்றி ரீங்காரமிட்ட வண்டுகளின் ஓசை, அந்த இடத்தில் அற்புதமான அழகிருப்பதை பறைசாற்றியது. மலர்களின்றியும் கனிகளின்றியும் எந்தவொரு மரமும் அங்கிருக்கவில்லை. பறவைகளின் எதிரொலிக்கும் இன்னிசையும், அனைத்து பருவங்களிலும் மலரும் நறுமணம் மிக்க மலர்களும், நிழல் தரும் இனிய மரங்களும், பசுமையான புல் தரையும், அந்த வனத்தை சொர்க்கலோகமாக சிருஷ்டித்தது. சிறந்த வில்லாளியான துஷ்யந்தன் அந்த வனத்திற்குள் பிரவேசித்தான். வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட மரங்கள், காற்றில் அசைந்தாடி, அழகிய மலர்களைத் தொடர்ந்து உதிர்த்தன. பறவைகளின் இனி கானம் விண்ணை முட்டுமளவுக்கு எழுந்தது.

இவ்வாறான அந்த அற்புதமானதும் அழகானதுமான வனத்தைக் கண்டு பேருவகை கொண்டான் துஷ்யந்தன். மரங்களின் நீண்ட கொடிகள் மலர்களோடு ஒன்றை ஒன்று பின்னிப்பிணைந்திருக்க, இந்திரன் கழுத்திலிருக்கும் ஆரம் அணிந்தது போல, அந்த வனம் பிரகாசித்தது. மனதிற்குகந்த, குளிர்ந்த, நறுமணம் மிக்க தென்றல், மலர்களின் நறுமணத்தை சுமந்து சென்று அந்த வனம் முழுவதும் பரப்பிவாறு மரங்களோடு விளையாடியது. இவற்றையெல்லாம் துஷ்யந்தன் கூர்ந்து கவனித்தான். அந்த வனம் நதியின் முக்கோணத்தில் கொடிக்கம்பம் போல அமைந்திருந்தது. பறவைகளின் இருப்பிடமான அந்தக் கானகத்தில் ஓர் அழகான பர்ணசாலை ஒன்றை துஷ்யந்தன் கண்டான்.

யதி, வாலகியர்கள், மற்றும் ஏனைய பல சாதுக்கள் அங்கிருந்தனர். பல இடங்களில் யாகவேள்வி நிறுவப்பட்டு, அவைகளைச் சுற்றியும் மலர்களாலான பாதை விரிப்புகள் நிலத்தில் விரிக்கப்பட்டிருந்தன. புனிதமான மாலினி ஆறு அந்த பர்ணசாலை அருகே ஓடி, ஓர்அழகிய பெரிய குளத்தை ஏற்படுத்தியிருந்தது. அதில் துள்ளித்திரிந்த பல நீர்வாழ் உயிரினங்கள் அந்தப் பர்ணசாலைக்கு மேலும் அழகூட்டியது. அங்கே பல கொடிய விலங்குகளும் மான்களும் ஒன்றாக உலவியதைக் கண்டு துஷ்யந்தன் அதிசயித்தான்.

யாரும் தடுத்து நிறுத்த முடியாத துஷ்யந்தனின் ரதம், மந்திரங்கள் ஒலிக்கும் அந்த ஆசிரமம் இருந்த இடத்திற்குள் பிரவேசித்தது. மாலினி ஆற்றின் புனித நீர், அங்கிருக்கும் அனைத்துயிர்களுக்கும் ஆதாரமாக இருப்பதை மன்னன் கவனித்தான். சக்கரவாகப் பறவைகள் அந்த ஆற்றின் கரையோரமாகப் பறந்துகொண்டிருந்தன. கின்னர்கள் சிலரும், குரங்குகளும், கரடிகளும் அங்கே கூடி வசித்தன. புனித மந்திரங்களின் ஒசை அந்த ஆற்றின் மணற்கரையில் எதிரொலித்தது. யானைகள், புலிகள், நாகங்கள் பலவற்றையும் கூட அங்கே காணமுடிந்தது. அந்தப் புனிதமான பர்ணசாலையை மாலினி ஆறு தன்னுடைய கரையாலும் தண்ணீராலும் அலங்கரித்திருப்பதைக் கண்ட அரசன் அங்கே செல்ல விரும்பினான். கங்கையின் நீரலைகள் விரும்பிய நர நாராயணரின் இருப்பிடம் போலவே, அந்த இடம், பித்தாகி தோகைவிரித்தாடும் மயில்களின் ஒசையை எதிரொலித்தது.

கந்தர்வன் சித்தரரதனின் நந்தவனத்தை ஒத்திருந்த அந்த சிறந்த வனத்தில் நுழைந்தான் துஷ்யந்தன். தவத்தில் சிறந்தவரும், அனைத்து தகுதிகளாலும் ஆசிர்வதிக்கப்பட்டவரும், கசியபரின் வழித்தோன்றலுமான கண்வ முனிவரைக் காண விரும்பினான். அந்த வனத்தின் நுழைவு வாயிலில் தனது ரதத்தையும், வீரர்களையும் நிறுத்திய துஷ்யந்தன், “நான் கசியபரின் வழித்தோன்றலான கண்வ முனிவரைக் காணச் செல்கிறேன். நான் வரும்வரை இங்கேயே காத்திருக்கவும்” என்று சொல்லி, மந்திரியோடும், மதகுருவோடும் வனத்திற்குள் பிரவேசித்தான். இந்திரனின் நந்தவனம் போலிருந்த அதில் நுழைந்ததும் அளவற்ற ஆனந்தமடைந்த துஷ்யந்தன் தன்னுடைய பசி தாகத்தை மறந்தான். தான் ஒரு மன்னன் என்ற எண்ணத்தை விட்டொழித்தான். தவத்தின் அழிவற்ற ஆற்றலைப் பெற்ற முனிவரைக் காண விழைந்தான். அந்த பர்ணசாலை ரீங்கரிக்கும் வண்டுகளும், பாடும் பறவைகளும் கொண்ட பிரம்மனின் உலகம் போலிருப்பதைக் கண்டான்.

அங்கே ஓரிடத்தில், சிறந்த அந்தணர்களால் தெளிவான உச்சரிப்பில் முறைப்படி ஓதப்பட்ட ரிக்வேத மந்திரங்களின் ஒலியை துஷ்யந்தன் கேட்டான். மற்றொரு இடத்தில், பலவகையான யாகவேள்வியின் சடங்குகளை நன்கறிந்த பலர் வீற்றிருப்பதைக் கண்டான். கடுமையான நோன்புகளை அனுசரிக்கும் பல தவத்திற் சிறந்தவர்களால் அந்த பர்ணசாலை அணிசெய்யப் பட்டிருந்தது. பிறிதோரிடத்தில், அதர்வனவேதம் கற்ற பல முனிவர்கள், சம்ஹிதையிலிருந்து மந்திரங்களை முறைப்படி ஓதிக்கொண்டிருந்தனர். அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் முறைப்படியான உச்சரிப்பையும் யாப்பு இலக்கணத்தையும் நன்கு அறிந்திருந்ததால், அவர்களால் ஓதப்பட்ட வேதமந்திரங்களின் ஒலியால் அந்த பர்ணசாலை ஏதோ பிரம்மனின் உலகம் போல விளங்கிற்று. தர்க்கசாஸ்திரம், சுயஉணர்தல், விடுதலைக்கான மார்க்கம் இவற்றை அறிந்த வேதியர்கள் பலரும் அங்கிருந்தனர். பிரத்யேகமான சடங்குகளில் நிபுணத்துவம் வாய்ந்த மேலும் பலரும் இருந்தனர். சொற்களின் மகத்துவத்தை நன்கறிந்த, தேவைக்கதிகமான விவாத்தை முறியடிக்கும் தத்துவவாதிகள் பலரும் கூடியிருந்தனர். மந்திரங்கள் ஓதும் ஒலியும், பாசுரங்களின் ஒலியும் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தன. எதிரிகளை முறியடிக்கும் வல்லமை கொண்ட துஷ்யந்தன் அவை அனைத்தையும் கண்ணுற்று மகிழ்வடைந்தான்.

அழகான, வண்ண மயமான, பல்வேறு இருக்கைகள் மிகக் கவனமாக அமைக்கப் பட்டிருந்ததைக் கண்ட துஷ்யந்தன் பெருவியப்படைந்தான். அங்கிருந்த அந்தணர்கள் அனைவரும் கடைபிடித்த சடங்குகளும், அவர்கள் கடவுளர்களை வழிபட்ட முறையையும் கண்ட துஷ்யந்தன் தான் பிரம்மலோகத்தில் இருப்பதாகவே உணர்ந்தான். அவற்றையெல்லாம் காணக்காண அவன் உள்ளத்தில் கசியபரின் வழித்தோன்றலைக் காணப்போகும் ஆவல் மிகுந்தவனாக அந்தப் பர்ணசாலையில் காலெடுத்து வைத்தான் துஷ்யந்தன்.

Related Posts Plugin for WordPress, Blogger...