June 8, 2017

18. சத்தியவதியும் வியாசரும் பிறந்தது

முன்னொரு காலத்தில் இந்த பூமியை உபரிசரன் என்ற அரசன் ஒருவன் நீதிவழுவாமல் ஆண்டுவந்தான். அவன் வேட்டையாடுவதில் மிகுந்த விரும்பம் கொண்டிருந்தான். புரூ வம்சத்தைச் சேர்ந்த அவன் வசு என்றும் அழைக்கப்பட்டான். இந்திரனின் வழிகாட்டுதல்படி அவன் அழகானதும் அற்புதமானதுமான சேதி நாட்டை வென்றான். சில நாட்களுக்குப் பிறகு உபரிசரன் ஆயுதங்களை கைவிட்டு, ஆசிரமம் அமைத்து அதில் தவம் செய்து வாழ்ந்து வந்தான்.

ஒரு நாள் இந்திரன் உபரிசரன் தேவர்களின் அரசனாகும் பொருட்டு தவம் செய்கிறான் என்று கருதி அவனைத் தடுப்பதற்காக அங்கே வந்தான். இந்திரன் அவனிடம், “உலகத்தை ஆள்பவனே! நீதி வழுவாமல் ஆட்சி செய்வதில் நீ உறுதியாக இருக்கவேண்டும். ஏனெனில் நீதி வழுவாமையே இந்த உலகத்தை தாங்கிப் பிடிக்கிறது. எனவே கவனத்துடனும் கட்டுப்பாடுடனும் நேர்மையை கடைபிடிக்க வேண்டும். நீ நேர்மையைக் கடைபிடித்தால், பல அழியாத புனித உலகங்களை நீ காண்பாய். நான் வானத்திலும் நீ பூமியிலும் இருந்தபோதும், நீ எனக்கு உற்ற நண்பன். விலங்குகளும், மலர்களும், செல்வங்களும், உணவு தானியங்களும் நிலைத்திருக்கும் தாயின் மடி போன்ற இந்த பூமியில் வாழ்வாயாக. அனுபவிப்பதற்கான மகிழ்ச்சியான தட்பவெப்ப நிலை நிலவும், அனைத்து வளங்களையும் உடைய இந்த பூமி சொர்க்கத்தைப் போல பாதுகாப்பானது. சேதி அரசனே! செல்வங்களும், மதிப்புமிக்க கற்களும், கனிம வளங்களும் நிறைந்த இந்த பூமி எதனோடும் ஒப்பிட முடியாதது. இதன் குடிமக்கள் அனைவரும் தயாள குணம் உடையவராக, மனநிறைவோடு நீதிவழுவா நெறிமுறையில் வாழ்கிறார்கள். அவர்கள் விளையாட்டிற்குக் கூட பொய் சொல்வதில்லை. தங்களது தந்தையிடமிருந்து மகன்கள் ஒருபோதும் சொத்துக்களை பிரிக்காமல், பெரியோர்களின் நலனையே கருத்தில் கொள்கிறார்கள். மெலிந்த மாடுகள் உழுவதற்கோ அல்லது வண்டிகளை இழுக்கவோ பயன்படுத்துவதில்லை. சேதியில் நான்கு வர்ணத்தவர்களும் தங்களுக்குரிய கடமைகளை குறைவு படாமல் செய்கிறார்கள். மூவுலகங்களிலும் நடப்பதனைத்தும் உனக்குத் தெரியும். தேவர்கள் மட்டுமே வைத்திருக்கும் படிகத்தாலான, சிறந்த அற்புதமான பறக்கும் ரதம் ஒன்றைத் தருகிறேன். அதன் மூலம் நீ வானத்தில் பறந்து திரியலாம். பூமியில் இருக்கும் மனிதர்களில் பரு உடலைக் கொண்டிருந்த போதும் நீ ஒருவன் மட்டுமே, தேவர்களைப் போல இந்த ரதத்தில் பறந்து செல்லலாம். மேலும் நான் வைஜயந்தி என்ற வாடாத தாமரை மலர் மாலையைத் தருகிறேன். நீ அதை அணிந்திருக்கும் போது போரில் எந்த ஆயுதமும் உன்னைக் காயப்படுத்தாது. இந்த இணையற்ற, மேலான, சிறந்த, இந்திர மாலை இனி உனக்குத் தனி அடையளமாக ஆகட்டும்” என்றான்.

இவ்வாறு சொல்லிய இந்திரன், அமைதியையும் நன்மையையும் நிலைநாட்ட, மூங்கிலால் ஆன கோல் ஒன்றையும் உபரிசரனுக்கு கொடுத்துவிட்டுச் சென்றான். அதற்கு ஒரு வருடம் கழிந்த பிறகு, உபரிசரன் அந்தக் கோலை நிலத்தில் நட்டு இந்திரனை வணங்கி வந்தான். அந்த நாளிலிருந்து அனைத்து அரசர்களும் அதனைப் பின்பற்றி அவ்வாறே செய்தனர். அதை மலர்களும், நறுமணத் திரவியங்களும், ஆபரணங்களும் கொண்டு அலங்கரித்து முறைப்படி சடங்குகள் செய்து இந்திர விழாவாக வழிபட்டனர். இவ்வாறு தன்னை வழிபடுவது கண்டு மிக்க மகிழ்ச்சியுற்று இந்திரன், “சேதிநாட்டு மக்களும் மன்னனும் எனக்கு விழா எடுத்து வழிபடுவதால் அவர்கள் நாடு பெரும் புகழையும் வெற்றிகளையும் அடையும், அவர்களின் நகரம் மேலும் மேலும் பெருகி, எப்போதும் மகிழ்ச்சியால் நிறைந்திருக்கட்டும்” என்று வாழ்த்தினான். இந்திரன் அரசன் வசுவின் மீதுகொண்ட அளவற்ற அன்பால் இவ்வாறு வாழ்த்தினான். யாரொருவன் இந்த இந்திர விழாவை நிலத்தையும் நகைகளையும் பரிசாகக் கொடுத்து வழிபடுகிறானோ அவன் தூய்மையானவனாக ஆவதோடு, சிறந்த யாகங்களைச் செய்த மன்னன் வசுவை இந்திரன் வாழ்த்தியதைப் போல, வாழ்த்தப்படுவான்.

இந்திரனால் விரும்பப்பட்ட சேதிநாட்டு அரசன் வசு இவ்வாறு நீதி வழுவாமல், இந்திர விழாவை தொடர்ந்து நாட்டில் நடைபெறச்செய்து குடிமக்களை காத்து வந்தான். அவனுக்கு வீரத்திலும் வலிமையிலும் சிறந்த ஜந்து மகன்கள் இருந்தனர். முழுதளாவிய அரசன் வசு தனது மகன்களை பல ராஜ்யங்களுக்கு பிரதிநிதியாக அமர்த்தி அவற்றை ஆளச்செய்தான். அவனது புழ்மிக்க, மஹாரதன் என்றழைக்கப் பட்ட மகன் பிருஹத்ரதன் மகத நாட்டை நிர்வகித்தான். பிரத்யகிரஹா, மணிவாகனன் என்றழைக்கப்பட்ட குசாம்பா, மச்சில்லா மற்றும் யது ஆகியோர் வசுவின் பிற மைந்தர்களாவார். அவர்கள் தங்கள் பெயரிலேயே பல நாடு நகரங்களை நிறுவினர். இவ்வாறு வசுவின் ஐந்து மகன்களும் தனித்தினயான வம்சத்தை நிறுவினர். இந்திரன் கொடுத்து ரதத்தில் பறந்தவனாக அரசன் இந்த நாடு நகரங்களைக் காண்கையில் தேவகன்னிகைகளும், காந்தவர்களும் அவனை வணங்கினர். எனவே அவன் உபரிசரன் (வானத்தில் சஞ்சரிப்பவன்) என்ற பெயரால் எங்கும் புகழ்பெற்றான்.

உபரிசரன் வாழ்ந்த நகரத்தினருகே சுக்திமதி என்ற நதி ஒடியது. அந்த நதி ஒரு முறை கோலாஹல என்ற மலையின் பித்துப் பிடித்த சிற்றின்ப இச்சைக்கு இரையானது. எனவே வசு அந்த மலையை தனது காலால் உதைத்து விரட்டினான். அவன் உதைத்ததால் ஏற்பட்பட்ட நீர்க்கால் வழியாக தண்ணீர் வெளியே ஓடியது. மலை தழுவியதால் இரட்டையர்களைப் ஈன்றெடுத்த நதி, நன்றிக் கடனாக வசுவுக்கு அவர்களைக் கொடுத்தது. வசு, ஆண் மகனை தன்னுடைய படைகளுக்குத் தளபதியாக நியமித்தான். மற்றொரு பெண் குழந்தையான கிரிகையை தன்னுடைய மனைவியாக வரித்துக் கொண்டான்.

ஒரு நாள் தன்னுடைய தீட்டுக்காலம் முடிந்து, சுத்தமாகக் குளித்து முடித்து, தனது நிலையை எடுத்துச்சொல்லி, புத்திரபேற்றுக்காக தன் கணவனிடம் உடலுறவை நாடினாள் கிரிகை. ஆனால் அதே நாளில், அவனுடைய முன்னோர்கள் அவனிடம், தங்களுக்கு ஒரு மானை வேட்டையாடித் தரும்படிக் கேட்டனர். தனது முன்னோர்களின் கட்டளையை நிறைவேற்றுவதே தகும் என்றெண்ணி வசு வேட்டைக்குச் சென்றான். இருந்தும் லட்சுமியைப் போல் அளவற்ற அழகுடன் விளங்கிய கிரிகையின் உருவம் அவன் மனதில் நீங்காதிருந்தது. எனவே அவனுடைய விந்து வெளிப்பட்டு அந்தக் காட்டில் சிந்தியது. அதைச் சேமிக்க விரும்பியவனாக, ஒரு மரத்தின் இலையில் அதைச் சேகரித்தான். தன்னுடைய விந்து வீணாகப் போகக்கூடாது எனவும், தனது மனைவியின் கர்ப்ப காலம் பயனற்றுவிடக் கூடாது என்றும் வசு எண்ணினான். இதைப் பலமுறை எண்ணிப் பார்த்த அரசன், தனது விந்தைப் பாதுகாக்க வேண்டும் என்று உறுதியாக முடிவு செய்தான். தர்மத்தின் நுண்ணிய அர்த்தங்களை அறிந்த அரசன், விந்தை புனிதமாக்கி, அதை வித்தாக்கினான். பிறகு தன்னருகேயிருந்த பருந்தை அழைத்து, “மனதுக்கினிய பருந்தே! இந்த வித்தை எடுத்துச் சென்று என் மனைவி கிரிகையிடம் கொடு. அவள் இப்போது கர்ப்பந்தரிக்கும் காலத்தில் இருக்கிறாள்” என்றான். பருந்து அரசனிடமிருந்து அதைப் பெற்றுக்கொண்டு வானத்தில் விரைவாகப் பறந்தது.

வேகமாக வானத்தில் சென்ற பருந்தைக் கண்ட மற்றொரு பருந்து, ஏதோ இரையை எடுத்துச் செல்வதாக நினைத்து அந்தப் பருந்தருகே வந்தது. இரண்டும் வானத்தில் தம்முடைய அலகுகளால் ஒன்றை ஒன்று சண்டையிட்டுக் கொண்டன. அவ்வாறு சண்டையிடுகையில் அந்த வித்தானது யமுனை நதியில் விழுந்தது. அத்ரிகை என்ற தேவகன்னி ஒரு அந்தணனால் சபிக்கப்பட்டு மீனாக மாறி அந்த நதியில் வாழ்ந்துகொண்டிருந்தாள். அந்த மீன் நதியில் விழுந்த வித்தை விழுங்கியது.

அதன் பிறகு ஒரு மீனவன் பத்து மாத கர்ப்பமாக இருந்த அந்த மீனைப் பிடித்தான். அப்போது அந்த மீனின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு மனித உருவில் ஒரு ஆணும் பெண்ணும் வெளிப்பட்டனர். அதைக் கண்டு வியப்புற்ற மீனவன் அரசனிடம் சென்று, “அரசே! இவர்கள் இருவரும் மீனின் வயிற்றிலிருந்து வெளிப்பட்டனர்” என்று சொன்னான். அரசன் உபரிசரன் அந்த ஆண் குழந்தையை ஏற்றுக்கொண்டான். அவனே பிற்காலத்தில் நீதிவழுவாத, சத்தியம் தவறாத மத்ஸ்ய அரசனான். இந்தக் குழந்தைகள் பிறந்த உடனேயே அந்த தேவகன்னி, சாபத்திலிருந்து விடுபட்டு பெண் உருவை அடைந்தாள். அதன் பிறகு அவள் வானுலகம் சென்றாள். அந்த மற்றொரு பெண் குழந்தையின் மீது மீன் வாடை அடித்தது. “இவள் உங்கள் மகளாகட்டும்” என்று சொல்லி அரசன் மீனவனிடம் அவளைக் கொடுத்தான்.

அந்தப் பெண் சத்தியவதி என்றழைக்கப்பட்டாள். அளவற்ற அழகு கொண்டிருந்த அவள் பண்பிலும் குணத்திலும் சிறந்து விளங்கினாள். அவள் மீனவர்களுடன் வாழ்ந்ததால், இனிய புன்னகை கொண்ட அவள், வெகுகாலத்திற்கு மீன் வாசனை உடையவளாகவே இருந்தாள். தன்னுடைய தகப்பனுக்கு உதவும் பொருட்டு யமுனை நதியில் ஓடம் விட்டுக்கொண்டிருந்தாள். ஒரு நாள் புனி யாத்திரை மேற்கொண்டிருந்த பராசர முனிவர் படகு ஓட்டிய சத்தியவதியைக் கண்டார். அழகு ததும்ப இருந்த அவள் அந்தச் சாதுவின் மனதில் ஆசையை விதைத்தாள். அவளைக கண்டதும் அவள் மீது மிகுந்த விருப்பம் கொண்டு அவளை அடைய விரும்பினார்.

அவரது விருப்பத்தை அறிந்த சத்தியவதி, “நதியின் இரு கரைகளிலும் உள்ள முனிவர்கள் நம்மைப் பார்க்கையில் நாம் எவ்வாறு உறவு கொள்வது?” என்று கேட்டாள். அவள் சொன்னதைக் கேட்ட பராசரர் மூடுபனியை உருவாக்கி அந்தப் பகுதி முழுவதையும் இருளாகும்படி செய்தார். தீடீரென உருவாகி மூடுபனியைக் கண்டு அதிசயித்த சத்தியவதி, நாணம் கொண்டாள். அவள் தைரியத்துடன் அவரிடம், “நான் ஒரு கன்னிப் பெண்ணாக எனது தந்தையின் பாதுகாப்பில் இருக்கிறேன். களங்கமற்றவரே! நான் உங்களுடன் சேர்ந்தால் என்னுடைய கன்னித்தன்மை கறைபடும். அந்தணர்களில் சிறந்தவரே! அப்படி என்னுடைய கன்னித் தன்மையை இழந்தபிறகு நான் எவ்வாறு வீட்டிற்குத் திரும்பிச் செல்ல முடியும்? அதன் பிறகு நான் மேலும் வீட்டிலிருக்க முடியாது. எனவே இதை மனிதில் கொண்டு, தாங்கள் என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்யுங்கள்” என்றாள்.

அதைக் கேட்டு மகிழ்ந்த பராசரர், “என்னுடன் கூடிய பிறகும் நீ கன்னித் தன்மையுடனே இருப்பாய். அழகானவளே! நீ விரும்பும் எந்த வரத்தையும் என்னிடம் கேட்கலாம். முல்லைப்பல் சிரிப்பை உடையவளே! நான் கொடுக்கும் வரம் ஒருபோதும் பலனற்றுப் போகாது” என்றார். சத்தியவதி தன்னுடைய உடல் எப்போதும் நறுமணம் உடையதாக இருக்கவேண்டும் என்று கேட்டாள். அவர் அவள் விரும்பியதைக் கொடுத்தார். தான் விரும்பியது கிடைத்ததில் சத்தியவதி மிகவும் மகிழ்ச்சியடைந்தாள். பெண்ணின் அனைத்து அழகையும் ஆபரணமாக அணிந்த அவள் அதன் பிறகு அவரோடு கூடினாள். அதன் பிறகு அவள் இந்த பூமியில் கந்தவதி (நறுமணம் உடையவள்) என்று அழைக்கப்பட்டாள். ஆண்கள் அவளது உடலின் நறுமணத்தை ஒரு யோஜனை தூரத்திற்கு அப்பாலிருந்தும் நுகர முடிந்தது. எனவே அவள் யோஜனகந்தா என்று அறியப்பட்டாள்.

முனிவர் பராசரர் தன்னுடைய இல்லத்திற்குச் சென்றபிறகு, சத்தியவதி தனக்குக் கிடைத்த ஒப்பிட முடியாத வரத்தை எண்ணி பெருமகிழ்வு கொண்டாள். பராசரருடன் உடலுறவு கொண்ட அதே நாளில் அவள் கர்ப்ந்தரித்து, அவரது ஆற்றல் மிகுந்த மகனை அந்த யமுனை நதிக்கரையில் பெற்றெடுத்தாள். அவன் அவளது தாயின் அனுமதியுடன், சந்தியாச வாழ்வை மேற்கொள்ளவதாகவும், அவள் எப்போது நினைத்தாலும் அவள் முன் உடனடியாகத் தோன்றுவேன் என்றும் சொல்லிச் சென்றான்.

இவ்வாறாக துவைபாயனர் (வியாசர்) பராசரர் மூலம் சத்தியவதிக்கு மகனாகப் பிறந்தார். அவர் தீவு ஒன்றில் பிறந்தமையால் துவைபாயனர் என அனைவராலும் அறியப்பட்டார். ஒவ்வொரு யுகத்தின் முடிவிலும் தர்மம் சிறிது குறைவு படுகிறது. ஆகவே இந்த பூமியில் மனித வாழ்வின் நீட்சி யுகத்தைப் பொருத்தே அமைகிறது. எனவே தர்மத்தை சீர்படுத்தி பிரம்மனையும், அந்தணர்களையும் மகிழ்விக்க விருப்பம் கொண்டு அவர் வேதங்களைத் தொகுத்தார். அவ்வாறு தொகுத்தமையால் அவர் வியாசர் என்றழைக்கப் பட்டார். ஒப்பற்ற கடவுளும், வரத்தை அருளுபவருமான அவர் வேதங்களையும், ஐந்தாவது வேதமான மகாபாரதத்தையும், சுமந்து, ஜைமினி, பைலர், தனது மகன் சுகர், தனது சீடர் வைசம்பாயனர் ஆகியோருக்கு பயிற்றுவித்தார். அவர்கள் மூலமாகத் தனித்தனியாக பாரத சம்ஹிதா வெளிப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...