June 7, 2017

17. வேள்வியை நிறுத்திய ஆஸ்திகன்

பலவாறு ஆறுதல் சொல்லி தனது மாமன் வாசுகியின் மனத்திலிருந்த அச்சத்தைப் போக்கிய ஆஸ்திகன் ஜனமேஜயன் வேள்வி நடக்குமிடத்திற்குச் சென்றான். அந்த அற்புதமான இடம், பிரகாசமான சூரியனைப் போலும் தீயைப் போலும் எண்ணற்ற சதயர்களால் ஆக்ரமிக்கப்பட்டிருந்ததைக் கண்டான். ஆனால் வாயிற்காப்போன் அவனை உள்ளே அனுமதிக்கவில்லை. உள்ளே நுழையும் பொருட்டு அந்த வேள்வியைப் பற்றிப் புகழ்ந்து பேசத்தொடங்கினான்.

“பரீஷித்தின் மைந்தனே! பாரத வம்சத்தின் வழித்தோன்றல்களில் சிறந்தவனே! முன்னொரு காலத்தில் சோமனும், வருணனும், பிரஜாபதியும் பிரயாகையில் வேள்விகளை இயற்றினர். உனது வேள்வி அவர்களின் வேள்விக்குச் சற்றும் குறைந்ததல்ல. நமக்கு அன்பானவர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப் படட்டும். இந்திரன் நூறு வேள்விகளைச் செய்தான். ஆனால் உனது இந்த வேள்வி அந்த நூறு வேள்விக்குச் சமமானது. உனது இந்தவேள்வி யமன், ஹரிமேதன், ரந்திவேன், மயன், கசபிந்து, வைஸ்ரவணன், நிருகன், அஜமீடன், தசரத மைந்தன், தேவ மைந்தன், யுதிஷ்டிரன், கிருஷ்ண துவைபாயனர் ஆகியோர் நடத்திய வேள்விகளுக்கு நிகரானது. நமக்கு அன்பானவர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப் படட்டும்.

இங்கே வீற்றிருக்கும் அனைவரும் சூரியனைப் போல, தீயைப் போல பிரகாசித்து இந்த வேள்வியை இந்திரன் செய்த வேள்விக்கு இணையான வேள்வியாகச் செய்துவிட்டனர். இவர்கள் அறியாதது என்று ஏதுமில்லை. இவர்களுக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் என்றும் வற்றாதவை. இந்த உலகத்தில் கிருஷ்ண துவைபாயனருக்கு இணையான ரித்விக்கு எவருமில்லை என்பதை நான் உறுதியாகச் சொல்வேன். ரித்விக்குகளாக தங்களது கடமைகளில் கைதேர்ந்த அவரது சீடர்கள் உலகம் முழுதும் சுற்றியவர்கள். நமக்கு அன்பானவர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப் படட்டும்.

தங்க நிறமான தீக்கு வித்தாகவும், கரும்புகையை வழித்தடமாகவும், அனைத்தையும் உண்பவனாகவும், கிழக்கு நோக்கி வீற்றிருப்பவனும், விபாவசு என்றும் சித்ரபானு என்றும் அழைக்கபடும் அக்னிதேவன், உனது அவிர்பாகங்களை விருப்புடன் ஏற்றுக்கொள்கிறான். இந்த உலகத்தில் உன்னைப் போலக் குடிமக்களைக் காக்கும் அரசன் வேறொருவன் இல்லை. உனது விடாமுயற்சி கண்டு என் மனம் மகிழ்கிறது. நீயே வருணன். நீயே யமதர்மராஜன். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரனைப் போன்று நீயே உலக மக்களைக் காக்கிறாய். என்னுடைய பார்வையில் அனைத்து மானிடர்களிலும் நீயே கடவுள். எந்த அரசனும் உன்னைப் போல வேள்வி நடத்துவதற்கு ஈடாகமுடியாது. நமக்கு அன்பானவர்கள் அனைவரும் ஆசிர்வதிக்கப் படட்டும்.

நீயே கத்வாங்கா, நபாகா மற்றும் திலீபனைப் போன்றவன். ஆற்றலில் நீயே யயாதி மற்றும் மந்ததாவைப் போன்றவன். நீயே சூரியனைப் போல் ஒளி பொருந்தியவன். சபதங்களைக் கடைபிடிப்பதில் நீயே பீஷ்மன். நீயே வால்மீகியைப் போன்று உறுதியானவன். சினத்தை அடக்குவதில் நீயே வசிஷ்டன். என்னுடைய பார்வையில், ஆட்சிசெய்வதில் இந்திரனைப் போன்றும், புகழில் நாராயணைப் போன்றும் விளங்குவன் நீயே. தர்மத்தை நிலைநாட்டுவதில் நீயே யமன். கிருஷ்ணனைப் போன்று அனைத்து பண்புகளும் கொண்டவன் நீயே. வசுக்களைப் போன்று செல்வக் களஞ்சியம் நீயே. அனைத்து வேள்விகளின் பிறப்பிடம் நீயே. ஆற்றலில் நீயே தம்போத்பவன். கரங்களை உபயோகிப்பதில் நீயே ராமபிரான். ஆற்றலில் நீயே அவுர்வா மற்றும் திரித்தா. பகீரதனைப் போன்று அச்சத்தை உமிழும் பார்வை கொண்டவன் நீயே” என்றெல்லாம் ஆஸ்திகன் ஜனமேஜயனைப் புகழ்ந்துரைத்தான்.

ஆஸ்திகன் சொல் கேட்ட ஜனமேஜயன் மகிழ்வுற்று அங்கிருப்பவர்களிடம், “இவன் சிறுவனாக இருந்தபோதும், அறிவார்ந்த பெரிய மனிதனைப் போல பேசினான். இவன் சிறுவனல்ல. இவன் அறிவின் முதிர்ச்சியுடையவன். நான் இவனுக்கு வரம் கொடுக்க விரும்புகிறேன். இங்கே கூடியிருக்கும் அந்தணர்களே! அதற்கு எனக்கு அனுமதி கொடுங்கள்” என்று கேட்டான்.

சதயர்கள், “இவன் சிறுவனாக இருந்தபோதும், அந்தணனுக்குரிய மரியாதையை அரசனிடமிருந்து பெறும் தகுதியைப் பெற்றிருக்கிறான். எனவே நீ அவனது விருப்பத்தை நிறைவு செய்யவேண்டும் ஆனால் தட்சகன் விரைவில் இங்கு வந்து சேர்ந்தபிறகே அதைச் செய்யவேண்டும்” என்றனர்.

ஆனால் ஜனமேஜயன் அதைச் செவிமடுக்காதவனாக, அந்தச் சிறுவனுக்கு வரம் கொடுக்க மிகுந்த விருப்பம் கொண்டவனாக, “என்னிடமிருந்து வரம் ஒன்று கேள்” என்று ஆஸ்திகனிடம் சொன்னான். ஹோத்ரியர்கள் ஜனமேஜயனின் இந்தச் செயலை விரும்பாதவர்களாக, “தட்சகன் இன்னும் இந்த வேள்வித் தீயில் வந்து விழவில்லை” என்று எச்சரித்தனர். அதற்கு ஜனமேஜயன், “உங்களால் முடிந்தளவு இந்த வேள்வியை வெற்றிகரமாகச் செய்துமுடியுங்கள். உங்களது அனைத்து ஆற்றல்களையும் பயன்படுத்தி தட்சகனை மேலும் தாமதமின்றி இந்தத் தீயில் வந்து விழச்செய்யுங்கள். நான் வெறுப்பவர்களில் முதன்மையானவன் அவனே” என்றான்.

அதற்கு ரித்விக்குகள், “அரசனே! தட்சகன் பயந்துகொண்டு இந்திரன் அரண்மனையில் வசிக்கிறான். சாஸ்திரங்களும் வேள்வித் தீயும் அதையே தெரியப்படுத்துகிறது. அப்போது ஏற்கனவே இந்த யாகம் தடைபடும் என்று சொன்ன லோஹிதாசன் என்ற சூதன், “அரசே! இந்த அந்தணர்கள் சொல்வது உண்மையே. இந்திரன் தட்சகனுக்கு அடைக்கலம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்து தன்னருகிலேயே வைத்திருப்பதால், தீ அவனை எரிக்க முடியவில்லை” என்றான். இவ்வாறு வேள்வியில் ஏற்பட்ட தடங்களைக் கண்டு கோபமுற்ற ஜனமேஜயன், ஹோத்ரியர்களை தன்னுடைய கடமையைச் செய்யுமாறு தூண்டினான். அவர்கள் தீயில் நெய்யை ஊற்றி மேலும் மந்திரங்களை ஓதினார்கள்.

அப்போது இந்திரன் வானத்தில் தோன்றினான். அனைத்துக் கடவுளர்களும் சுற்றிலும் வணங்க, மேகக்கூட்டங்களும், எண்ணற்ற பாடகரும், நடன மங்கையரும் தொடர, தன்னுடைய தேரில் அங்கே வந்தான். ஆனால் தட்சகன் இந்திரனின் ஆடைக்குள் மறைந்துகொண்டான். தட்சகனை அழிக்க உறுதிகொண்டிருந்த அரசன், மிகுந்த கோபத்துடன் வேதியர்களிடம், “அந்தணர்களே! தட்சகன் இந்திரனிடம் மறைந்திருப்பானாகில், அவனை இந்திரனோடு சேர்த்து இந்த வேள்வியில் விழச்செய்யுங்கள்” என்றான்.

ரித்விக்குகள் அதைக்கேட்டு, “அரசனே! இப்போது தட்சகன் இங்கே வருவான். அவனுடைய பயங்கர ஓலத்தையும், பயங்கொண்ட அழுகுரலையும் கேட்பீர்கள். வஜ்ராயுதத்தை ஏந்திய இந்திரன் தட்சகனைக் கைவிடுவான். எங்களுடைய மந்திரங்களால் அவன் இந்த நெருப்பில் விழுந்து உருத்தெரியாமல் அழிந்துபோவான். இதோ இந்திரன் தட்சகனை விட்டுவிட்டான்! பாருங்கள்! உணர்விழுந்த தட்சகன் ஆகாயத்திலிருந்து கீழே விழுகிறான். அவன் மூச்சுவிடும் ஒலியைக் கேளுங்கள். அரசனே! உன்னுடைய வேள்வி சிறப்பாக நடைபெற்றுவிட்டது. இப்போது நீ இந்த அந்தணச் சிறுவனுக்கு வேண்டிய வரத்தைக் கொடுக்கலாம்” என்றனர்.

“சிறுவனே! குழந்தைத்தனத்தோடு அழகாக இருக்கும் உனக்கு பயனுள்ள வரமொன்று தரவிரும்புகிறேன். எனவே நீ உன்னுடைய மனதில் உள்ளதைத் தயங்காது கேள். கொடுக்க முடிந்த எதையும் நான் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனமேஜயன் ஆஸ்திகனிடம் சொல்லியபோது, தட்சகன் ஷண நேரத்தில் தீயில் விழும்படியாக இருந்தான். அந்த நேரத்தில் உடனடியாக ஆஸ்திகன், “அரசனே! நீ எனக்கு வரம் கொடுக்க விரும்பினால் உடனடியாக இந்த வேள்வியை நிறுத்து. மேற்கொண்டு இதில் நாகங்கள் விழக்கூடாது” என்றான்.

அதைக்கேட்டு சற்றும் மகிழ்ச்சியடையாத ஜனமேஜயன், “நான் உனக்கு தங்கம், வெள்ளி, பசுக்கள் அல்லது உனக்கு எவற்றை அடைய ஆசையோ அவற்றைத் தருகிறேன். ஆனால் இந்த வேள்வி நிற்காது” என்றான். அதற்கு ஆஸ்திகன், “அரசனே! நான் பொன்னையோ அல்லது பொருளையோ வேண்டேன். இந்த வேள்வி நிறுத்தப்பட்டு என்னுடைய உறவினர்கள் நலமாக இருக்கவேண்டும்” என்றான். ஆனால் ஜனமேஜயன் திரும்பத் திரும்ப ஆஸ்திகனை வேறு ஏதாகினும் கேட்கும்படி வேண்டினான். அதற்கு ஆஸ்திகன் மறுத்துவிடவே, அனைத்து வேதங்களையும் கற்ற சதசயர்கள் ஒருமித்த கருத்தாக, “அவன் அவனது வரத்தைப் பெற்றுக்கொள்ளட்டும்” என்றனர்.

ஜனமேஜயன் வரத்தைக் கொடுக்கப்போகும் நேரத்தில், இந்திரனிடமிருந்து நழுவி, மயங்கியவனாக தீயில் விழப்போன தட்சகனை நோக்கி, “நில் நில் நில்” என்று மூன்று முறை சொன்னான் ஆஸ்திகன். தட்சகன் கீழே விழாமல் அப்படியே அந்தரத்தில் நின்றான். அதைக்கண்டு பெரும் கவலைகொண்டான் ஜனமேஜயன். அப்போது சதசயர்கள் அரசனை தொடர்ந்து வற்புறுத்த, “ஆஸ்திகன் விரும்பியது போலவே நடக்கட்டும். வேள்வி நிற்கட்டும். நாகங்கள் பிழைக்கட்டும். ஆஸ்திகன் மகிழட்டும். சூதன் சொன்னது உண்மையாகட்டும்” என்றான்.

ஆஸ்திகனுக்கு வரத்தைக் கொடுத்துபோது வானத்திலிருந்து மகிழ்ச்சி நிறைந்த ஆராவராமிக்க கர்ஜனை கேட்டது. பரீஷித்தின் மகனும், பாண்டவ வம்சத்து அரசனுமான ஜனமேஜயன் செய்த யாகம் இவ்வாறு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு ஜனமேஜயன் மகிழ்வுற்று, வேள்வியில் கலந்துகொண்ட அந்தணர்கள் அனைவருக்கும் நூறாயிரக் கணக்கில் செல்வங்களை காணிக்கையாக கொடுத்தான். சூதன் லோஹிதாசனுக்கும் அளவற்ற செல்வத்தைக் கொடுத்தான். பிறகு வேத முறைப்படி வேள்வியை முடித்து வைத்தான். மிக்க மகிழ்வுற்ற அவன், ஆஸ்திகனை அவனுடைய வீட்டிற்கு அனுப்பிவைத்தான். அந்தணர்களும் தங்களது நோக்கம் நிறைவேறியது கண்டு மகிழ்ந்தனர். ஜனமேஜயன் ஆஸ்திகனிடம், “நீங்கள் சதசயராக எனது அஸ்வமேத யாகத்திற்கு அவசியம் வரவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அதற்கு ஒப்புக்கொண்ட ஆஸ்திகன் அரசனை மகிழ்வித்து தனது குறிக்கோள் நிறைவேறியதை எண்ணி மனம் மகிழ்ந்தவனாக தன்னிருப்பிடம் திரும்பினான். தனது மாமன், தாய் இருவரின் பாதங்களில் விழுந்து வணங்கி, நடந்தவற்றை விரிவாக எடுத்துரைத்தான்.

அங்கு கூடியிருந்த நாகங்கள் அனைத்தும் அதைக்கேட்டு மிக்க மகிழ்ச்சியடைந்தன. அப்போது அவர்கள் தங்களது துன்பத்திலிருந்து விடுபட்டவர்களாக அளவற்ற ஆனந்தமடைந்தனர். அனைவரும் திரும்பத் திரும்ப, “நீ என்ன விரும்புகிறாய்? உன்னை மகிழ்விக்க நாங்கள் என்ன செய்யவேண்டும்? உன்னால் விடுதலை கிடைக்கப் பெற்ற நாங்கள் மிக்க மகிழ்வடைகிறோம். நாங்கள் உனக்கு என்ன வரம் கொடுப்பது?” என்று கேட்டனர். அதற்கு ஆஸ்திகன், “அந்தணர்களும் மற்றவர்களும், சாந்தமான மனத்துடன் காலையிலும் மாலையிலும் எனது இந்த நற்குணமிக்கச் செயலைப் படிப்பவர்கள் உங்களைக் கண்டு அச்சம் கொள்ளாதிருக்கட்டும்” என்றான்.

உற்சாகமான உள்ளத்துடன் அவர்கள் தனது மருமகனிடம், “நீ நினைத்தபடி அவ்வாறே நடக்கும். நீ எங்களிடம் என்ன கேட்டாயோ அதை நாங்கள் மகிழ்ச்சியுடன் செய்வோம். மிக்க புகழும் உண்மையும் உடைய ஆஸ்திகனை எவனொருவன் அழைக்கிறானோ, அவன் ஜரத்காருவிடமிருந்து ஜரத்காருவுக்கு பிறந்தவனால் எங்களிடமிருந்து பாதுகாக்கப் படுவான். யாரொருவன் ஆஸ்திகர், அர்திமன், சுனிதன் இவர்களை இரவு பகலில் நினைவுகொள்கிறானோ அவன் எங்களைக் கண்டு அச்சப்படத் தேவையில்லை. இவ்வாறு நாகங்களை நாகவேள்வியிலிருந்து காத்தவர், தனது ஆன்மாவில் தர்மத்தை நிலைநிறுத்தியவர், தனக்குப் பிறகு பல மகன்களையும், பேரன்களையும் விட்டுவிட்டு மேலுலகம் எய்தினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...