June 6, 2017

16. நாகவேள்வி

தனது தந்தையின் மரணத்தைக் குறித்த விபரங்களைத் தெளிவாகக் கேட்டறிந்த ஜனமேஜயன், “அமைச்சரே! முனிவரான காசியபருக்கும், நாகங்களின் அரசான தட்சகனுக்கும் இடையே அந்தக் காட்டில் என்ன நடந்தது? அங்கு நடந்ததைப் பார்த்தவர்கள் யார்? அதைக்கேட்ட பிறகே நாகங்களை அழிப்பதற்கான வழியைக் குறித்து நான் சிந்திக்க முடியும்” என்றான்.

“அரசனே! அவர்களுக்கிடையே நடந்ததை நாங்கள் அறிந்தது எவ்வாறு என்பதைக் கூறுகிறேன். அந்தக் காட்டில் ஒருவன் உயர்ந்த மரம் ஒன்றின் மீதேறி, யாகத்திற்கான உலர்ந்த சுள்ளிகள் எங்கே உள்ளது என்று தேடிக்கொண்டிருந்தான். அவன் அங்கிருந்ததை காசியபரும் தட்சகனும் அறியவில்லை. அப்படி அறிந்திருந்தால் அவனும் அந்த மரத்தோடு சேர்ந்து எரிந்திருப்பான். அங்கிருந்து திரும்பிய அந்த மனிதனே எங்களிடம் நடந்தவற்றைச் சொன்னான். எனவே இப்போது என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்று கேட்டார் அமைச்சர்.

அமைச்சர் சொன்னதைக் கேட்ட ஜனமேஜயன், சினத்தின் வசப்பட்டவனாக தனது கைகளை முறுக்கினான். பெருமூச்சு விட்டுக் கண்களில் நீர்மல்க அழுதான். பெருந் துயரத்தால் அறைபட்டவனாக, “உங்களிடமிருந்து எனது தந்தையின் மரணத்தைக் குறித்த விபரங்களைக் கேட்டறிந்த நான் ஒரு முடிவுக்கு வந்துவிட்டேன். எனது தந்தையைக் கொன்ற தட்சகனை அழிப்பதில் மேலும் காலம் தாழ்த்துவது சரியல்ல. காசியபர் மட்டும் சரியான நேரத்திற்கு வந்திருந்தால் இன்று என் தந்தை உயிரோடு இருந்திருப்பார். எனவே எனது தந்தையைப் பழிவாங்கிய தட்சகனை பழிக்குப் பழி வாங்கி நான் மகிழ வேண்டும்” என்றான்.

ஜனமேஜயன் இவ்வாறு சொன்னதும், அமைச்சர்கள் அதற்கு சம்மதம் தெரிவிக்க, நாகவேள்வி ஒன்றை நடத்த முடிவுசெய்தான் ஜனமேஜயன். எனவே அந்தணர்களின் சபை ஒன்றைக் கூட்டி, அந்த வேள்வி பற்றிய விவரங்களை விசாரித்தான். “என்னுடைய தந்தையைக் கொன்ற தட்சகனை பழிவாங்குவதற்கு நான் என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்லுங்கள். தட்சகனும் அவனது உறவினர்களும் எரியும் தீயில் வெந்து சாவதற்கான வழியைக் கூறுங்கள். என் தந்தை விஷத்தால் எரித்து கொல்லப்பட்டது போல நான் தட்சகனைக் கொல்ல விரும்புகிறேன்” என்றான்.

தலைமை அந்தணர், “அரசே! தங்களைப் போன்றவர்கள் செய்வதற்கான வேள்வி ஒன்றை தேவர்கள் பரிந்துரைத்திருக்கிறார்கள். நாகவேள்வி என்று சொல்லப்படும் அது புராணக் கதைகளில் சொல்லப்பட்டிருக்கிறது. மனிதர்களில் தெய்வமான தங்களைத் தவிர வேறு யாரும் அந்த வேள்வியைச் செய்யமுடியாது. புராணக் கதைகளில் சொல்லப்பட்ட அந்த வேள்வி பற்றி நாங்கள் அறிவோம்” என்றார். அதைக்கேட்ட அரசன், அப்போதே தட்சகன் தீயின் கொடிய வாயில் விழுந்து எரிந்துவிட்டதாக உறுதிசெய்தான். “நான் அந்த வேள்வியைச் செய்கிறேன். அதற்குத் தேவையான பொருட்களைச் சேகரியுங்கள்” என்று உத்தரவிட்டான்.

சாஸ்திர சம்பிரதாயங்களில் தேர்ந்த அந்தணர்கள், சாஸ்திரங்களில் சொல்லிபடி, வேள்விக்கான தளம் அமைக்க ஒரு குறிப்பிட்ட இடத்தை அளந்தார்கள். கற்றறிந்த அந்தணர்கள் முன்னிலையில், அந்த மேடை விலைமதிப்பு மிக்க பொருட்களாலும், அளவற்ற தானியங்களாலும் அணிசெய்யப்பட்டது. மேடை தயாரானதும் அதில் ஜனமேஜயனை அமரச்செய்தார்கள்.

முன்னதாக அந்த மேடை அமைப்பதற்கு முன்னர் நடந்த முக்கியமான ஒரு சம்பவம் அந்த வேள்விக்குத் தடங்கல் வரும் என்பதை உணர்த்தியது. கட்டிடக் கலையில் நிபுணனும், புராணக் கதைகள் சொல்வதில் வல்லவனுமான ஒரு சூதன், “யாகத்திற்கான மேடை அமைக்க அளவு குறிக்கப்பட்ட நேரம், இந்த வேள்வி நடைபெறாது என்பதையே சுட்டுகிறது. அந்தத் தடங்கலுக்கு ஒரு அந்தணரே காரணமாவார்” என்று சொன்னான். அதைக் கேட்ட அரசன், தன்னுடைய அனுமதியின்றி வேள்வி நடைபெறும் இடத்தில் யாரையும் நுழைய விடக்கூடாது என்று வாயிற் காப்போனுக்கு உத்தரவிட்டான்.

அதன் பிறகு முறைப்படியான அனுஷ்டானங்களுடன் வேள்வி தொடங்கியது. வேள்விக்குப் பொறுப்பேற்ற அந்தணர்கள் அனைவரும் அவரவர்க்கான பணியைச் செய்தனர். கருப்பு அங்கி அணிந்த அவர்களின் கண்கள் புகைமூட்டத்தால் செந்நிறமாகச் சிவந்திருந்தன. மந்திரங்களைச் சொல்லி வேள்வித் தீயில் படையலை இட்டனர். நாகங்களின் பெயரைச் சொல்லி படையலைத் தீயிலிட்டபோது, அந்த நாகங்கள் அச்சத்தில் நடுங்கின. அதன் பிறகு அந்த நாகங்கள் கொழுந்தவிட்டெரியும் தீயில் பரிதாபமாக ஒலமிட்டபடி வீழ்ந்தன. உடல் உப்பி, மூச்சுத்திணற, தங்களது தலையையும் வாலையும் பின்னிக்கொண்டன. வெள்ளை, கருப்பு, நீலம், ஆகிய வெவ்வேறு வண்ணங்களில் முதுமையும் இளமையும் கொண்ட எண்ணற்ற நாகங்கள் தீயில் வந்து விழுந்தன.

மரண ஓலமிட்டபடி நுறு, ஆயிரம், பத்தாயிரம், கோடி என்ற எண்ணிக்கையில் நாகங்கள் கொழுந்துவிட்டெரியும் தீ ஜூவாலையில் விழுந்தன. பல நாகங்கள் தங்களது ஆற்றலை இழந்து அழிந்தன. அப்படி அழிந்தவைகளில், சில எலியைப் போன்று சிறியன. மற்றவைகள் யானையின் தும்பிக்கை போலவும் மதங்கொண்ட யானையைப் போலவும் இருந்தன. பல்வேறு வண்ணங்களில், விஷத்துடன், பயங்கரமாக, ஆற்றலில் மிகுந்தவையாக இருந்த அந்நாகங்கள் தங்களது தாயின் சாபத்தின் விளைவாக தீயில் வந்து விழுந்தன.

வேள்வியை இயற்றுபவர்களில் அந்தணர்கள், ஹோத்ரியர்கள், ரித்விக்குகள், சதசயர்கள், உத்கதர்கள், அத்வர்யுக்கள், என பல பிரிவினர் இருந்தனர். சியவனன் வம்சத்தில் வந்த, வேதங்களைக் கற்ற புகழ்மிக்க சண்டபார்க்கவர் ஹோத்ரியராவார். வயதில் மூத்த அறவிற் சிறந்த கௌத்சர்யர் உத்கதராவார். சாரங்கர்வர், போதபிங்களர் இருவரும் அத்வர்யுக்கள். சதசயரான வியாசர் தனது மகன் மற்றும் அவரது சீடர்களான உத்தாலுகர், பிரமதகர், சுவேதகேது, பிங்களர், ஆத்ரேயர், குந்தர், ஜடரர், காலகடர், வத்ஸ்யர், சுருதசிரவஸ், கோஹலர், தேவசர்மர், மௌத்கல்யர், சமசௌரபர் ஆகியோருடன் இருந்தார். இவர்களைத் தவிர நோன்புகளைக் கடுமையாக கடைபிடிக்கும் மேலும் பல அந்தணர்கள் சதசயர்களாக ஜனமேஜயன் வேள்வியில் இருந்தனர். (சதசயர்-மந்திரம் ஓதுபவருக்கு உதவுபவர். ஹோத்ரியர்-ரிக் வேத மந்திரம் ஓதுபவர். உத்கதர்-சாம வேத மந்திரம் ஓதுபவர். அத்வர்யு-யஜூர் வேத மந்திரம் ஓதுபவர். அந்தணர்-அதர்வன வேத மந்திரம் ஓதுபவர்)

தொடர்ந்து வேள்வித் தீயில் எரிந்த நாகங்களின் உடலிலிருந்த கொழுப்பும், மஜ்ஜையும், உருகி ஆறாக வழிந்து ஓடியதால் அந்தப் பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. வேள்வியில் விழுந்து எரிந்த நாகங்கள், வேள்வியை நோக்கி ஆகாயத்தில் விழுந்துகொண்டிருந்த நாகங்கள், இன்னும் விழப்போகின்ற நாகங்கள் என அனைத்து நாகங்களின் ஒட்டுமொத்தமான பரிதாப ஓலம் அப்பிராந்தியமெங்கும் இடைவிடாது ஒலித்தது.

இதற்கிடையே நாகங்களின் அரசன் தட்சகன் ஜனமேஜயன் நாகவேள்வி நடத்துவதைக் கேள்விப்பட்டு இந்திரனுடைய அரண்மனைக்குச் சென்றான். இந்திரனிடம் தான் செய்த தீய செயலைச் சொல்லி, தனக்கு அடைக்கலம் தரும்படி வேண்டினான். அதைக்கேட்டு மகிழ்ந்த இந்திரன், “தட்சகனே! நாகங்களின் அரசனே! இங்கே நாகவேள்வி குறித்து நீ அஞ்சத் தேவையில்லை. உன்னுடைய நலனுக்காக நான் ஏற்கனவே பிரம்மனை அமைதிப் படுத்தியுள்ளேன். எனவே நீ அச்சப்படத் தேவையில்லை. உன் மனதில் உள்ள பயத்தை விரட்டியடி” என்று சொன்னான். இந்திரனின் உறுதிமொழி கேட்டு தட்சகன் அங்கேயே மகிழ்ச்சியாக இருந்தான்.

ஆயினும் வாசுகி, பல நாகங்கள் தொடர்ந்து நாகவேள்வியில் வீழ்ந்து இறக்க, ஒரு சிலர் மட்டுமே தன்னுடைய வம்சத்தில் எஞ்சியிருப்பதைக் கண்டு மனவேதனை அடைந்தான். எனவே அவன் மிகுந்த வருத்தத்துடன் தனது சகோதரி வினதையிடம், உடைந்துபோன இதயத்துடன், “என்னுடைய உடலுறுப்புகள் எரிகின்றன. என் பார்வை மங்கிக்கொண்டு வருகிறது. மயக்கம் ஏற்படுவதால் நான் கீழே விழுவது போலிருக்கிறேன். என் தலை சுற்றுகிறது. என்னுடைய இதயம் வெடித்து விடும்போல் இருக்கிறது. நான் முழுவதும் செயலிழந்து விட்டதால், எதிர்ப்பின்றி அந்த வேள்வித் தீயில் விழுந்துவிடுவேன் என எண்ணுகிறேன். பரீஷித்து மகனின் வேள்வி, நம் இனத்தை முற்றாக அழித்தபிறகே நிற்கும் என்று தோன்றுகிறது. நானும் எனது முன்னோர்களின் இருப்பிடத்திற்குச் செல்லப் போகிறேன் என்பது விளங்கிவிட்டது. சதோதரியே! நான் உன்னை ஜரத்காருவிடம் எதற்காகக் கொடுத்தேனோ அதற்கான நேரம் வந்துவிட்டது. எங்களையும் எங்கள் சந்ததியையும் காப்பாற்று. ஆஸ்திகனை வேள்வி நடக்குமிடத்திற்கு அனுப்ப வேண்டும். இதையே முன்பு பிரம்மனும் என்னிடம் கூறியுள்ளார். எனவே வேதங்களில் கரைகண்ட, பெரியோர்களால் மதிக்கத்தக்க, உன்னுடைய அன்பு மகனை, என்னையும் என்னைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றும் பொருட்டு அனுப்பு” என்றான்.

தனது மகனை அழைத்த ஜரத்காரு வாசுகி சொன்னவற்றை அவனிடம் சொல்லி, “மகனே! என்னுடைய சகோதரன் என்னை உன்னுடைய தந்தையிடம் எதற்காகக் கொடுத்தாரோ அதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது. எனவே ஆகவேண்டியதைச் செய்” என்றாள். “என்னுடைய மாமா உன்னை எதற்காக என்னுடைய தந்தையிடம் கொடுத்தார்? விரிவாகச் சொல்லுங்கள் அப்போதுதான் நான் செய்யவேண்டியதைச் செய்யமுடியும்” என்றான் சிறுவனாக ஆஸ்திகன்.

தனது உறவினர்களின் நலன் கருதி நடந்த அனைத்தையும் தனது மகனிடம் சொன்ன ஜரத்காரு, “எனவே அந்த நேரம் வந்துவிட்டது. எங்கள் அனைவரையும் அச்சத்திலிருந்து காப்பாற்று. என்னை உனது தந்தையிடம் கொடுத்ததற்கான காரணம் வீணாகிவிடக் கூடாது. மகனே! நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டாள்.

தனது தாயின் வார்த்தைக்கு ஒப்புக்கொண்ட ஆஸ்திகன் வாசுகியிடம், “நாகங்களில் சிறந்தவரே! நான் உங்களைக் காக்கிறேன். நான் உண்மையாகச் சொல்கிறேன், உங்களை உங்களது சாபத்திலிருந்து விடுவிப்பேன். அனைத்து அச்சங்களையும் தூர எறியுங்கள். நான் விளையாட்டிற்குக் கூட பொய் சொன்னதில்லை என்பதால் இந்த முக்கியமான விஷயத்தில் சொல்வேனா? நான் இப்போதே வேள்வி நடக்குமிடத்திற்குச் செல்கிறேன். ஜனமேஜயனிடம் நற்பேற்றைத் தரும் இதமான வார்த்தைகளைச் சொல்கிறேன். அதைக்கேட்கும் அரசன், தானாகவே முன்வந்து வேள்வியை நிறுத்திவிடுவார். நீங்கள் இனிமேலும் அச்சம்கொள்ளத் தேவையில்லை. நான் சொல்வது அனைத்தையும் நம்புங்கள்” என்றான்.
Related Posts Plugin for WordPress, Blogger...