June 5, 2017

15. ஆஸ்திகர் பிறப்பு

நாகங்களின் அரசன் வாசுகி நிர்மாணித்துத் தந்த அழகிய வீட்டில், தவவல்லமை மிக்க முனிவரான ஜரத்காரு தன் மனைவி ஜரத்காருவுடன் மகிழ்ந்திருந்தார். அந்த வீட்டின் படுக்கையறையில் அழகிய வேளைப்பாடுகள் கொண்ட மஞ்சத்தில், அற்புதமான படுக்கை விரிப்பில் தன் மனைவியோடு உறங்கி இன்புற்றிருந்தார். அவர் தனது மனைவியிடம் முன்னதாகவே, “எனக்கு மகிழ்வைத் தராத எதையும் என்னிடம் பேசவோ அல்லது செய்யவோ கூடாது. அப்படி ஏதேனும் நடந்தால் நான் மேற்கொண்டி இந்த வீட்டில் வசிக்காது வெளியேறிவிடுவேன். நான் சொல்லும் இந்த வார்த்தைகளை எப்போதும் நினைவில் வைத்திரு” என்று எச்சரித்திருந்தார். அவரது கட்டளையை ஏற்றுக்கொண்ட ஜரத்காரு பதற்றத்துடனும் துன்பத்துடனும், அனைத்து வழிகளிலும் தன் கணவனுக்கு மகிழ்வைத் தரும் செயல்களையே செய்துவந்தாள். நற்பேறுடைய அந்த மங்கை ஒரு காகத்தைப் போல அர்ப்பணிப்புணர்வுடன் கணவனை கவனித்துக் கொண்டாள்.

ஜரத்காரு தனது தீட்டு காலத்திற்குப் பிறகு ஒரு நாள், குளித்துத் தன்னை தூய்மைப் படுத்திக்கொண்ட பின்னர், தனது கணவனுடன் கூடினாள். அதனால் அக்னிதேவனைப் போன்ற பிரகாசமிக்க ஒரு கரு அவளுடைய கர்ப்பத்தில் குழந்தையாக உருப்பெற்றது. வளர்பிறைச் சந்திரனைப் போல அவள் கர்ப்பத்தில் நாளும் குழுந்தை வளர்ந்தது.

அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு ஜரத்காரு தன்னுடைய மனைவியின் மடியில் தலைவைத்து, சோர்வுற்றவராக படுத்திருந்தார். அப்போது சூரியன் மறையும் நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. அன்றுடன் அந்த நாள் முடியப்போவதால், அன்று தனது கணவன் செய்யவேண்டிய அனுஷ்டானங்களைச் செய்யாது போனால் தர்மத்திற்கு இழுக்கு வந்துவிடுமே என்று அஞ்சினாள். 'நான் இப்போது என்ன செய்வது? நான் எனது கணவனை எழுப்புவதா இல்லை வேண்டாமா? வாழ்நாள் முழுதும் கடுமையாக தர்மத்தைக் கடைபிடித்த கணவனுக்கு நான் என்ன செய்வது? அவரை எழுப்புவதால் நேரும் கோபம் ஒருபுறம் இருப்பினும், அவர் தனது தர்மத்தைச் செய்யாமல் விடுவதால் ஏற்படும் தீமையே அதிகமானது' என்று முடிவு செய்த ஜரத்காரு தன் கணவனை எழுப்ப முடிவு செய்தாள்.

எனவே அவள் மெல்லிய இனிய குரலில், “தவத்திற் சிறந்தவரே! சூரியன் அஸ்தமிக்கப் போகிறான் எழுந்திருங்கள். நோன்புகளைக் கடுமையாக கடைபிடிப்பவரே! நீரை எடுத்து மாலை பிரார்த்தனையைச் செய்யுங்கள். அச்சம் தருவதும் அழகானதுமான அக்னிஹோத்திரத்திற்கான நேரம் நெருங்கிவிட்டது. இருள் மெல்லியதாக மேற்குப் புறத்தில் படர்ந்துகொண்டிருக்கிறது” என்றாள்.

அதைக்கேட்டு விழித்த ஜரத்காரு மிக்க ஆத்திரம் கொண்டு, “நாகமே! நீ என்னை அவமதித்து விட்டாய். இனிமேல் நான் உன்னுடன் வாழ முடியாது. நான் எங்கிருந்து வந்தேனோ அங்கேயே செல்கிறேன். அழகான தொடைகளை உடையவளே! நான் உறங்குகையில், சூரியன் மறைவதற்குச் சக்தியற்றவன் என்பதை நானறிவேன். எவனோருவன் ஓரிடத்தில் அவமதிக்கப்பட்டானோ அதன் பிறகு அவன் அந்த இடத்திலிருக்க விரும்பமாட்டான். என்னைப் போன்றவர்கள், என்னைப்போன்று தர்மத்தை அனுசரிப்பவர்கள், தனியாக இருப்பதே நல்லது” என்றார்.

தன் கணவன் கூறிய வார்த்தைகளைக் கேட்டு ஜரத்காருவின் இதயம் நடுங்கியது. “அந்தணரே! நான் தங்களை அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் எழுப்பவில்லை. தாங்கள், தங்களுடைய தர்மத்தை அனுசரிக்கத் தவறிவிடக்கூடாது என்பதற்காகவே எழுப்பினேன்” என்றாள் கண்ணீருடன்.

ஆனால் தன்னுடைய மனைவியை கைவிடவேண்டும் என்று முடிவுசெய்துவிட்ட ஜரத்காரு கோபத்துடன், “நாகமே! நான் இதுவரை பொய் உரைத்ததில்லை. ஆகவே நான் செல்கிறேன். அழகானவளே! இந்த உடன்படிக்கை ஏற்கனவே உனக்கும் உனது சகோதரனுக்குமிடையே செய்யப்பட்டது. உன்னுடன் இருந்த நாட்களை நான் மிகவும் மகிழ்ச்சியுடன கழித்தேன். நான் சென்றதும், நான் உன்னைவிட்டுச் சென்றுவிட்டதாக உனது சகோதரனிடம் சொல். நான் உன்னை விட்டுச் சென்றதும் எனக்காக நீ தயவுசெய்து வருத்தப்படாதே” என்றார்.

கணவன் வார்த்தைகள் ஜரத்காருவை பதட்டமடையச் செய்ய துயரத்தில் ஆழ்ந்தாள். நா வறள, கண்கள் கலங்க, குரல் தழுதழுக்க, இதயம் படபடக்க நின்றாள். அதன் பிறகு தன்னை சமாளித்தவளாக தன் கணவனை நோக்கிக் கைகூப்பி, “தர்மத்தை பின்பற்றுபவரே! நீர் இப்படி என்னைக் கைவிடுவது தகாது. நான் குற்றமற்றவள். நீங்கள் மட்டுமே தர்மத்தை அனுசரிப்பதாகக் கருதவேண்டம் நானும் கூடத்தான், தங்களுக்கு உவப்பானவற்றைச் செய்வதன் மூலம் தர்மத்தைக் கடைபிடிக்கிறேன். அந்தணர்களிற் சிறந்தவரே! என்ன காரணத்திற்காகத் நான் தங்களிடம் ஒப்படைக்கப்பட்டேனோ, அதை நான் இன்னும் செய்து முடிக்கவில்லை. நான் பாவி. வாசுகி என்னிடம் என்ன சொன்னான்? எங்களது தாயின் சாபத்திலிருந்து எங்களைக் காக்க, எங்களது உறவினர்கள் உங்கள் மூலமாக எனக்கொரு மகனை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் அவன் இன்னும் தோன்றவில்லை. எங்கள் உறவினர்களின் நலன் உங்கள் மூலமாக நான் பெறுகின்ற மகனிடமே உள்ளது. அந்தணரே! அதனால் நான் தங்களை கெஞ்சிக்கேட்டுக்கொள்கிறேன். நான் எனது வம்சத்தின் சந்ததியை என் வயிற்றில் கர்பம் தரிக்கும் வரையில் என்னை விட்டு அகலாதீர்கள். உங்களைப் போன்றவர்கள் ஒரு குற்றமற்ற அபலையை கைவிடுவது முறையல்ல” என்றாள்.

இவ்வாறு தன் மனைவி சொன்னதும் அந்தச் சூழ்நிலைக்கு தக்கவிதமாக ஜரத்காரு, “இப்போது உன்னுடைய கர்ப்பத்தில் இருப்பவன் ஒரு ரிஷியே. அவன் அக்னி தேவனைப் போன்றவன். வேத வேதாந்தங்களைக் கற்று தர்மத்தை முறைப்படி அனுசரிப்பவனாக அவன் இருப்பான்” என்று சொன்னார். அதன் பிறகு மேலும் தாமதிக்காமல் அவர் அங்கிருந்து சென்றார். அவரது உள்ளம் மீண்டும் மேலான தவங்களைச் செய்வதில் நிலைத்து விட்டது.

தன் கணவன் அகன்ற பிறகு, தனது சகோதரனிடம் சென்ற ஜரத்காரு நடந்த அனைத்தையும் கூறினாள். அந்த மகிழ்ச்சியற்ற செய்தியைக் கேட்ட வாசுகி, முன்பை விட அதிக துயரம் கொண்டவனாக, “இனியவளே! நீ எதனால் ஜரத்காருவுக்கு கொடுக்கப்பட்டாய் என்பதும் நீ என்ன செய்யவேண்டும் என்பதையும் நீயே நன்கறிவாய். அனைத்து நாகங்களின் நன்மைக்காக உன்னிடம் ஒரு மகன் தோன்றினாலும் தோன்றலாம். அவன் நம்மை நாகவேள்வியின் அழிவிலிருந்து காப்பாற்றினாலும் காப்பாற்றலாம். முன்னொரு காலத்தில் பிரம்மனும் தேவர்களும் என்னிடம் இதையே கூறினார்கள். அன்பானவளே! நீ அந்த முனிவரால் கர்பந்தரித்திருக்கிறாய் அல்லவா? அறிவுள்ள மனிதனின் திருமணம் பலனற்று போகக்கூடாது என்பதே என் விருப்பம். எனவே அது சம்பந்தமாக உன்னிடம் கேள்வி கேட்பது அர்த்தமற்றது. இருந்தாலும் இது முக்கியமான விஷயம் என்பதால் உன்னிடம் கேட்காமல் இருக்க முடியவில்லை. உனது கணவர் எப்போதும் தவத்தில் ஈடுபடுபவர். எளிதாக சினத்தின் வசப்படுபவர். அவர் என்னை சபித்துவிடலாம் என்பதால் நான் அவரைத் தொடர்ந்து செல்ல மாட்டேன். உனது கணவர் என்ன செய்தார் என்பதைச் சொல்லி, நீண்ட காலமாக என் உள்ளத்தில் தைத்து என்னை வேதனைப் படுத்தும் கொடிய முள்ளை அகற்றிவிடு” என்றான்.

ஜரத்காரு வாசுகியை அமைதிப்படுத்தும் விதமாக, “நான் என் கணவனிடமிருந்து என் கர்ப்பத்தைப் பற்றிய விஷயத்தைக் கேட்டறிந்தேன். அவர் விளையாட்டிற்குக் கூட பொய் சொல்பவரல்ல. இத்தகைய முக்கியமான விஷயத்தில் அவர் ஏன் பொய் சொல்லப் போகிறார்? 'பலனை எண்ணிக் கலங்காதே, தீயைப் போன்ற, சூரியனைப் போன்ற ஒரு மகன் பிறப்பான்' என்று சொல்லியுள்ளார். அதனால் சகோதரனே! உன் மனதை வாட்டும் பெரிய துன்பம் மறைந்தது” என்றாள்.

தனது சகோதரியின் வார்த்தை கேட்டு நாகங்களின் அரசன் வாசுகி மிகவும் மகிழ்ந்தான். தனது சகோதரியை அன்புடன் அரவணைத்து, தேவையான பரிசுகளைக் கொடுத்து வாழ்த்தினான். ஒளி வீசும் அந்தக் கரு அவளது கர்ப்பத்தில் சூரியனாகப் பிரகாசித்து, சுக்கலபஷத்தில் வானத்தில் வளரும் வளர்பிறைச் சந்திரனாக வளர்ந்தது. உரிய காலம் வந்ததும் ஜரத்காரு, தனது தாய் தந்தையரின் அச்சத்தை அழிக்கும் ஆற்றல் உடைய தெய்வீக மகனைப் பெற்றெடுத்தாள். அவன் நாகங்களின் அரசன் வாசுகியின் வீட்டில் வளர்ந்தான். வேத வேதாந்தங்களை பிருகு முனியின் மகன் சியவன ரிஷியிடம் கற்றான். 

அவன் சிறுவனாக இருக்கும் போதே கடுமையாக நோன்புகளைக் கடைபிடித்தான். மேலும் அவன் ஞானத்திலும், அறிவிலும், பண்பிலும் சிறந்து விளங்கினான். அவன் உலகெங்கும் ஆஸ்திகன் என்ற பெயரால் புகழ்பெற்றிருந்தான். அவன் அவனது தாயின் கருவில் இருந்தபோது, அவனது தந்தை “இருக்கிறான்” என்று சொல்லிச் சென்றதால் அவன் அந்தப் பெயரைப் பெற்றான். நாகங்களின் அரசனுடைய வீட்டில் வளர்ந்த அவன் ஜாக்கிரதையாக கண்காணிக்கப் பட்டான். அவன் திரிசூலம் ஏந்திய சிவனைப் போல பொன்னிறமாக ஜொலித்தான். அனைத்து நாகங்களையும் இன்பத்தில் திளைக்கச் செய்தபடி அவன் வளர்ந்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...