June 4, 2017

14. நாகங்களின் ஆலோசனை

நாகங்களில் சிறந்த வாசுகி, தன் தாயின் சாபத்தை அறிந்து அதை நிவர்த்திக்க தீர்மானித்துத் தன்னுடைய அனைத்து சகோதரர்களையும் அழைத்து ஆலோசனை செய்தான். “களங்கமற்றவர்களே! நம் அனைவரின் மீதும் சாபம் விடப்பட்டுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்கள். நாம் நம்முடைய சாபத்திலிருந்து எப்படி விடுபடுவது என்பது குறித்து ஆலோசிக்கவே இங்கு கூடியுள்ளோம். விமோசனம் அற்ற சாபம் என்று ஏதுமில்லை. ஆனால் நாகங்களே! எவனொருவன் தன்னுடைய தாயால் சபிக்கப்பட்டிருக்கிறானோ அவனுக்கு விமோசனமில்லை. இந்தச் சாபம் பிரம்மன் முன்னிலையில் நமக்கு இடப்பட்டிருக்கிறது என்பதை அறியும்போது என் இதயம் நடுங்குகிறது. சந்தேகமின்றி நம்முடைய அழிவு நிச்சயிக்கபட்டுவிட்டது. இல்லையெனில் நம்முடைய தாய் நம்மைச் சபித்தபோது பிரம்மன் ஏன் தடுக்கவில்லை? எனவே நாம் நம்முடைய உடல்நலத்தை எவ்வாறு பேணுவது என்பது குறித்து, காலத்தை வீணடிக்காமல், ஆலோசிப்போம். நாம் நம்முடைய ஆலோசனையால், நம்மை காத்துக்கொள்வதற்கான வழியைக் கண்டுபிடிப்போம். முன்னொரு சமயம், அக்னிதேவன் யாருடைய கண்களிலும் படாமல் மறைந்த போது அவனை தேவர்கள் மீண்டும் திரும்பக் கொண்டுவந்தது போல, நாகத்தை அழிக்க ஜனமேஜயன் மேற்கொள்ளப்போகும் யாகத்தை நடக்கவிடாமல் செய்வோம் அல்லது முடிவுக்குக் கொண்டு வருவோம்” இவ்வாறு வாசுகி சொன்னதும் அனைத்து நாகங்களும் தங்களுடைய கருத்துக்களை முன்வைத்தன.

“அந்தணர்களாக உருமாறிச் சென்று ஜனமேஜயனிடம் இந்தக யாகத்தைச் செய்ய வேண்டாம் என்று மன்றாடுவோம்” என்றன சில நாகங்கள்.

இன்னும் சில தங்களை புத்திசாலிகள் என்று கருதிக்கொண்டு, “நாம் அனைவரும் அவனது ஆலோசகர்களாவோம். அப்போது அவன் நம்மிடம் அனைத்துச் சடங்குகளையும் குறித்து கருத்து கேட்பான். அப்போது இந்த யாகத்தைச் செய்யவேண்டாம் என்று யோசனை தெரிவிப்போம். நிச்சயமாக அவன் இந்த யாகத்தை ஏன் செய்யக்கூடாது என்று கேட்பான். அந்த சமயத்தில் நாம் இந்த யாகத்தை செய்யக்கூடாததற்கான காரணத்தைச் சொல்வோம். இந்த உலகத்திற்கு மட்டுமின்றி அனைத்து உலகுக்கும் அதனால் என்னென்ன இன்னல்கள் நேரும் என்பதைச் சுட்டிக்காட்டுவோம். இல்லையெனில் அரசனின் நலனில் அக்கறை கொண்ட, நாக வேள்வியின் அனைத்து சடங்குகளையும நன்கறிந்த, எவனொருவன் அந்த யாகத்தை நடத்த தலைமை ஏற்கிறானோ, அவனை நம்மில் ஒருவர் தீண்டி எமனுலகுக்கு அனுப்புவோம். அங்ஙனம் அவன் கொல்லப்பட்ட பிறகு வேள்வி எவ்வாறு நடைபெறும்? அதன் பிறகு வேறொருவன் நியமிக்கப்பட்டால் அவனையும் கடிப்போம். இதனால் நமது எண்ணம் ஈடேறும்” என்றன.

தர்மத்தைக் கடைபிடிக்கும் சில நாகங்கள், “இந்த யோசனை நல்லதன்று. அந்தணர்களைக் கொல்வது தகாது. தர்மத்திற்குச் சரியான முறையில் எந்த அபாயமும் நேராமல், அமைதியான வழியைப் பின்பற்றுவதே நன்மை பயக்கும். அதர்மம் அனைத்துலகையும் அழித்துவிடும் என்பதை நாம் நன்கறிவோம்” என்றன.

“நாம் மேகங்களாக மாறிச்சென்று மின்னலுடன் கூடிய மழையைப் பொழியச் செய்து வேள்வியின் நெருப்பை அணைத்து விடுவோம்” என்றன சில நாகங்கள்.

மேலும் சில நாகங்கள், “நாம் இரவில் யாரும் அறியாமல் சென்று யாகம் செய்யும் அகப்பையை திருடிக்கொண்டு வந்துவிடுவோம். இது யாகத்திற்கு தடையை உண்டு பண்ணும். இல்லையெனில் நாம் நூறாயிரக் கணக்காகச் சென்று அனைவரையும் கடித்து அச்சத்தை உண்டு பண்ணுவோம். அதுவுமில்லையேல் யாகங்களுக்கான உணவில் நாம் நம்முடைய மலத்தையும் சிறுநீரையும் கழித்து அசுத்தமானதாக்குவோம்” என்றன.

“நாம் அந்தணர்களாக மாறி யாகத்திற்குத் தலைமையேற்று, ஆரம்பத்திலேயே நம்முடைய தட்சிணையைக் கேட்டு யாகத்தைத் தடைசெய்வோம். அப்போது அவன் நாம் கேட்பதை இல்லையென்று சொல்லாமல் செய்வான்” என்றன சில நாகங்கள்.

“அரசன் நீர் விளையாட்டு விளையாடும்போது, அவனை நம்முடைய இருப்பிடத்திற்கு தூக்கிச் சென்று கட்டிப் போடுவோம். அதனால் யாகம் தடைபடும்” என்றன வேறு சில நாகங்கள்.

தங்களை ஆற்றல் மிக்கவர்களாகக் கருதிக்கொண்டு சில நாகங்கள், “நேராக அரனிடம் சென்று உடனடியாக அவனைக் கடிப்போம். அதனால் நம்முடைய குறிக்கோள் நிறைவேறும். அவனுடைய மரணத்தின் வாயிலாக நம்முடைய அனைத்து இன்னல்களின் வேர்களும் அறுபடும். இதுவே எங்களின் அறிவார்ந்த முடிவான யோசனையாகும். அரசனே! நீ இதை ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில், இப்போதே செல்வோம்” என்றன வாசுகியிடம்.

இவ்வாறு சொன்ன நாகங்கள் அனைத்தும், முடிவை எதிர்நோக்கி, நாகங்களின் அரசனான வாசுகியை நோக்கின. சற்று நேரம் யோசித்த வாசுகி, “நாகங்களே! உங்களது முடிவான யோசனை செயல்படுத்துவதற்கு உகந்ததல்ல. நீங்கள் சொன்ன திட்டங்களில் யாருடைய திட்டமும் சரியானதாக எனக்குத் தோன்றவில்லை. நம்முடைய நலனுக்கு உகந்ததான எத்தகைய யோசனையை நான் சொல்வது? என்றறியாத காரணத்தாலேயே நான் கவலைப்படுகிறேன். நான் எடுக்கும் முடிவின் நன்மையும் தீமையும் என்னை மட்டுமே சேரும்” என்றான்.

அனைத்து நாகங்களும் வாசுகியும் சொன்னதைக் கேட்ட ஏலபத்திரன் என்ற நாகம், “இந்த யாகம் நடப்பது உறுதி. பாண்டவ அரசன் ஜனமேஜயனால் நமக்குக் கெடுதல் நேரும் என்பதும் நிச்சயம். விதியால் அல்லற்படும் எவரும் அந்த விதியிடமிருந்தே தீர்வைப் பெறவேண்டும். அதைத் தவிர தஞ்சமடைய வேறெந்த வழியும் இல்லை. அதனால் விதி ஒன்றுதான் நமது புகலிடம். என்னுடைய வார்த்தையை கவனமாகக் கேளுங்கள். நாகங்களில் சிறந்தவர்களே! எப்போது இந்த சாபம் விதிக்கப்பட்டதோ அப்போது நான் மிகவும் பயந்து என்னுடைய தாயின் மடியில் ஏறிப் பதுங்கினேன். சாபத்தால் கவலையுற்ற தேவர்கள் பிரம்மனிடம் பேசிக்கொண்டிருந்ததை அங்கே நான் கேட்டேன். 

“பிரம்மனே! தேவர்களின் தேவனே! இத்தனை அன்பான குழந்தைகளைப் பெற்ற கத்ரு தங்கள் முன்னிலையில் எப்படி இவ்வாறு சபிக்க முடிந்தது? நீங்களும் அதற்கு ஒப்புக்கொண்டு விட்டீர்கள். நீங்கள் அவளை ஏன் தடுக்கவில்லை என்பதைத் தெரிந்துகொள்ள விரும்புகிறோம்” என்று தேவர்கள் பிரம்மனிடம் கேட்டார்கள்.

“நாகங்கள் பன்மடங்காக பெருகக் கூடியவை. முழுதும் விஷம் கொண்ட அவைகள் இரக்கமற்றவை, அச்சம் தரத்தக்க வீரியமிக்கவை. பிற அனைத்து உயிர்களின் நலன் கருதியே நான் கத்ருவை தடைசெய்யவில்லை. விஷத்தன்மையும், அற்பக் காரணங்களுக்காக கடிக்கும் இயல்பும் கொண்டு, தர்மத்தைக் கடைபிடிக்காமலிருக்கும் நாகங்களின் இறப்பு விதிக்கப்பட்டது. ஆனால் ஏனைய, தர்மத்தை முறைப்படி அனுசரிக்கும் நாகங்கள், தங்களுக்கு அபாயம் நேரும்போது எவ்வாறு தப்பிக்கும் என்பதைக் கூறுகிறேன் கேளுங்கள். யாயாவரர் வம்சத்தில் சிறந்த, ஞானமிக்க, கண்டிப்புள்ள, சுயகட்டுப்பாடுடைய, ஜரத்காரு என்ற ரிஷி தோன்றுவார். அந்த ஜரத்காருவுக்கு, தவத்தின் ஆற்றல் மிக்க ஆஸ்திகன் என்ற மகன் பிறப்பான். அவன் நாகவேள்வியைத் தடுத்து நிறுத்துவான். அப்போது எந்தெந்த நாகங்கள் தர்மத்தை கடைபிடித்தனவோ அவைகள் தப்பிக்கும்” என்று பிரம்மன் சொல்ல அதற்கு தேவர்களும் ஒப்புக்கொண்டார்கள்” என்று சொன்னது.

மேலும் ஏலபத்திரன், “வாசுகி! நான் ஜரத்காரு எனும் பெயரில் உனக்கு ஒரு தங்கை இருப்பதை அறிகிறேன். அவளை அந்த ரிஷிக்கு பிச்சையாகக் கொடு. அவ்வாறு செய்தால் நாகங்களுக்கு வரவிருக்கும் அபாயம் நீங்கிவிடும். நான் இந்த தப்பிக்கும் மார்க்கத்தையே என் தாயின் மடியில் பதுங்கியிருந்தபோது கேட்டேன்” என்றது.

ஏலபத்திரன் கூறியதைக் கேட்ட நாகங்கள் சந்தோஷத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்தன.

Related Posts Plugin for WordPress, Blogger...