June 3, 2017

13. ஆதிசேஷன் பூமியைத் தாங்கியது!

கத்ருவின் மகனான சேஷன், தன் தாயைப் பிரிந்து, கடுமையான நோன்புகளைக் கடைபிடித்து, காற்றை உண்டு கடுந்தவம் புரிந்தான். அவன் கந்தமாதன மலைக்குச் சென்று, பதரி, கோகர்ணா, புஷ்கரண்யா மற்றும் இமாலய மலைச் சிகரங்களில் தன்னுடைய தவத்தைத் தொடர்ந்து செய்தான். ஐம்புலன்களையும் அடக்கி, கடுமையான நோன்புகளைக் கடைபிடித்து, புண்ணி தீர்த்தங்களில் தன்னுடைய முழு நேரத்தையும் செலவிட்டான்.

சடைமுடியும், கந்தை ஆடையும், வற்றிய உடலுமாக தொடர்ந்து கடுந்தவம் செய்த அவனை பிரம்மன், “சேஷனே! நீ என்ன செய்கிறாய்? அனைத்து உயிர்களின் நலனையும் சற்றே உன் மனதில் வைப்பாயாக. களங்கமற்றவனே! உன்னுடைய கடுமையான தவத்தால் நீ அனைத்து உயிர்களையும் துன்பம் கொள்ளச் செய்கிறாய். சேஷனே! உன்னுடைய மனதில் உள்ள விரும்பம் இன்னதென்று சொல்” என்று கேட்டார்.

“என்னோடு என் தாயுடைய கருவில் பிறந்த என்னுடைய சகோதரர்கள் துர்க்குணம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். நான் அவர்களுடன் வாழ விரும்பவில்லை. எனவே நான் என்னுடைய தவத்தைச் செய்ய அனுமதியுங்கள். பெரும் பகைவர்களைப் போல எப்போதும் தங்களுக்குள் பொறாமை கொண்டு திரிகிறார்கள். ஆகவேதான் நான் தவத்தை மேற்கொண்டேன். நான் அவர்களின் முகத்தில் விழிக்க விரும்பவில்லை. பாட்டனே! வினதையின் மகன் எங்களுக்குச் சகோதரனாக இருந்தபோதும், அவர்கள் வினதையிடமும் அவளுடைய மகனிடமும் அன்புடையவர்களாக இல்லை. அவர்கள் அவனிடம் எப்போதும் தங்களது வெறுப்பையே காட்டி வருகின்றனர். எங்களுடைய தந்தையான கசியபர் கொடுத்த வரத்தினால் அவன் ஆற்றல் மிக்கவனாக இருக்கிறான். எனவே என்னுடைய உடல் இந்த மண்ணில் சாயும்வரை நான் இத்தகைய கடுந்தவத்தை மேற்கொள்வேன். இனி நான் இந்தப் பிறவியில் மட்டுமின்றி அடுத்த பிறவியிலும் அவர்களுடன் சேர்ந்து வாழமாட்டேன்” என்று தன்னுடைய துயரத்தைச் சொன்னான் சேஷன்.

“சேஷனே! உன்னுடைய சகோதரர்கள் என்ன செய்துவருகிறார்கள் என்பதை நான் நன்கறிவேன். உன்னுடைய தாய் செய்த குற்றத்தால் அவர்களுக்கு முன்னே மிகப்பெரிய அபாயம் உருவாகிக்கொண்டிருக்கிறது. நான் முன்னதாகவே அதைத் தடுக்க விதிவிலக்கு ஏற்படுத்தியிருக்கிறேன். எனவே நீ உன்னுடைய சகோதரர்களை நினைத்து வருந்தாதே. உனக்கு என்ன வரம் வேண்டுமோ அதைக் கேள். நான் உன்செயலால் மிகவும் மகிழ்வுற்றிருப்பதால் உனக்கு வரம் ஒன்று கொடுக்க ஆசைப்படுகிறேன். நாகங்களில் சிறந்தவனே! உன்னுடை மனதை தர்மத்தை நோக்கிச் செலுத்தியிருப்பது நன்மையானதே. நீ உன்னுடைய மனதை மேலும் தர்மத்திலேயே நிலைத்திருக்கச் செய்வாயாக” என்றார் பிரம்ம தேவன்.

“தெய்வீகப் பாட்டனே! இறைவனே! எனது மனம் எப்போதும் சாந்தியிலும் தவத்திலும் நிலைத்து, தர்மத்திலேயே மகிழ்ந்திருக்க வரம் வேண்டுகிறேன்.”

“சேஷா! நான் உன்னுடைய தன்னலமற்ற குணத்தையும், அமைதியை விரும்பும் பண்பையும் கண்டு மிகவும் மகிழ்கிறேன். அனைத்து உயிர்களின் நன்மைக்காக, உன்னுடைய வார்த்தைகள் நிறைவேறட்டும் என்று கட்டளையிடுகிறேன். மலைகள், காடுகள், நகரங்கள், கடல்கள் அனைத்தையும் உள்ளடக்கிய இந்த பரந்த உலகம் உறுதியற்றதாயுள்ளது. எனவே நீ உன்னுடைய ஆற்றலால் அதை நிலைக்கச் செய்.”

“வரம் கொடுக்கும் வள்ளலே! தங்கள் கட்டளைப் படியே இந்த பூமியை நிலைக்கச் செய்கிறேன். இந்த உலகத்தை என் தலை மீது வையுங்கள்.”

“நாகங்களில் சிறந்தவனே! நீ பூமிக்கடியில் செல். பூமி மாதா உனக்கு வழிவிடுவாள். அங்கிருந்து நீ இந்த பூமியைத் தாங்கிப் பிடி. என்னால் பெரிதும் மதிக்கத்தக்க அந்தக் காரியத்தைச் செய்து முடி.”

பிரம்மன் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட நாகங்களில் முதன்மையான சேஷன் பூமிக்கடியில் சென்று அங்கிருந்து பூமி மாதாவைத் தாங்கிப் பிடித்தான். கடலெனும் கச்சையை சுற்றியிருந்த அவளைத் தன் தலையால் தாங்கிப் பிடித்தான்.

அவனது செயலைக் கண்டு மகிழ்ந்த பிரம்மன், “சேஷனே! நாகங்களில் நீயே சிறந்தவன். நீ ஒருவனாக உன்னுடைய எல்லையற்ற உடலின் சுருளால் பூமி மாதாவைச் சுற்றிப் பிடித்துத் தாங்கியிப்பதால் நீயே இனி தர்மத்தின் தலைவன். நான் செய்யும் செயலுக்குச் சற்றும் குறைந்ததல்ல உன்னுடைது” என்றான்.

அன்றிலிருந்து சேஷனான ஆதிசேஷன், பிரம்மனின் கட்டளையை ஏற்று, தன்னுடைய ஆற்றலால் பூமியைத் தாங்கிப் பிடித்திருக்கிறான். கடவுளர்களில் முதன்மையான பிரம்மன் அதன் பிறகு, வினதையின் மகனான கருடனை சேஷனின் உதவியாளனாக நியமித்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...