June 1, 2017

11. அமிர்தத்தை அபகரித்த கருடன்

யானையையும், ஆமையையும் உண்டு தன்னுடைய பசியைத் தணித்த கருடன், மனோவேகத்தில், அந்த மலைச்சிகரத்திலிருந்து எழுந்து விண்ணில் பறந்தான். அப்போது பெரும் உற்பாதம் நிகழக்கூடிய தீய சகுனங்கள் தேவர்களுக்குத் தோன்றியது. இந்திரனுக்கு துன்பம் தரும்விதமாக அவனது வஜ்ராயுதம் முன்னும் பின்னும் ஜ்வாலை வீசியது. புகையும் நெருப்பும் கக்கியபடி விண்கற்கள் ஆகாயத்திலிருந்து பூமியை நோக்கி விழுந்தன. வசுக்கள், ருத்ரர்கள், ஆதித்தியர்கள், சதயர்கள், மருதர்கள் ஆகிய தேவர்களின் ஆயுதங்களும் தங்களுக்குள் போரிட்டுக் கொண்டன. இப்படியான ஒன்று இதுவரை நடந்ததில்லை. தேவாசுர யுத்தம் நடந்தபோதும் கூட இவ்வாறு நிகழவில்லை. விண்கற்கள் அனைத்து திசைகளிலும் தெரித்து விழ, கொந்தளித்த காற்று சூறாவளியாக, மேகங்கள் நிரம்பிய ஆகாயம் மிகப்பலமாக கர்ஜித்தது. தேவர்களுக்கு தேவனும் இரத்த மழை பொழிந்தான். தேவர்களின் கழுத்திலிருந்த மாலைகள் வாடின. ஆகாயத்தின் வீரியம் மங்கியது. பயங்கொண்ட மேகங்கள் அடர்ந்த இரத்த மழையைப் பொழிந்தன. காற்றில் சுழன்ற புழுதிப் படலம் தேவர்கள் அணிந்திருந்த கிரீடங்களின் பளபளப்பை மங்கச் செய்தன. 

இதனால் மற்ற தேவர்களோடு சேர்ந்து குழப்பமும் பீதியும் அடைந்த இந்திரன் பிரகஸ்பதியிடம், “தேவர் தலைவனே! இந்த துர்ச்சகுணங்கள் திடீரென தோன்றுவதற்குக் காரணம் என்ன? எங்களை எதிர்த்து நிற்கும் துணிவுள்ள எதிரி எவரையும் நான் காணவில்லையே?” என்று கேட்டான். அதற்கு பிரகஸ்பதி, “இந்திரனே! தேவர்களின் அதிபதியே! உன்னுடைய தவறும், அஜாக்கிரதையுமே இவற்றிற்குக் காரணம். தங்களது தவச் சக்தியின் மூலமாக, வாலகிய முனிவர்கள் ஓர் அற்புதமான உயிரைப் படைத்துள்ளார்கள். அதுவே கசியபருக்கும் வினதைக்கும் கருடனாகப் பிறந்துள்ளது. ஆற்றலும், எந்த உருவத்தையும எடுக்க வல்ல அவன் அமிர்தத்தைக் கவர்ந்துசெல்லவே வருகிறான். வலிமைமிக்கவர்களில் மேன்மையான அவன், அமிர்தத்தை அபகரிக்கும் ஆற்றல் உடையவன். முடியாததை முடித்துவைக்கும் வல்லமை கொண்டவன்” என்றார்.

அதைக்கேட்ட இந்திரன், அமிர்தத்தைப் பாதுகாக்கும் பாதுகாவலர்களிடம், “அபரிதமான ஆற்றலும வல்லமையும் கொண்ட பறவை ஒன்று அமிர்தத்தை அபகரிக்க வருகிறது. அது அமிர்தத்தை எடுத்துச் செல்வதில் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக உங்களை முன்கூட்டியே எச்சரிக்கிறேன். அதன் ஆற்றல் ஈடுஇணையற்றது என்று பிரகஸ்பதி கூறுகிறார். ஆகவே ஜாக்கிரதையாக அமிர்தத்தைச் சுற்றிக் காவலை பலப்படுத்துங்கள்” என்றான்.

இந்திரனும் கையில் வஜ்ராயுதத்துடன் அருகிருந்தான். அவர்கள் அனைவரும் தங்கத்தால் செய்யப்பட்ட, விலைமதிக்க முடியாத நீலவண்ணக்கல் பதித்த, மார்புக் கவசங்களை அணிந்தனர். அவர்கள் பலவகைப்பட்ட கூர்மையான, சக்கரங்கள், இரும்பிலான தண்டங்கள், போர்க் கோடாரிகள், கூர்மையான ஈட்டிகள், வாட்கள் போன்ற பலவகையான பயங்கர ஆயுதங்களை தங்கள் உடல்வலிமைக்கு ஏற்றவாறு கையிலேந்தி, அமிர்தத்தைப் பாதுகாக்க நின்றனர். இவ்வாறு அந்தப் போர்க்களமானது, நூறாயிரம் தேவர்களின் கைகளில் பிரகாசிக்கும் ஆயுதங்களோடு, பிறிதொரு வானம் போலக் காட்சியளித்தது.


வெகுகாலத்துக்கு முன்னர், முனிவரான கசியர், தனக்கொரு மகன் வேண்டி, பல்வேறு ரிஷிகள், தேவர்கள் மற்றும் காந்தவர்களின் உதவியோடு வேள்வி ஒன்றை நடத்தினார். கசியர் இந்திரனையும், வாலகிய முனிவர்களையும் வேள்விக்கான விறகுகளைக் கொண்டுவரும்படி பணித்தார். தன்னுடைய அளவற்ற ஆற்றலால், இந்திரன் எந்தவித சிரமமுமின்றி, மலையளவு பெரிய விறகுகளை எடுத்துக் கொண்டு சென்றான். அவன் வழியில், கட்டைவிரல் அளவேயுள்ள பல முனிவர்கள் சேர்ந்து பலசா மரத்தின் ஒரே ஒரு இலையைச் சுமந்து செல்வதைக் கண்டான். அந்த முனிவர்கள் போதுமான உணவு இல்லாமையால் மிகவும் மெலிந்து பலவீனமாக இருந்தனர். மாடுகளின் காலடித்தடங்கள் ஏற்படுத்திய பள்ளத்தில் நிறைந்திருந்த தண்ணீரைக்கூட தாண்ட முடியாமல் மிகவும் துன்புற்றனர். அதைக் கண்டு சிரித்த இந்திரன் தன் பலத்தில் கர்வங்கொண்டவனாய் அவர்களைத் தாண்டிச் சென்றான். எனவே அவர்கள் கோபமடைந்து இந்திரனை அழிக்கும்படியான யாகம் ஒன்றைச் செய்தனர். தவத்தை மிகக் கடுமையாகக் கடைபிடிக்கும் அந்த முனிவர்கள், “தேவர்கள் மற்றொரு இந்திரனை தலைவனாகப் பெறுவார்கள். தனது ஆற்றலால் தனது விருப்பம் போல எங்கும் செல்லும் அவன், இப்போதிருக்கும் இந்திரனுக்கு அளவற்ற பயத்தைக் கொடுப்பான். எங்களது தவத்தின பலனாக, மனோவேகம் கொண்ட, நூறு மடங்கு இந்திரனை விட ஆற்றலிலும் வீரத்திலும் மிக்க ஒருவன் தோன்றுவான்” என்று யாகம் செய்தார்கள்.

இதை அறிந்த இந்திரன் மிக்க பயம் கொண்டு, தஞ்சம் வேண்டி, கசியபரை அணுகினான். இந்திரனிடம் நடந்ததைக் கேட்டறிந்த கசியபர் வாலகிய முனிவர்களிடம் சென்று அவர்களது வேண்டுகோள் நிறைவடைந்ததா என்று கேட்டார். எப்போதும் உண்மையை உரைக்கும் அவர்கள், அவ்வாறே நிறைவடைந்ததாகச் சொன்னார்கள். அவர்களை அமைதிப்படுத்திய கசியபர், “தற்போதைய இந்திரன் பிரம்மனால் அனைத்துலகுக்கும் இறைவனாக நியமிக்கப் பட்டவன். தாங்கள் மற்றோரு இந்திரனை உருவாக்க முயல்கிறீர்கள். மேலானவர்களே! தாங்கள் பிரம்மனின் வார்த்தைகள் பொய்த்துப்போகும்படி செய்யக் கூடாது. நான் தங்களின் நோக்கத்தைத் தவறு என்று சொல்லவில்லை. வீரத்திலும் ஆற்றலிலும் மேலான பிறிதொரு இந்திரன் தோன்றட்டும். ஆனால் தங்கள் முன் மண்டியிட்டு இறைஞ்சி நிற்கும் தேவர்களின் தற்போதைய கடவுளான இந்திரன் மீது கருணை காட்டுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்.

கசியபர் வேண்டுகோளைக் கேட்ட வாலகியர்கள் அவரை வணங்கி, “கசியபரே! எங்களது நோக்கம் பிறிதொரு இந்திரனை உருவாக்கவேண்டும என்பதுதான். நீ விரும்பியது போலவே உனக்கொரு மகனைத் தரவேண்டும் என்பதற்காகவும்தான் நாங்கள் இதனைச் செய்கிறோம். எனவே இந்தச் செயலை ஏற்றுக்கொண்டு அதன் பலனை அனுபவிப்பாயாக. நீ எது நன்மை என்று கருதுகிறாயோ அதைத் தராளமாகச் செய்துகொள்” என்றனர்.

அந்த நேரத்தில்தான் கசியபரின் மனைவியான வினதை தனக்கொரு மகன் வேண்டும் என்று ஆசை கொண்டு, தவத்தையும் சடங்குகளையும் செய்து முடித்து குளித்து முடித்து அவரை அணுகினாள். அவளிடம், “இறைவியே! உன்னுடைய இந்தச் செயல் பலனைத் தரும். நீ என்ன விரும்புகிறாயோ அது உனக்குக் கிடைக்கும். வீரம் பொருந்திய, மூவுலகுக்கும் கடவுளெனத்தக்க இரண்டு மகன்களை நீ பெறுவாய். வாலகிய முனிவர்களின் தவத்தின் ஆற்றலாலும், என்னுடைய சொந்த விருப்பத்தின் பேரிலும், இந்த மகன்கள் நற்பேற்றை உடையவர்களாக, உலகத்தால் வணங்கத் தக்கவர்களாக இருப்பார்கள்” என்றுரைத்தார் கசியபர்.


இப்படியாக தேவர்கள், கருடனை எதிர்க்கத் தயாராக இருந்தபோது, பறவைகளின் அரசனான கருடன் விரைவில் அவர்கள் இருப்பிடம் வந்தடைந்தான். அவனது ஒப்பற்ற ஆற்றலைக் கண்ணுற்ற தேவர்கள் பயத்தில் நடுங்கினார்கள். குழப்பத்தில் அவர்கள் ஆயுதங்களை தங்களுக்குள்ளேயே ஒருவர் மீது ஒருவர் பிரயோகித்துக் கொண்டார்கள். அமிர்தத்தைப் பாதுகாப்பதில் ஒருவனான பௌவனன் வீரம் மிக்கவன் எனினும், கருடனின் அலகு, நகங்கள் மற்றும் சிறகால் கிழிபட்டு, இறந்தவனாகக் கீழே விழுந்தான். தனது சிறகுகளால் புழுதிப்படலத்தை உண்டாக்கிய கருடன், உலகத்தையே இருளாக்கி, தேவர்களின் கண்களிலிருந்து மறைந்தான். அமிர்தத்தைப் பாதுகாக்கும் காவலர்கள் புழுதியால் எதையும் பார்க்க முடியாதவர்களானார்கள். இவ்வாறு கருடன் தேவர்களின் உலகத்தில் குழப்பத்தை உண்டாக்கி, தன்னுடைய அலகுகளாலும் நகங்களாலும் அவர்களை சின்னா பின்னமாக்கினான். அப்போது இந்திரன், “வாயுதேவனே! இந்தப் புழுதிப் படலத்தை நீங்கச் செய்” என்று ஆணையிட்டான். வாயுவும் அவ்வாறே அந்தப் புழுதிப் படலத்தை நீக்கினான்.

புழுதி நீங்கி இருள் விலகியதும் தேவர்கள் கருடனைத் தாக்கினார்கள். மிகப் பெரும் மேகத்தைப் போல வானத்தில் கர்ஜித்த அவன் அனைத்துயிர்களையும் நடுநடுங்கச் செய்தான். தேவர்களின் படைகள் கருடனைத் தாக்க முற்படுகையில், பகைவர்களை அழிப்பவனாகிய கருடன் வானத்தில் எம்பி தேவர்களின் தலைக்கு மேலே பறந்தான். இந்திரனால் வழிநடத்தப்பட்ட அந்த சேனை கருடனைப் பல்வேறு ஆயுதங்களால் தாக்கியது. அனைத்து திசைகளிலிருந்தும் தாக்கப்பட்ட போதிலும் கருடன் சிறிதும் கலங்கவில்லை. வினதையின் ஆற்றல் மிக்க மகன் சற்றேனும் சளைக்காமல் உத்வேகத்துடன் போரிட்டான். அனைத்து திசைகளிலும் தேவர்களைத் தன்னுடைய சிறகாலும் மார்பாலும் தாக்கி சிதறடித்தான். கருடனால் தாக்கப்பட்ட தேவர்களின் உடம்பிலிருந்து வழிந்த இரத்தம் ஆறாக ஓடியது. சதயர்களும் காந்தவர்களும் கிழக்கிலும், வசுக்களும் ருத்ரர்களும் தெற்கிலும், ஆதித்தியர்கள் கிழக்கிலும், அஸ்வினி இரட்டையர்கள் வடக்கிலும் ஓடி ஒளிந்தார்கள். 

பின்வாங்கி ஓடிய அவர்கள், அளவற்ற ஆற்றல் கொண்ட தங்கள் பகைவனைத் திகைப்புடன் திரும்பிப் பார்த்துக்கொண்டே ஓடினார்கள். அஸ்வக்கிரந்தன், ரேணுகன், கிரதனன், தபனன், உலூகன், சுவஸ்னன், நிமேஷன், பிரருஜன் மற்றும் புளினன் ஆகியோருடன் போர்புரிந்து, அனைவரையும் வென்றான். இறுதியாக எல்லாத் திசைகளிலும் அக்னியால் பாதுகாக்கப்பட்ட அமிர்தம் இருக்குமிடம் வந்தான். அக்னி கொளுந்துவிட்டெரிந்து செந்நிற ஜூவாலையாக முழு வானத்தையும் சுற்றி வளைந்திருந்தது. அந்த தீ ஜூவாலைகள் பலமான காற்றில் அலைக்களிக்கப்பட்டு சூரியனின் கதிர்கள் போல வெம்மையாகத் தகித்தன. எனவே கருடன் தொண்ணூறு வாய்களைக்கொண்ட உருவம் எடுத்து, அனைத்து வாய்களாலும் பல ஆறுகளின் நீரை உறிஞ்சிக் கொண்டு வந்துமிழ்ந்து நெருப்பை அணைத்தான். பின்னர் மிகச்சிறிய உருவம் எடுத்து அமிர்தம் வைக்கப்பட்டிருந்த இடத்தில் நுழைந்தான்.

தங்கத்தாலான உடலைத் தரித்திருந்த அவன், சூரியக் கதிர்கள் போலப் பிரகாசித்து, ஆறு கடலில் கலப்பது போல, ஆற்றலுடன் உள்ளே சென்றான். கூரிய முனைகள் கொண்ட பல கத்திகள் பொருத்தப்பட்ட சக்கரம் ஒன்று அமிர்தம் இருக்குமிடத்தைச் சுற்றிலும் வேகமாகச் சுழன்றுகொண்டிருப்பதைக் கண்டான் கருடன். அமிர்தத்தை திருட வருபவர்களைத் துண்டாக்கும் பொருட்டு அந்த இயந்திரம் தேவர்களால் வடிவமைக்கப் பட்டிருந்தது. தன்னுடைய வடிவத்தை மேலும் சிறியதாக குறுகச் செய்த கருடன் கண்ணிமைக்கும் நொடியில் சக்கரத்தின் ஆரங்கள் வழியாக உள்ளே நுழைந்தான்.

அந்தச் சக்கரங்களைத் தாண்டிய பிறகு இரண்டு பெரிய நாகங்கள் அமிர்தத்தைப் பாதுகாப்பதைப் பார்த்தான். அவைகள் தீயைப் போல ஜொலிக்க, அவைகளின் நாக்கு மின்னலைப் போன்றிருந்தது. பேராற்றல் மிக்க அந்த நாகங்களின் முகமும் கண்களும் பார்ப்பதற்கு அச்சமூட்டுவதாக இருந்தது. கொடிய விஷமுடைய பயங்கரமான அந்நாகங்கள் எப்போதும் கோபத்துடன் அங்குமிங்கும் நகர்ந்தபடி, பார்வையை நாலாபுறமும் செலுத்தியவையாக இருந்தன. அவைகள் கண்களை இமைக்காது பெருங்கோபத்துடன் இருந்தன. அதன் கண்களைப் பார்க்கும் எவரும் உடனடியாக எரிந்து சாம்பலாவார்கள். அழகான சிறகுகளைக் கொண்ட கருடன் தூரத்திலிருந்தபடியே அவற்றின் கண்களில் புழுதியைத் தூற்றி, அவைகளைப் பார்க்கவிடாமல் செய்து, அனைத்து திசைகளிலிருந்தும் அவற்றைத் தாக்கினான். வினதையின் மகன், அவற்றின் உடல்களைத் துண்டுதுண்டாகச் சிதைத்தான். பின் சற்றும் தாமதிக்காமல் அமிர்தம் இருக்குமிடம் நெருங்கினான். அங்கிருந்த அமிர்தத்தை எடுத்துக்கொண்டு, சுழலும் இயந்திரத்தைத் தூள்தூளாகச் செய்தபடி அங்கிருந்து ஆகாயத்தில் பறந்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...