May 23, 2017

6. ஜரத்காரு ஜரத்காருவை மணந்த கதை

ஆஸ்திகரின் தந்தை பிரஜாபதியைப் போல ஆற்றலும் பலமும் மிக்கவர். எப்போதும் சிறந்த தவத்தைச் செய்யும் அவர் கடுமையான பிரம்மச்சரியம் மேற்கொண்டிருந்தார். உணவு உண்பதில் கட்டுப்பாடுடன் இருந்த அவர் தன்னுடைய விந்தை ஒருபோதும் சிந்தியதில்லை. அவர் ஜரத்காரு என்ற பெயரால் அறியப்பட்டார். சரியான, கடுமையான விரதங்களை மேற்கொண்டு பிச்சை எடுத்து உண்பவர்களில் அவர் முதன்மையானவராக இருந்தார். ஒரு நாள் அவர் பயணம் செய்துகொண்டிருந்த போது குகை ஒன்றில் அவருடைய முன்னோர்கள் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார். ஜரத்காரு அவர்களைப் பார்த்து, “புற்களால் ஆன கயிற்றால் கட்டப்பட்டு, அவைகள் எலிகளால் கொறிக்கப்பட்ட நிலையில், இந்தக் குகையில் தலைகீழாகத் தொங்கும் நீங்கள் யார்? இந்தக் குகையில் ரகசியமாக வாழ்பவர் யார்?” என்று கேட்டார்.

அதற்கு அவர்கள், “நாங்கள் கடுமையான விரதங்களை மேற்கொள்ளும் யாயாவார எனும் முனிவர்கள். சந்ததிகள் இல்லாததால் நாங்கள் பூமியில் புதைந்து கொண்டிருக்கிறோம். எங்களுக்கு ஜரத்காரு என்று ஓரே ஒரு வாரிசு இருக்கிறான். ஆனால் நாங்கள் துரதிருஷ்சாலிகள். தனக்கொரு மகன் மனைவி வேண்டும் என்பதை எண்ணிப் பார்க்காத அந்த முட்டாள் தவத்தையே முதன்மையாகக் கொண்டு வாழ்கிறான். நாங்கள் பூமியில் புதைந்து கொண்டிருக்கும் காரணத்தால் இந்தக் குகையில் தலைகீழாகத் தொங்கிக் கொண்டிருக்கிறோம். பாவிகளைப் போல நாங்கள் பாதுகாப்பற்றவர்களாகி விட்டோம். ஒரு உறவினரைப் போல எங்கள் மீது பரிதாபம் கொண்டு கனிவுடன் வினவும் நீ யார்?” என்று கேட்டார்கள்.

“நானே ஜரத்காரு. எனது தந்தையும் பாட்டனும் நீங்களே. நான் என்ன செய்வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்று ஜரத்காரு கேட்டார்.

“உனது நலனுக்காவும் எங்கள் நலனுக்காகவும் நீ முயற்சி செய்து ஒரு மகனை அடைவதன் மூலம் எங்கள் சந்ததியைத் தொடரவேண்டும். மகனே! அதுவே முறை. தான தர்மங்களாலும், தவத்தாலும் கிடைக்கும் பலனை விடவும் ஒருவன் ஒரு மகனைப் பெறுவதால் கிட்டும் பலன் உயர்ந்தது. எனவே நாங்கள் சொல்லியபடி நீ ஒருவளை மணமுடித்து ஒரு மகனைப் பெறவேண்டும். மகனே! நீயே எங்களின் புகலிடம்! அப்படிச் செய்வதன் மூலமாகவே எங்களுக்கு நன்மை உண்டாகும்” என்றனர் மூதாதையர்கள்.

“எனக்கு ஒரு மனைவி வேண்டும் என்று நான் இதுநாள் வரை தீர்மானிக்கவில்லை. இருந்தும் உங்களது நன்மைக்காக நான் திருமணம் செய்துகொள்கிறேன். ஆனால் எனது நிபந்தனையின்படி அமையும் பெண்ணையே நான் சடங்குகளின் முறைப்படி மணந்துகொள்வேன். எனது பெயரைக் கொண்ட பெண்ணையே நான் திருணம் செய்வேன். அதுவும் அவளை அவரது உறவினர்கள் எனக்குப் பரிசாகத் தரவேண்டும். ஆனால் என்னைப் போன்ற ஏழைக்கு யார் பெண் தருவார்கள்? இருந்தபோதும் எனக்குப் பிச்சையாகக் கொடுக்கும் பெண்ணேயே நான் ஏற்றுக்கொள்வேன். இந்த எனது நிபந்தனையின்படி நான் மணம்புரிய பெண்ணைத் தேடிப் போகிறேன். வேறு எந்தவகையிலும் நான் பெண்ணை ஏற்றுக்கொள்ள மாட்டேன். உங்களின் நன்மைக்காக நான் அவளை பிள்ளை பெறச்செய்கிறேன். அதனால் விண்ணுலகம் சென்று மகிழ்ச்சியாக வாழுங்கள்” என்றார் ஜரத்காரு.

அதன் பிறகு ஜரத்காரு தனது நிபந்தனைக்குட்பட்ட பெண்ணைத் தேடி உலகெங்கும் அலைந்தார். ஆனால் அப்படி ஒரு பெண் கிடைப்பது அவ்வளவு சுலபமாக இல்லை. ஒரு நாள் காட்டிற்குச் சென்ற ஜரத்காரு, அங்கு பார்த்த ஒரு பெண்ணிடம், தனது மூதாதையர் சொன்னதை நினைவுகூர்ந்து, தீனமான குரலில் மூன்று முறை வேண்டினார். அப்படி வேண்டியதும் வாசுகி என்ற நாகங்களின் அரசன் அவர் முன்னர் தோன்றி தனது தங்கையை ஏற்றுக்கொள்ளுமாறு சொன்னான். அவள் தனது பெயரையே கொண்டிருக்க மாட்டாள் என்று நினைத்து ஜரத்காரு அவளை ஏற்க மறுத்தார்.

“ஓ நாகமே! உண்மையாகச் சொல், உனது தங்கையின் பெயர் என்ன?” என்று கேட்டார் ஜரத்காரு.

“ஜரத்காரு! எனது இளைய சகோதரியின் பெயரும் ஜரத்காருதான். எனவே இந்த மெல்லிடையாளை உனது மனைவியாக ஏற்றுக்கொள். அவளை இதுநாள் வரை உனக்காகவே பாதுகாத்து வந்தேன். அதனால் அவளை ஏற்றுக்கொள்வாயாக” என்றான் வாசுகி. பல காலங்களுக்கு முன்பு நாகங்களின் தாய் தனது குழந்தைகளை, “நீங்கள் அனைவரும் காற்றை ரதமாகக் கொண்ட ஜனமேஜயன் செய்யும் யாகத் தீயில் அழிந்துபோவீர்கள்” என்று சாபமிட்டாள். அந்தச் சாபத்தின் தீவிரத்தைச் சமன் செய்யும் பொருட்டே வாசுகி, ஒப்பற்ற முனிவரான ஜரத்காருவுக்குத் தன் தங்கையைக் கொடுத்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...