May 22, 2017

5. ருருவும் பிரம்மத்வராவும்

பிருகு முனிவரின் மகன் சியவனனுக்கு சுகன்யா மூலமாகப் பிறந்தவன் பிரம்மாதி. அந்த பிரம்மாதி தன் மனைவி கிரிடாச்சி மூலம் பெற்ற மைந்தன் ருரு. ருரு பிறந்த சமயத்தில் வாழ்ந்துவந்தவர் ஸ்தூலகேசர் என்ற முனிவர். பெரும் தவவல்லமை கொண்டிருந்த அவர் உலக உயிர்கள் அனைத்திற்கும் உதவும் பண்பால் எங்கும் புகழ்பெற்றிருந்தார். அப்போது விஸ்வாவசு என்ற காந்தர்வன் மூலமாக தேவகன்னியான மேனகை கருவுற்றிருந்தாள். தக்க சமயம் வந்தபோது ஸ்தூலகேசர் முனிவரின் ஆசிரமத்திற்கு அருகே அவள் ஒரு குழந்தையைப் பெற்றெடுத்தாள். பெற்ற குழந்தையை ஆற்றின் கரையிலேயே விட்டுவிட்டு அவள் சென்றுவிட்டாள். ஒளிபொருந்திய பேரழகு மிக்க அந்தப் பெண் குழந்தையைக் கண்ட ஸ்தூலகேசர் அவளை எடுத்து வளர்த்தார். பண்பிலும் அழகிலும் அனைவரிலும் சிறந்து விளங்கிய அவளுக்குப் பிரம்மத்வரா என்று பெயரிட்டார்.

ருருவும் பிம்மத்வராவும் வளர்ந்து தக்க பருவத்தை அடைந்போது, ஒருவரை ஒருவர் சந்திக்க நேர்கையில் ருரு பிரம்மத்வராவை விரும்பினான். தன்னுடைய நண்பர்கள் மூலமாகத் தன் விருப்பத்தை தந்தை பிரம்மாதிக்குத் தெரிவித்தான் ருரு. பிரம்மாதி ஸ்தூலகேசரை சந்தித்து வரும் பூர நட்சத்திரத்தில் இருவருக்கும் திருமணம் செய்ய நிச்சயித்தார். திருமணத்திற்குச் சில நாட்களுக்கு முன்னர், தன்னுடைய தோழிகளுடன் விளையாடிக் கொண்டிருந்த பிரம்மத்வரா, விதியால் உந்தப்பட்டு தரையில் சுருண்டிருந்த ஒரு பாம்பை காலால் மிதித்தாள். அந்தப் பாம்பும் விதியின் விருப்பத்தின்படி, அஜாக்கிரதையாய் இருந்த அவள் காலில் தன்னுடைய நஞ்சுப் பற்களைப் பதித்தது. பாம்பால் கடிபட்ட சில நொடிகளில் அவள் மயங்கிக் கீழே விழுந்தாள். வாழ்ந்தபோது மிக அழகாயிருந்த அவள் சாகும் தருணத்தில் மிக்க வேதனையுற்றாள். இருந்தபோதும் அந்த மெல்லிடையாள் உயிருடன் இருந்ததைவிட பூமியில் தூங்கும்போது அழகாக இருந்ததற்கு அந்தப் பாம்பின் விஷத்திற்கு நன்றிசொல்ல வேண்டும். தரையில் அழகானதொரு தாமரையாக விழுந்து கிடந்த அவளை அனைவரும் வேதனையுடன் பார்த்தனர். சுவஸ்தியாத்ரேயர், மஹாஜானு, குசிகர், சங்கமேகலர், உத்தாலகர், கடர், ஸ்வேதர், பரத்வாஜர், கௌணகுத்சியர், ஆர்ஷ்டிஸேணர், கௌதமர், பிரம்மாதி போன்ற பலரும் அங்கு ஒன்று திரண்டு வந்து, பாம்பு தீண்டி இறந்த அந்த அழகியைக் கண்டு அழுதனர். அங்கேவந்த ருருவும் வேதனை தாங்கமுடியாமல் சீக்கிரமே அங்கிருந்து சென்றான்.

அங்கிருந்து சென்ற ருரு அடர்ந்த கானகத்தினுள்ளே சென்று வாய்விட்டு அழுதான். அவனது புலம்பல் கேட்பதற்கு மிகுந்த பரிதாபகரமானதாக இருந்தது. பிரம்மத்வராவை நினைத்து நினைத்து அழுது அரற்றினான். “அந்த மெல்லிடையாள் தரையில் விழுந்து கிடந்து என்னுடைய துக்கத்தையும் உறவினர்கள் துக்கத்தையும் பன்மடங்கு பெருக்கிவிட்டாள். இதைவிட துன்பம் தரக்கூடியது வேறென்ன இருக்கிறது? நான் நோன்புகளையும் தானதர்மங்களையும், பெரியோர்களிடம் மரியாதையாகவும் நடந்துகொண்டது உண்மையானால் அதன் பலன் என்னுடைய அன்பானவளை உயிர்பெறச் செய்யட்டும். நான் பிறந்ததிலிருந்தே ஆசைகளை அடக்கி சடங்கு சம்பிராதயங்களை முறைப்படி செய்திருந்தேன் என்றால் அழகிய பிரம்மத்வரா எழட்டும்” என்றான்.

அவனது புலம்பலைக் கேட்ட தேவலோகத் தூதன் ஒருவன் அவன் முன் தோன்றி, “ஓ ருரு! துன்பத்தில் புலம்பும் உன்னுடைய வார்த்தைகளுக்கு எந்தப் பலனும் இல்லை. இந்த உலகத்தில் எவரொருவருடைய காலம் முடிந்துவிட்டதோ அவர்கள் ஒருபோதும் மீண்டும் உயிர் பெறுவதில்லை. காந்தர்வனுக்கும் அப்சரசுக்கும் பிறந்த அவளின் துன்பகரமான வாழ்க்கை முடிந்துவிட்டது. எனவே சிறிய துயரத்திற்காக உன்னைப் பறிகொடுக்காதே. இருந்தபோதிலும் அவளது உயிரை மீட்கும் வழியை தேவர்கள் இதற்கு முன்னரே சொல்லிவைத்துள்ளனர். நீ அதைச்செய்தால் உன்னுடைய பிரம்மதவராவைத் திரும்பப் பெறலாம்” என்றான்.

அதைக்கேட்டு மிகவும் மகிழ்ந்த ருரு, “தேவலோகத் தூதரே! தேவர்கள் முன்னரே சொல்லிவைத்திருந்த அந்த வழியைச் சொல்லுங்கள். தாங்கள் என்ன சொல்கிறீர்களோ அதை அப்படியே செய்கிறேன். மரியாதைக்குரியவரே! தயவுசெய்யுங்கள்” என்று மண்டியிட்டு அந்தத் தூதனை வணங்கினான்.

“பிருகு வம்சத்தில் வந்தவனே! உன்னுடைய வாழ்நாளின் பாதியை அவளுக்குக் கொடு. ஓ ருரு! அப்படிச்செய்தால் உன்னுடைய மனைவி பிரம்மத்வரா மீண்டும் எழுந்து வருவாள்” என்றான்.

அந்தத் தூதனின் வார்த்தை கேட்ட ருரு பெருமகிழ்வுற்று, “தேவலோகத் தூதர்களில் சிறந்தவனே! நான் என்னுடைய வாழ்நாளின் பாதியை அவளுக்குத் தருகிறேன். என்னவளை முன்புபோலவே அன்புடனும் அழகுடனும் எழுந்திருக்க அருள் செய்” என்றான்.

அதன்பிறகு தேவலோகம் சென்ற அந்தத் தூதன் எமதர்ம ராஜனிடம், “தர்மராஜனே! உனக்குச் சம்மதமிருந்தால், இறந்துவிட்ட ருருவின் அழகான மனைவிக்கு அவனுடைய பாதிநாள் வாழ்வைக் கொடுத்து எழச்செய்” என்றான்.

“கடவுளின் தூதனே! உன்னுடைய விருப்பத்தின்படியே ருருவின் மனைவி அவனது வாழ்நாளின் பாதியைப் பெற்று எழுந்திருக்கட்டும்” என்று எமதர்மராஜா வாழ்த்த பிரம்மத்வரா தூக்கத்திலிருந்து எழுந்தவள் போல முன்னிருந்தபடியே உயிர்பெற்றெழுந்தாள்.

அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் முன்னர் நிச்சயிக்கப்ட்ட நன்நாளில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது. இருவரும் ஒருவருக்கொருவர் அன்புடனும், சாஸ்திரங்களில் சொல்லியபடியும் வாழ்க்கையை நடத்தினர். இருந்தும் தன் மனைவியைக் கடித்த பாம்பின் மீது அளவற்ற கோபம் கொண்டிருந்த ருரு அனைத்துப் பாம்புகளையும் அழிக்க சபதம் மேற்கொண்டான். எப்போது பாம்புகளைப் பார்த்தாலும் அளவற்ற கோபத்துடன் அவற்றைக் கொல்வதை வாடிக்கையாகக் கொண்டான்.

ஒரு நாள் ருரு ஒரு பெரிய அடர்ந்த கானகத்துக்குள் சென்றான். அங்கே விஷமற்ற துந்துபா என்ற வயதான பாம்பைக் கண்டான். உடனே அதைக் கொள்ளும் நோக்கத்தோடு கையிலிருந்த தடியை ஓங்கினான். அதைக்கண்ட துந்துபா, “அந்தணரே! நான் தங்களுக்கு எந்தக் கெடுதலும் செய்யவில்லையே அப்படியிருக்க என் மீது கோபம் கொண்டு என்னைக் கொல்ல முயலும் காரணம் என்ன?” என்று கேட்டது.

“நான் மிகவும் நேசித்த என் அன்பான மனைவியை ஒரு நாகம் கடித்துவிட்டது. அதனால் நான் கண்ணில் காணும் நாகங்கள் அனைத்தையும் கொல்வதாக சபதம் ஏற்றிருக்கிறேன். அதனாலேயே நான் உன்னை அடிக்க முயன்றேன். இப்போது நான் உன்னை கொல்லப்போகிறேன்” என்றான் ருரு.

“அந்தணரே! மனிதர்களைக் கடிக்கும் நாகங்கள் பல உள்ளன. துந்துபாக்களாகிய நாங்கள் வாசனையால் மட்டுமே நாகங்களாக கருதத்தக்கவர்கள். எனவே நீ எங்களைக் கொல்வது தகாது. கடிக்கும் நாகங்களுக்குரிய நற்பேறுகள் எங்களுக்குக் கிடைப்பதில்லை. ஆனால் அவர்களுக்குரிய கெடுதல்கள் அனைத்தும் எங்களுக்கும் நேர்கின்றன. அவர்களுக்கான கஷ்டங்களை நாங்களும் பகிர்ந்துகொள்கிறோம். ஆனால் அவர்களுக்குக் கிடைக்கும் இன்பங்களை நாங்கள் அனுபவிப்பதில்லை. எனவே எங்களில் யார் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் என்பதை நீ வேறுபடுத்திப் பார்க்க முடியாதவனாக இருப்பதால் எங்களைக் கொல்லாதே” என்று துந்துபா கேட்டுக்கொண்டதும், அது ஒரு முனிவராக இருக்கலாம் என்று பயந்து ருரு அதைக் கொல்லாமல் விட்டான்.

அவன் அந்த நாகத்தை அமைதிப்படுத்தும் விதமாக, “ஓ நாகமே! நீ விரும்பினால், இந்த உருவத்தில் வந்திருக்கும் நீ யார் என்பதைச் சொல்” என்று கேட்டான். அதற்கு அந்த நாகம், “ஓ ருரு! நான் முன்பு சஹஸ்ரபத் என்ற முனிவராக இருந்தேன். ஒரு அந்தணரின் சாபத்தால் நான் நாகமாக மாறினேன்” என்றது.

“நாகங்களில் சிறந்தவனே! நீ கோபம் கொண்ட அந்தணரால் சபிக்கப்பட காரணம் என்ன? எத்தனை காலமாக நீ இப்படி இந்த உருவத்தில் இருக்கிறாய்?” என்று ருரு கேட்டான்.

“முன்பொரு காலத்தில் ககமா என்ற அந்தண நண்பனொருவன் எனக்கிருந்தான். தவத்தின் வல்லமை மிக்க அவன் எப்போதும் உண்மை பேசுபவனாக இருந்தான். அவன் ஒரு முறை அக்னி வேள்வி ஒன்றைச் செய்துகொண்டிருந்த போது, நான் புற்களாலான நாகமொன்றைச் செய்து அவனைப் பயமுறுத்தினேன். அவன் பயத்தில் மயக்கமுற்றான். மயக்கம் தெளிந்து எழுந்த அவன் கோபத்துடன், “பொம்மை நாகத்தைச் செய்து என்னை பயமுறுத்திய நீ என்னுடைய சாபத்தால் சக்தியற்ற நீர்ப்பாம்பாக ஆகக்கடவாய்” என்று சபித்தான். “என்னுடைய நண்பனான உன்னை விளையாட்டுக்காவே அப்படி பயமுறுத்தினேன். எனவே உன்னை கூப்பிய கரங்களுடன் வணங்கி கேட்டுக்கொள்கிறேன். நீ என்னை மன்னித்து உன்னுடைய சாபத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்” என்று கெஞ்சினேன். “நான் என்ன சொன்னேனோ அது நடந்தே தீரும். இருந்தும் நான் சொல்வதைக் கவனமாகக் கேள். எப்போது பிரம்மாதியின் மகன் ருரு உன்னைக் காண்கிறானோ அப்போது நீ சாபவிமோசனம் பெறுவாய்” என்றான் அவன்.

“நீயே பிரம்மாதியின் மைந்தன் ருரு என்பதை அறிகிறேன். நான் எனது சுய உருவத்தைப் பெற்றதும் உனக்கு ஒரு நல்லதைச் சொல்கிறேன்” என்ற துந்துபா என்ற நீர்ப்பாம்பு தன்னுடைய சுயவடிவைத் திரும்பப் பெற்று, “மனிதர்களில் சிறந்தவனே! பிற உயிர்களைக் கொல்லாமையே அறங்களில் சிறந்தது. எனவே ஒரு அந்தணன் பிற உயிர்களைக் கொல்வது தகாது. அந்தணன் என்பவன் வேதங்களில் சொல்லிபடி எப்போதும் அமைதியானவனாக, உண்மையானவனாக, அனைத்து உயிர்களையும் கொல்லாது மன்னிக்கும் இயல்புடையவனாக இருக்கவேண்டும். ஒரு சிறந்த அந்தணனின் கடமை வேதங்களைக் கற்று அவற்றை அழியாமல் நிலைத்திருக்கச் செய்வதுதான். ஆனால் ஒரு ஷத்திரியன் அப்படி அல்ல. எனவே நான் சொல்வதை கவனிப்பாயாக. செங்கோலைக் கையில் ஏந்தி அதிகாரத்துடன் அனைவரையும் காப்பது ஷத்திரியனின் கடமை. எனவே முன்பொரு முறை ஜனமேஜயன் நாகங்களைக் கொல்லும் வேள்வி ஒன்றைச் செய்தான். அப்போது அந்தணர்களில் முதன்மையானவரும், வேதங்களை முழுதும் கற்றவரும், தவத்தின் ஆற்றல் மிக்கவருமான ஆஸ்திகர் பயங்கொண்ட நாகங்களை அந்த வேள்வியில் சாகாமல் காப்பாற்றினார்” என்றார் சஹஸ்ரபத்.

“அந்தணர்களில் சிறந்வரே! ஜனமேஜயன் நாகங்களகை் கொல்ல முயன்றது ஏன்? ஆஸ்திகர் அந்த நாகங்களை ஏன் காப்பாற்றினார்? நான் அவற்றை முழுவதுமாக கேட்க விரும்புகிறேன்” என்று ஆவலுடன் கேட்டான் ருரு. “ருரு! அவற்றை நீ ஒரு அந்தணன் வாயிலாக அறிவாயக” என்று சொல்லி சஹஸ்ரபத் அங்கிருந்து மறைந்தார்.

மாயமான அவரை ருரு கானகம் எங்கும் தேடியும் கண்டுபிடிக்க முடியாமல், களைப்பு மேலிட தரையில் மயங்கி விழுந்தான். சிறிது நேரத்திற்குப் பின் சுய உணர்வு பெற்றுத் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பித் தந்தையிடம் அவற்றைக் கேட்டறிந்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...