May 21, 2017

4. பிருகு முனியும் அக்னியும்

தெய்வங்களான இந்திரன், அக்னி, வருணன் ஆகியவர்களால் மதிக்கப்பட்டவரும் பிருகு வம்சத்தைச் சேர்ந்தவருமான பிருகு ஒரு ஒப்பற்ற முனிவராவார். அவருக்கு புலோமை என்ற அன்பான மனைவி இருந்தாள். அவள் கர்ப்பந்தரித்து மிகப்பெரிய ஆகிருதியுடன் இருந்தாள். ஒருநாள் பிருகு நீராடுவதற்காக ஆற்றங்கரைக்குச் சென்றிருந்தார். அப்போது புலோமன் என்ற பெயர் கொண்ட அரக்கனொருவன் அங்கு வந்தான். களங்கமற்ற அழகுடன் திகழந்த புலோமையைக் கண்ட அவன் தன்னுடைய அறிவை இழந்து அவள் மீது காமம் கொண்டான். அவனை விருந்தினனாக உபசரித்த புலோமை அவனுக்குக் கிழங்குகளையும் கனிகளையும் கொடுத்தாள். காமத்தால் மதியிழந்திருந்த அவன் அந்தக் களங்கமற்றவளை எடுத்துச் சென்று தன்னுடையவளாக ஆக்கிக்கொள்ள விரும்பினான்.

அவன் வேள்வித் தீ எரிந்துகொண்டிருந்த அறைக்குச் சென்று, “அக்னியே! சத்தியத்திற்குக் கட்டுப்பட்டு உண்மையைச் சொல் இவள் யாருடைய மனைவி? இந்த அழகான பெண் முன்பு எனக்கு மனைவியாக நிச்சயிக்கப்பட்டவள். ஆனால் அதன் பிறகு மனம்மாறிய அவளுடை தந்தை அவளை பிருகுவிற்குக் கொடுத்துவிட்டார். உண்மையாக இவள் பிருகுவின் மனைவியாகக் கருதத்தக்கவள்தானா என்பதைச் சொல். ஏனெனில் நான் இவளை இங்கிருந்து எடுத்துச்செல்ல விரும்புகிறேன். எனக்கு மனைவியாக வரவேண்டிய இந்த மெல்லிடையாளை பிருகு மனைவியாக வரித்தையை நினைக்கையில் என் உள்ளம் எரிகிறது” என்ற அரக்கன் அக்னியிடம் அந்த நிச்சயமற்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டான்.

“ஹே அக்னியே! அனைத்து உயிர்களின் உள்ளுறைந்து அவர்களின் நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் சாட்சியாக விளங்கும் மதியாளனே! என்னுடைய கேள்விக்கு பதில் சொல். எனக்கே முதலில் மனைவியாக வரவேண்டிய இவளை பிருகு அபகரித்துக்கொண்டான். எனவே உன்னிடமிருந்து நான் உண்மையை அறிய விரும்புகிறேன். அவள் பிருகுவின் மனைவியா இல்லையா என்பதை உன்னிடமிருந்து தெரிந்துகொண்ட பிறகு, உன் எதிரிலேயே அவளை எடுத்துச் செல்லப்போகிறேன். ஆகவே உண்மையைச் சொல்வாயாக” என்று அரக்கன் அக்னியிடம் கேட்டான்.

ஏழு செந்நாவையுடைய அக்னி அரக்கனின் கேள்விக்குப் பதில் சொல்ல முடியாமல் மருகினான். உண்மையைச் சொல்லாது பொய்யுரைத்தால் அதன் சாபமும், உண்மையைச் சொன்னால் பிருகு முனிவரின் சாபமும் கிடைக்கும் என்று பயந்து இருகொள்ளி எறும்பாய்த் தவித்தான்.

“அரக்கனே! புலோமை உனக்கே முதலில் மனைவியாக நிச்சயிக்கப்பட்டாலும் முறையான சடங்குகள் மூலம் அவளை நீ ஏற்கவில்லை. எனவே முறையான சடங்குகளோடு வேத மந்திரங்கள் முழங்க என் முன்னிலையில் அவளைக் கைப்பிடித்தது பிருகு முனிவர்தான்” என்றான் அக்னிதேவன்.

அதைக்கேட்ட அரக்கன் ஒரு காட்டுப் பன்றியின் வடிவமெடுத்து கண்ணிமைக்கும் நேரத்தில் புலோமையைத் தூக்கிச் சென்றான். இந்தக் கொடுஞ் செயலால் புலோமையின் கர்ப்பத்திலிருந்த பிருகுவின் குழந்தை கோபமடைந்து கருப்பையிலிருந்து கீழே விழுந்தது. அதன் காரணமாக அவன் சியவனன் என்ற பெயர் பெற்றான். அப்படிக் கீழே விழுந்த குழந்தை சூரியனைப் போல பிரகாசமாக ஒளிர்வதைக் கண்டதும் அரக்கன் அவளைக் கீழே விட்டுவிட்டு எரிந்து சாம்பலானான்.

அழகிய இடையுடைய புலோமை வேதனையால் துன்புற்று, ஏறக்குறைய மயங்கிய நிலையில் சியவனனை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றாள். அனைத்து உலக உயிர்களுக்கும் பெருந்தகப்பனான பிரம்மன் களங்கமற்ற பிருகுவின் மனைவி கண்ணிர் விட்டு அழுவதைக் கண்டு அவளைத் தேற்றினான். அவள் கண்களிலிருந்து வழிந்த கண்ணீர் நதியாக மாறி அவளுடைய காலடியைப் பின்பற்றி பின்தொடர்ந்து சென்றது. அதைக்கண்ட பிரம்மன் அந்த நதிக்கு வதூசரா என்று பெயரிட்டான். அந்த நதி பிருகு முனிவரின் ஆசிரமத்தைச் சுற்றி ஓடியது.

சியவனனையும் புலோமையையும் கண்ட பிருகு கோபமுற்று, “உன்னை இங்கேயிருந்து தூக்கிச் செல்லுமாறு காட்டிக்கொடுத்தது யார்? அந்த அரக்கனுக்கு நீதான் என்னுடைய மனைவி என்று தெரியாது அப்படியிருக்க அதைச் சொன்னது யார்? நான் கோபத்தால் அவனைச் சபிக்க விரும்புகிறேன். என்னுடைய சாபத்திற்கு அஞ்சாதவர் யார்? அதை மீறிச் செல்லும் துணிவு கொண்டவன் எவனிருக்கிறான்?” என்று கேள்விகளைத் தொடுத்தார்.

அதற்குப் புலோமை, “என் இறைவனே! அந்த அரக்கனுக்கு என்னைத் தெரியச் செய்தவன் அக்னிதேவனே! அதனாலேயே அவன் என்னைத் தூக்கிச் சென்றான். தங்களது குழந்தையின் அளவற்ற ஆற்றலாலேயே நான் அந்த அரக்கனிடமிருந்து தப்பினேன்” என்றாள். புலோமை சொன்னதைக் கேட்ட பிருகு முனிவர் அளவற்ற கோபமடைந்து ‘அனைத்தையும் உண்ணும்படி’ அக்னிக்குச் சாபமிட்டார்.

இவ்வாறு பிருகுவால் சபிக்கப்பட்ட அக்னி கோபமடைந்து, “அந்தணரே! இன்று தாங்கள் ஏன் இத்தனை அவசரம் காட்டுகிறீர்கள்? நான் சரியான பாதையிலேயே சென்றதோடு எந்தவித பாகுபாடுமின்றி எது உண்மையோ அதைத்தான் உரைத்தேன். இதில் என்னுடைய தவறு என்ன இருக்கிறது? உண்மையறிந்தவன் உண்மையை, உண்மையில்லை என்றுரைத்தால் அவனது முன்னோர்களும் சந்ததியினரும் ஏழேழு தலைமுறைக்கும் நிந்தனைக்குள்ளாவர்கள். என்னாலும் தங்களைச் சபிக்க முடியும் என்றாலும் அந்தணர்களின் மீது நான் வைத்திருக்கும் அளவற்ற மதிப்பால் அப்படிச் செய்யாதிருக்கிறேன். அந்தணரே! இவை அனைத்தையும் தாங்கள் அறிவீர்கள் என்றபோதும் சொல்கிறேன் கேளுங்கள். நான் என்னுடைய தவத்தினால் என்னைப் பலமடங்காக பெருக்கிக்கொள்வதோடு நான் ஹோமங்கள், வேள்விகள் மற்றும் சடங்குகள் ஆகியவற்றில் பலவடிவங்களில் வெளிப்படுகிறேன். வேதங்களில் சொல்லப்பட்டிருக்கும் முறைப்படி நடக்கும் சடங்குகளில் எனக்கு நெய் வழங்கப்படும் போது கடவுளர்களும் முன்னோர்களும் என்னில் தோன்றி மகிழ்கிறார்கள். நீரென கருதத்தக்க கடவுளர்களும் முன்னோர்களும் அமாவாசையிலும் பௌர்ணமியிலும் செய்யப்படும் யாகங்களின் பலன்களில் சம உரிமை உடையவர்கள். ஆக, கடவுளர்களே முன்னோர்கள், முன்னோர்களே கடவுளர்கள். நிலவின் தன்மைக்கேற்ப அவர்கள் தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ வழிபடப்படுகிறார்கள். என் மீது யாகத்தில் சொரியப்டும் ஆகுதிகளையே அவர்கள் இருவரும் உண்கிறார்கள். எனவே நான் முப்பத்திரண்டு கடவுளர்களுக்கும் மற்றும் முன்னோர்களுக்கும் வாயாக இருக்கிறேன். அமாவாசையில் முன்னோர்களும், பௌர்ணமியில் கடவுளர்களும் என்னில் சொரியப்படும் நெய்யை என் வாய் மூலமாகவே உண்கிறார்கள். இவ்வாறு நான் அவர்களின் வாயாக இருக்கும்போது நான் எப்படி அனைத்தையும் உண்ணுபவனாக ஆகமுடியும்?” என்று தன்னுடைய நிலையை எடுத்துச்சொன்ன அக்னி அதன் பிறகு எந்த யாகங்களிலும் வெளிப்படாமல் மறைந்துகொண்டான். இதனால் மண்ணுயிர்கள் அனைத்தும் துன்பமடைந்தன.

எனவே முனிவர்கள் பலரும் தேவர்களிடம் சென்று, “இறைவனே! அக்னியின் மறைவால் வேள்விகளும் சடங்குகளும் செய்யமுடியாமல் மூன்று உலகங்களும் ஸ்தம்பித்துள்ளன. உடனடியாக ஏதாவது செய்யவேண்டும்” என்று முறையிட்டனர். அதைக்கேட்ட தேவர்களும் முனிவர்களுடன் சென்று பிரம்மனிடம் தங்கள் வேண்டுகோளை வைத்தனர்.

“பிரம்மதேவனே! ஏதோ ஒரு காரணத்தால் பிருகு முனிவர் அக்னியைச் சபித்து விட்டார். அனைத்து உலகங்களிலும் வேள்விகளின் காணிக்கையை ஏற்பவரும், கடவுளர்களின் வாயாக இருந்து வேள்விகளில் முதல் காணிக்கையைப் பெறுபவருமான அக்னி எங்ஙனம் அனைத்தையும் உண்பவராக ஆகமுடியும்?” என்றனர்.

அதைக்கேட்ட பிரம்மன் அக்னியை தன்முன்னே வரும்படி கட்டளைவிட்டார். தன் முன்னர் தோன்றிய அக்னியிடம் மென்மையான வார்த்தைகளால், “அனைத்து உலகங்களையும் ஆக்கவும் அழிக்கவும் வல்ல அக்னிதேவனே! வேள்விகளையும் சடங்குகளையும் வளர்ப்பதன் மூலம் மூவுலகங்களையும் காப்பவனே! சடங்குகள் செழித்தோங்கும்படி நீ நடக்கவேண்டும். வேள்வி நெய்யை உண்பவனே! ஏன் இப்படி எங்களை ஏமாற்றுகிறாய்? நீயே இந்த உலகத்தில் எப்போதும் தூய்மையானவன். நீயே அனைத்து உயிர்களின் புகலிடம். நீ உனது முழு உடலாலும் ஒருபோதும் அனைத்தையும் உண்பவனாக ஆக முடியாது. உயர்ந்து எரியும் சுடர்களை உடையவனே! சடங்குகளை ஏற்றுக்கொள்ளும் சுடர்கள் மட்டுமே அனைத்தையும் உண்ணும். எப்படி சூரியனின் கதிர்கள் பட்டதும் அனைத்தும் தூய்மையாகின்றதோ அப்படியே உன்னில் எரியும் அனைத்தும் தூய்மையாகும். அக்னியே! நீயே ஒப்பற்ற ஆற்றல் மிக்கவன். முன்னும் பின்னும் எரியும் சுடர்களை வெளிப்படுத்தும் உன்னுடைய ஒளிபொருந்திய ஆற்றலால் பிருகுவின் சாபம் உண்மையாகட்டும். உன்னுடைய வாயின் வழியாக வழங்கப்படும் கடவுளர்களின் பங்கையும் உன்னுடைய பங்கையும் ஏற்றுக்கொள்வாயாக” என்று பிரம்மவேன் சொன்னார்.

அதற்கு அக்னி, “அப்படியே ஆகட்டும்” என்று சொல்லி பிரம்மனின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டவரானார். அதைக்கேட்டு தேவர்களும் முனிவர்களும் அளவற்ற சந்தோஷமடைந்தனர். அவர்கள் அனைத்து வேள்விகளையும் சடங்குகளையும் முன்பு போலவே தடையின்றி செய்தனர். தனக்கேற்பட்ட சாபத்தின் கறையிலிருந்து விடுபட்ட அக்னியும் மிக்க மகிழ்சியடைந்தான்.
Related Posts Plugin for WordPress, Blogger...