May 19, 2017

3. பரீஷித்து மகராஜா

முனிவரான உதங்கர் பல நாட்கள் பிரணாயத்திற்குப் பின் அஸ்தினபுரம் வந்தடைந்தார். நெடுந்தூரப் பிரயாணம் அவரைக் களைப்படைய வைத்தபோதும் நாகங்களின் அரசனான தட்சகன் மீது அவருக்கிருந்த அபரிமிதமான கோபம் அவரை தொடர்ந்து பயணம் செய்யவைத்தது. தற்போது அவருக்கிருந்த ஒரே குறிக்கோள் தட்சகனைப் பழிவாங்க வேண்டும் என்பதுதான். எனவே அஸ்தினபுரம் வந்தவுடனே அவர் நேரே அரசன் ஜனமேஜயனைச் சந்தித்தார். அப்போதுதான் தஷசீலத்தை வென்று வெற்றியுடன் திரும்பியிருந்த ஜனமேஜயன் தன் மந்திரிகள் புடைசூழ அரண்மனையில் வீற்றிருந்தான்.

ஜனமேஜயன் வீற்றிருந்த கொலு மண்டபத்தில் திடுமென நுழைந்து, “அரசர்களில் சிறந்தவனே! முக்கியமாக, அவசரமாக கவனிக்கவேண்டிய விஷயங்கள் இருக்கும்போது உன்னுடைய நேரத்தை இப்படிச் சில்லறை விஷயங்களில் செலவிடுகிறாயே?” என்று அரசன் மீது குற்றம் சுமத்தும் தோரணையில் கேட்டார். முனிவரை முற்றிலும் எதிர்பாரத ஜனமேஜயன் உதங்கரை முறைப்படி வணங்கி கனிவான வார்த்தையில், “முனிவரே! ஷத்திரிய முறைப்படி என்ன செய்யவேண்டுமோ அதையே நான் செய்துவருகிறேன். முனிவரில் சிறந்தவரே! நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள். தங்கள் வார்த்தைகளைப் பணிவன்போடு நிறைவேற்ற நான் காத்திருக்கிறேன்” என்றான்.

“அரசருக்கு அரசனே! தட்சகன் தங்கள் தந்தையைக் கொடூரமாகக் கொன்றான். எனவே அந்த துர்க்குணம் கொண்ட நாகத்தைப் பழிவாங்க வேண்டும். நீ அவனை பழிவாங்க சரியான தருணம் வந்துவிட்டதாக் கருதுகிறேன். அரசனே! நற்குணம் கொண்ட உன் தந்தை எந்தத் தவறும் செய்யவில்லை எனினும், இடியால் மரம் சரிவதுபோல, அந்த துர்க்குணம் கொண்ட நாகம் அவரைக் கடித்து மரணத்தில் தள்ளியது. நாகங்களின் இனத்திலேயே மிக மோசமான தட்சகன் அதிகாரத்தின் போதையில், கடவுளுக்கு நிகரான உன் தந்தையை, அரசர்களுள் முனிவர்களின் பாதுகாவலனாகத் திகழ்ந்தவரைக் கடித்த மாபெரும் குற்றத்தைச் செய்துவிட்டான். அந்த துஷ்டன் தங்கள் தந்தையைக் காப்பாற்ற முயன்ற காஷ்யபரையும் விடவில்லை. ஆகவே அரசனே! நீ அந்த துஷ்டனை நாக-வேள்வியின் நெருப்பிலிட்டுப் பொசுக்கவேண்டும். எனவே அதற்குத் தேவையானதைச் செய்வாயாக! அரசனே! நீ அப்படிச் செய்வது எனக்கும் பெரிய நன்மையைச் செய்ததாக ஆகும். ஏனெனில் அந்த துஷ்டன் நான் என்னுடைய குருவின் பணியைச் செய்கையில் குறுக்கே வந்து தடை ஏற்படுத்தினான்” என்று உதங்கர் தனக்கு தட்சகன் மீதிருந்த அளவற்ற கோபத்தை ஜனமேஜயன் மனதில் ஏற்றிவைத்தார்.

உதங்கரின் வார்த்தைகளைக் கேட்ட ஜனமேஜயன் தட்சகன் மீது பெரும் கோபம் கொண்டான். நெய்யானது வேள்வியைத் தூண்டுவது போல உதங்கரின் வார்த்தைகள் அரசனின் உள்ளத்தைப் பற்றி எரியச்செய்தன. தனது தந்தையின் மரணத்திற்கான காரணத்தை உதங்கரின் வாயிலாகக் கேட்டபோது ஜனமேஜயன் உள்ளம் துயரத்திலும் வேதனையிலும் பரிதவித்தது.

சோகத்தில் ஆழ்ந்த அவன் தனது மந்திரிகளிடம் தனது தந்தையின் மோட்சத்தைப் பற்றிய விபரங்களை விரிவாகச் சொல்லும்படி கேட்டான். வயதில் மூத்தவரும் அறிவிற் சிறந்தவருமான அமைச்சர் ஒருவர் ஜனமேஜயனுக்கு அவர் தந்தையான பரீஷித்து மகராஜாவின் கதையைச் சொல்லத்தொடங்கினார்.

குரு வம்சத்தில் பிறந்த பரீஷித்து வில்வித்தையில் நிகரற்றவன். அவன் தனது தாத்தாவைப் போலவே வேட்டையாடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டு, கடவுள் உலகத்தைச் சுற்றுவது போல பல்வேறு இடங்களுக்குச் சென்று பலவகையான காட்டு விலங்குகளை வேட்டையாடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். ஒரு நாள் வேட்டையில் மான் ஒன்றின் மீது அவன் பாணத்தைத் தொடுக்க, தன் மீது தைத்த அம்புடன் மான் காட்டுக்குள் ஓடிவிட்டது. அந்த மானைத் தேடித்தொடர்ந்து அடர்ந்த கானகத்தில் நுழைந்த பரீஷித்து, அந்த கானகத்தின் எல்லாப் பகுதியிலும் ருத்ரதேவனாக கையில் வில்லுடன் மானதை் தேடி அலைந்தான். பரீஷித்தின் அம்பு துளைக்கப்பட்ட அந்த மான் உயிருடன் தப்பித்திருக்க வாய்ப்பில்லை என்றாலும், அந்த மான் அவன் கண்களிலிருந்து மறைந்தது, அவன் சொர்க்கத்திற்குச் செல்லும் நேரம் வந்துவிட்டதையே சுட்டியது.

களைப்பினாலும் தாகத்தினாலும் சோர்ந்துபோன பரீஷித்து கானகத்தின் ஒரு பகுதியில், மாட்டுக்கொட்டகையில் தனது தாயின் மடியில் பாலருந்திய கன்றின் வாயிலிருந்து சிந்திய பாலை உறிஞ்சி குடித்துக்கொண்டிருந்த, ஒரு துறவியைக் கண்டான். பரீஷித்து அவரிடம், “அந்தணரே! நான் அபிமன்யுவின் மகன் பரீஷித்து. என்னுடைய அம்பினால் துளைக்கப்பட்ட மான் ஒன்று இந்தப்பக்கமாகச் சென்றதைப் பார்த்தீர்களா?” என்று கேட்டான். அந்தத் துறவி மௌனவிரதம் மேற்கொண்டிருந்ததால் பதில் ஏதும் சொல்லாமலிருந்தார். அதைக்கண்டு கோபம் கொண்ட பரீஷித்து, இறந்து கிடந்த பாம்பை தனது வில்லால் எடுத்து அவர் கழுத்தில் மாலையாக இட்டான். அதைக்கண்ட துறவி நல்லதாகவோ அல்லது கெட்டதாகவோ எந்தவொரு வார்த்தையும் பேசாதிருந்தார். துறவியின் மௌனத்தைக் கண்ட பரீஷித்து தன் கோபம் தணிந்து தன் செயலுக்கு மன்னிப்புக் கோரிவிட்டு அரண்மனைக்குத் திரும்பினான்.

அந்த முனிவருக்கு தவத்தின் பேராற்றல் மிக்க சிருங்கி என்ற இளவயது மகனொருவன் இருந்தான். மிகக் கடுமையான நோன்புகள் உடைய அவன், கட்டுப்படுத்த முடியாத முன்கோபத்தை கொண்டிருந்தான். அனைத்து உயிர்களையும் உய்விக்கும் பிரம்மனை மிகுந்த பக்தியுடன் வணங்கி வழிபடும் அவன் அவரது கட்டளைப்படி அன்று வீட்டிற்குத் திரும்பினான்.

அவனுடைய நண்பன் கிரிஷா அவனிடம் கேலியாக அவனது தந்தைக்கு நேர்ந்ததைக் கூறினான். அதைக்கேட்டதும் எளிதாக கோபத்தின் வசப்பட்ட அவனிடத்தில் கோபம் கொடிய நஞ்சாகத் திரண்டது.

மேலும், “சிருங்கி! உன்னிடம் பேராற்றல் இருப்பதாக எண்ணி தற்பெருமை கொள்ளாதே. உன் தந்தைக்கு நேர்ந்த அவமானத்தை கேள்விப்பட்டும் நீ மௌனமாக இருப்பது தகாது. உன்னுடைய தந்தை ஒரு விலங்கின் பிணத்தைச் சுமந்து திரிவதைப் பார்க்கையில் உனது ஆற்றலும் பெருமையும் கோபமும் எங்கே போயிற்று?” என்று கிரிஷா ஆவேசத்துடன் வினவினான்.

அதைக்கேட்டு வார்த்தைகளின் இனிமையை விட்டொழித்த சிருங்கி, “கிருஷ்ணா! என்னுடைய தந்தை தனது தோள்களில் பிணத்தைச் சுமக்கும்படி ஏன் நேர்ந்தது?” என்று கர்ஜித்தான்.

“நண்பனே! அரசனான பரீஷித்து கானகத்தில் வேட்டைக்கு வந்திருந்தபோது அவன்தான் உனது தந்தையின் தோளில் இறந்த நாகத்தைப் போட்டான்.”

“அந்த துர்க்குணம் கொண்ட அரசனுக்கு எனது தந்தை செய்த தீங்கு என்ன என்பதை மட்டும் சொல் அப்போது நீ என்னுடைய தவத்தின் பேராற்றலைக் காண்பாய்.”

கிரிஷா நடந்ததை விளக்கமாகக் கூறினான்.

அதைக்கேட்டு கற்சிலை என நின்றான் சிருங்கி. அவன் கண்கள் கோபத்தால் சிவந்தன. அவன் கொழுந்துவிட்டெறியும் தனலைப்போலானான். தன்னிடமுள்ள தவத்தின் ஆற்றலால் தன்ணீரைக் கைகளில் ஏந்தி, “அந்தணர்களை அசுத்தப்படுத்தியவனும், குரு வம்சத்தையே அவமதித்தவனும், துர்க்குணம் கொண்டனுமான அந்த அரசன், இன்றிலிருந்து ஏழு நாட்களுக்குள், என் வார்த்தைகளுக்குக் கட்டுப்பட்ட கொடிய விஷம் கொண்ட நாகங்களின் அரசன் தட்சகனால் தீண்டப்பட்டு எமனுலகம் ஏகுவான்” என்று சாபமிட்டான்.

இவ்வாறு கோபத்துடன் பரீஷித்தைச் சபித்த சிருங்கி தனது தந்தையிருந்த மாட்டுக்கொட்டகைக்கு வந்தான். அவர் இன்னும் தனது தோள்களில் இறந்த பாம்பைச் சுமந்துகொண்டிருப்பதைக் கண்டதும் மீண்டும் சினத்தின் வசப்பட்ட அவன் கண்ணீர் மல்க, “தந்தையே! அந்த துர்க்குணம் கொண்ட அரசன் தங்களை அவமதித்ததை அறிந்ததும் அவனை கோபத்தில் சபித்துவிட்டேன். இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சகன் என்ற நாகம் தீண்டி அவன் மரணமடைவான்” என்றான்.

அப்போது அவன் தந்தையான சமீகர் கோபமடைந்த தன் மகனிடம், “மகனே! உன்னுடைய நடத்தை எனக்கு மகிழ்வைத் தரவில்லை. ஒரு துறவிக்கு இது அழகல்ல. நாம் அந்த அரசனின் ஆட்சிக்குட்பட்ட இடத்தில் வாழ்வதால் அவனால் சரியானபடிக்குப் பாதுகாக்கப்பட்டு வாழ்கிறோம். நாம் அவனது கெட்ட நடத்தையை பொருட்படுத்தத் தேவையில்லை. அரசாளும் மன்னர்கள் எப்போதும் நம்மைப்போன்றவர்களால் மன்னிக்கபட வேண்டியவர்கள். மகனே! நீ தர்மத்தை அழித்தால் அது உன்னையே அழிக்கும் என்பதில் சந்தேகம் வேண்டியதில்லை. ஒரு அரசன் நம்மைப் பாதுகாக்கவில்லையெனில் நாம் பலவிதங்களிலும் கஷ்டப்படுவோம். அப்போது நாம் நமது விருப்பத்தின்படி தர்மத்தை அனுசரிக்க முடியாது. ஆகவே, தர்மத்தை அறிந்த ஒருவன், அரசன் தங்களைப் பாதுகாப்பதாலேயே தர்மத்தை முறைப்படி அனுசரிக்க முடிகிறது என்பதையும் அப்படிச்செய்வதில் அரசனுக்கும் பங்கிருக்கிறது என்பதையும் அறியவேண்டும். தன்னுடைய கொள்ளுத் தாத்தாவைப் போலவே பரீஷித்து நம்மைப் பாதுகாத்து வருகிறான். இன்று அவன் பசி தாகத்தால் களைப்படைந்த நிலையில் என்னிடம் வந்தபோது நான் மௌனவிரதம் அனுசரிப்பதை அவன் அறியமாட்டான். எனவே உன்னுடைய குழந்தைத் தனமான நடத்தையால் தீங்கு செய்துவிட்டாய். மகனே! அவன் எந்த வழியிலும் நம்மிடமிருந்து சாபம் பெறத் தகுதியானவனல்ல” என்று அறிவுரை கூறினார்.

தந்தையின் அறிவுரையைக் கேட்ட சிருங்கி, “தந்தையே! என்னுடைய செயல் முறையற்றதாகவும் அவசரகதியில் செய்ததாகவும் இருக்கலாம். அது தங்களுக்கு மகிழ்வையோ அல்லது துன்பத்தையோ கொடுக்கலாம். எப்படியிருப்பினும் நான் சொன்னவை ஒருபோதும் வீணாகாது. தந்தையே! அது வேறெப்படியும் இருக்கச் சாத்தியமில்லை. நான் ஒருபோதும் விளையாட்டுக்குக்கூட பொய் சொன்னதில்லை. அப்படியிருக்க சாபத்தில் சொல்வேனா என்ன?” என்றான்.

“மகனே! நீ ஆற்றல் மிக்கவன் என்பதையும் எப்போதும் உண்மையே பேசுபவன் என்பதையும் நானறிவேன். உன்னுடைய வாழ்க்கையில் நீ எப்போதும் பொய் சொன்னதேயில்லை. எனவே உன்னுடைய இந்த சாபம் தவறானதாக இருக்க முடியாது. ஆனாலும் மகன் பெரியவனான பிறகும் ஒரு தந்தை அவனுக்கு அறிவுரை சொல்வது அவசியம். அப்படிச் செய்வதாலேயே ஒரு மகன் நன்னடத்தையும், பார் புகழும் பெருமையும் அடைய முடியும். நீ இன்னும் சிறுவனாதலால் உனக்கு அதிகப்படியான அறிவுரை தேவையாகிறது. எப்போதும் தவத்திலிருக்கும் நீ தேவையற்ற கோபத்தை விட்டொழித்து உன் ஆற்றலை அதிகரித்து, தர்மத்தின் வழி நடக்கவேண்டும். நீ என்னுடைய மகன் என்பதாலும் உன்னுடைய அவசர புத்தியைக் கண்டதாலும் நான் இந்த அறிவுரையை உனக்குச் சொல்கிறேன். கானகத்தில் என்ன உணவு கிடைக்குமோ அதை உண்டு அமைதியான வாழ்வை நடத்து. உன்னுடைய கோபத்தை விட்டொழி. இல்லாவிடில் நீ ஒருபோதும் தர்மத்தின் வழி நடக்க முடியாது. பெருமுயற்சி செய்து உன்னுடைய தவத்தினால் நீ பெற்ற நன்மைகளை கோபம் அழித்துவிடும். அப்படி நன்மைகளை இழந்துவிட்டவனுக்கு எதிர்காலம் இல்லை. எவனொருவன் மன்னிக்கிறானோ அவனுக்கே தவத்தின் பலன் கிட்டும். மன்னிப்பின் நற்பயன் இந்த உலகத்திற்கு மட்டுமில்லாது அடுத்த உலகத்திற்கும் தொடர்ந்து வரும். எனவே நீ உன்னுடைய புலன்களை கட்டுப்பாட்டில் வைத்து மன்னிக்கும் பண்பை வளர்த்துக்கொள்வாயாக. மன்னிப்பதன் வாயிலாகவே நீ பிரம்மனும் அடையமுடியாத உலகத்தை அடைவாய். மகனே! அமைதியான வாழ்வு வாழ என்னுடைய சக்திக்குட்பட்ட காரியத்தை நான் செய்கிறேன். ‘நீ என்னை அவமதித்துவிட்டதாக் கருதி என்னுடைய மகன் தன்னுடைய முதிற்சியற்ற குழந்தைத் தனமான நடத்தை மற்றும் கோபத்தால் உன்னைச் சபித்துவிட்டான்’ என்பதை நான் அரசனுக்கு தெரியப்படுத்துகிறேன்” என்று சமீகர் நீண்ட அறிவுரையை தன் மகனுக்குக் கூறினார்.

நோன்புகளை கடுமையாகக் கடைபிடிக்கும், சிறந்த தவமுனியான சமீகர் அதன் பிறகு இரக்கத்தால் உந்தப்பட்டு தன் சீடன் ஒருவனை அரசன் பரீஷித்திடம் அனுப்பினார். கௌரமுகர் என்ற பெயர் கொண்ட அவர் நன்னடத்தையும் நோன்புகளைக் கடுமையாகக் கடைபிடிக்கும் இயல்பும் உடையவர். முதலில் அரசனின் நலத்தைப் பற்றி விசாரிக்கவேண்டும் என்றும் அதன்பிறகே தான் வந்த நோக்கத்தை தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தப்பட்டார். நெடுந்தூர பிரயாணத்திற்குப் பின் கௌரமுகர் பரீஷித்தின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். தான் வந்திருக்கும் செய்தியை பணியாள் மூலமாக அரசனுக்குத் தெரிவித்தார். பரீஷித்து அவரை உரிய மரியாதையோடு உபசரித்து ஆசனம் கொடுத்தான். சற்று ஓய்வெடுத்த அவர், தான் வந்த காரியத்தை தன்னுடைய குரு சொன்ன வார்த்தைகள் பிசகாமல் அப்படியே தெரிவித்தார்.

“அரசர்களுள் அரசனே! சமீகர் என்ற பெயர் கொண்ட துறவி உன்னுடைய ராஜ்ஜியத்தில் வாழ்ந்துவருகிறார். தன் புலன்களை அடக்கிய தவசீலரான அவர் மௌனவிரதம் அனுஷ்டித்த படியால் நீ இன்று அவர் தோள் மீது இறந்த நாகத்தை போட்டபோது அவர் பதில் சொல்லவில்லை. மேலும் அவர் நீ செய்த செயலையும் மன்னித்தார். ஆனால் அவரது மகன் உன்னை மன்னிக்கத் தயாராக இல்லை. எனவே அவர் அவரது தந்தைக்குத் தெரியாமல் இன்றைய தினம் உன்னை சபித்துவிட்டார். இன்னும் ஏழு நாட்களுக்குள் தட்சகன் என்ற நாகம் உன்னுடைய மரணத்திற்குக் காரணமாக இருப்பான். தன்னுடைய மகனின் கோபத்தைத் தணிக்க இயலாத முனிவர் உன்னுடைய நலம் கருதி இந்தச் செய்தியை உன்னிடம் தெரிவிக்கச் சொன்னார்” என்றார் கௌரமுகர்.

இத்தகைய பயங்கரமான வார்த்தைகளைக் கேட்ட குரு வம்சத்து அரசனான பரீஷித்து தன்னுடைய துர்ச்செயலை நினைவுகூர்ந்து கழிவிரக்கம் கொண்டு கல்லாய் சமைந்தான். தன்னால் அவமதிக்கப்பட்ட முனிவர் மௌனவிரதம் மேற்கொண்டிருந்தார் என்பதை எண்ணிப்பார்த்து அவன் மேலும் மேலும் கழிவிரக்கம் கொண்டவனாக துன்பத்தில் ஆழ்ந்தான். தனக்கு வரவிருக்கும் மரணத்தைப் பற்றி லவேசமும் கவலைப்படாத அவன் தான் செய்துவிட்ட அவச்செயலை நினைத்தே பெரிதும் வருந்தினான்.

அதற்குப் பின்னர் கௌரமுகரை வழியனுப்பி வைத்த பரீஷித்து உடனடியாக அமைச்சர்களை அழைத்து செய்யவேண்டியதைக் குறித்து ஆலோசனை செய்தான். தூண்களை நிர்மாணித்து அதன் மீது அரண்மனை ஒன்றைக் கட்டி, இரவும் பகலும் காவலர்கள் காவல்காக்க அதில் அரசன் வசிக்கவேண்டும் என்றும், பாதுகாப்புக்காக அரண்மனையின் அனைத்து பகுதிகளிலும் மருத்துவர்களும் மருந்துகளும் இருப்பதோடல்லாமல் மந்திரம் ஓதுவதில் வல்லவர்களான அந்தணர்களும் அரண்மனையில் தங்கியிருக்க வேண்டும் எனவும் முடிவு செய்தார்கள். மேலும் அரசன் தன் அன்றாட அலுவல்களை கவனிக்கும் பொருட்டு அவன் எப்போதும் அமைச்சர்கள் சூழ இருக்கவேண்டும் என்றும் முடிவாயிற்று.

எந்தச் சிக்கலுமின்றி ஆறு நாட்கள் கழிந்துவிட ஏழாவது நாள் வந்தது.

அந்தணர்களில் சிறந்தவரான காஷியபர், தட்சகன் தீண்டி பரீஷித்து எமனுலகம் ஏகுவான் என்பதை அறிந்ததும், தான் கற்றிருந்த விஷமுறிவு ஞானத்தால், பரீஷித்தை குணப்படுத்த எண்ணியவராக அஸ்தினபுரம் வந்தார். அப்படி குணப்படுத்தினால் தனக்குப் பேரும் புகழும், செல்வமும் கிட்டும் என்று நினைத்தார். அந்த ஒரே நினைப்பில் வந்துகொண்டிருந்த அவரை வழியில் அந்தணர் உருவில் எதிர்கொண்ட தட்சகன், “அந்தணரே! தாங்கள் எந்தப் பணியை முடிக்க இவ்வளவு விரைவாகச் சென்றுகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டான்.

அதற்கு காஷ்யர், “இன்று நாகங்களில் சிறந்தவனான தட்சகன் குரு வம்சத்தைச் சேர்ந்த பரீஷித்துவை தன்னுடைய ஆற்றலால் எரிக்கப்போகிறான். நாகங்களின் அரசனான அவன் அக்னியைப் போன்ற ஆற்றலுள்ளவன். எனவே பாண்டு வம்சத்தின் வழித்தோன்றலும் வீரம் மிக்கவனுமான பரீஷித்தை தட்சகன் தீண்டினால் அவனை குணப்படுத்தும் பொருட்டு சென்றுகொண்டிருக்கிறேன்” என்றார்.

“அந்தணரே! இந்த மன்னின் அரசனை எரிக்கப்போகும் தட்சகன் நான்தான். நான் தீண்டிய யாரையும் உன்னால் குணப்படுத்த முடியாது” என்ற தட்சகன் தன் சுயஉருவை எடுத்து காஷ்யர் முன் நின்றான். அதைக்கேட்ட காஷ்யபர், “ஏ நாகமே! நான் விஷமுறிவு ஞானத்தைப் பெற்றிருக்கிறேன் எனவே நீ அரசனைத் தீண்டினாலும் நான் அவனைக் காப்பாற்றுவேன்” என்றார்.

“காஷ்யபரே! நான் தீண்டிய எந்த உயிரையும் நீ குணப்படுத்த முடியும் எனில், நான் தீண்டும் இந்த மரத்திற்கு உயிர் கொடும். பிராமணரே உமது கண் முன்னாலேயே நான் இந்த ஆலமரத்தை எரிக்கப்போகிறேன். முடிந்தால் உமக்கிருப்பதாகச் சொல்லிக்கொள்ளும் ஞானத்தின் மந்திரத்தைக் காட்டும்.”

“நாகங்களின் அரசனே! அதுவே உன்னுடைய விருப்பமென்றால் அந்த மரத்தைத் தீண்டு. நீ தீண்டியபிறகு அதற்கு நான் உயிர் கொடுக்கிறேன்.”

தட்சகன் ஆலமரத்தினருகில் சென்று அதைத் தீண்டினான். அவனால் மரத்தினுள் செலுத்தப்பட்ட கொடிய விஷம் அந்த மரத்தை எரித்து சாம்பலாக்கியது. அப்படிச் செய்தபிறகு தட்சகன் காஷ்யபரிடம், “அந்தணர்களில் சிறந்தவரே! உங்களால் முடிந்தால் காட்டின் கடவுளான இந்த மரத்திற்கு உயிர் கொடுங்கள்” என்றான் ஏளனத்துடன். எரிந்து போன மரத்தின் சாம்பலை எடுத்த காஷ்யபர், “நாகங்களின் அரசனே! உனது கண் முன்னாலேயே நான் இந்த மரத்தை உயிர்ப்பிப்பதைக் காண்பாய்” என்று சொல்லி தான் கற்ற வித்தையை பிரயோகித்தார். முதலில் இளஞ்செடியை உருவாக்கிய பிறகு அதில் இரண்டு இலைகளை முளைக்கச் செய்தார். அதன் பிறகு மரத்தின் தண்டையும் கிளைகளையும் படரவிட்டார். அப்படியே முழு மரத்தையும் திரும்பக்கொண்டு வந்தார்.

அதைக் கண்டு வியந்த தட்சகன், “அந்தணரே! தாங்கள் தவத்தின் பேரருள் பெற்றவர்! எந்த விருப்பத்தினால் உந்தப்பட்டு தாங்கள் அரசனிடம் செல்கிறீர்கள்? எந்த விருப்பத்தை நிறைவேற்றிக்கொள்ளும் ஆசையில் தாங்கள் அரசனிடம் செல்கிறீர்களோ, அது பெறுவதற்கு எவ்வளவு கடினமானதாக இருப்பினும் அதை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். அந்தணரே! தங்களின் வெற்றி சந்தேகத்திற்குரியது ஏனெனில் அரசன் முனிவரால் சபிக்கப்பட்டிருக்கிறான். அவனது வாழ்க்கை குறுகியது. அப்படி நடந்துவிட்டால் உங்களது பிரகாசமான புகழும் பெருமையும் கிரகணம் பிடித்த சூரியனைப்போல குன்றிவிடும்” என்றான்.

“நாகமே! நான் செல்வத்தை வேண்டியே அங்கே செல்கிறேன். நீ அதைக் கொடுப்பதாக இருந்தால் நான் வீட்டிற்குத் திரும்புகிறேன்.”

“அந்தணரே! தாங்கள் அரசனிடமிருந்து எவ்வளவு செல்வத்தைப் பெறுவீர்களோ அதைவிட அதிகமான செல்வத்தை நான் உங்களுக்குத் தருகிறேன். அதனால் திரும்பிச் செல்வீராக.”

தட்சகன் சொன்னதைக் கேட்ட காஷ்யபர் தன்னுடைய ஞானத்தால் அரசன் பரீஷித்தின் வாழ்வு குறுகியது என்று கண்டுகொண்டார். எனவே தான் எவ்வளவு செல்வம் வேண்டும் என்று விரும்பினாரோ அதை தட்சகனிடம் பெற்றுக்கொண்டு வந்தவழியே திரும்பிச் சென்றார்.

காஷ்யபர் சென்றபின்னர் தட்சகன் அதிவிரைவாக அஸ்தினபுரம் சென்றான். பரீஷித்து விஷமுறிவுக்கான மந்திரங்களும் மருந்துகளும் வைத்திருக்கிறான் என்பதையும் எவரும் எளிதில் அணுகமுடியாதவாறு வாழ்கிறான் என்பதையும் தட்சகன் அறிந்தான். அரசனை மாயையால் ஏமாற்றியே கொல்லவேண்டும் என்று யோசித்த தட்சகன் நாகங்களில் சிலவற்றை அந்தணர்களாக உருமாற்றம் செய்து அவர்களிடம் பழம், இலைகள், தண்ணீர் முதலியனவற்றை அரசனுக்குக் காணிக்கையாகக் கொடுக்க முடிவுசெய்தான்.

“விரைவாக அரசனிடம் சென்று சடங்கு செய்யவேண்டுமெனச் சொல்லி பழம், இலை, தண்ணீர் முதலியவற்றை அரசன் காணிக்கையாக ஏற்கும்படி செய்யுங்கள்” என்று நாகங்களுக்குக் கட்டளையிட்டான். அரசனிடம் சென்ற அந்த நாகங்கள் தர்ப்பை, தண்ணீர் மற்றும் பழங்களை அவனுக்கு காணிக்கையாகக் கொடுத்தன. அவனும் அவற்றை ஏற்றுக்கொண்டான். அவர்களின் சடங்குகள் முடிந்த பிறகு அவர்களை அனுப்பி வைத்தான்.

அந்தணர்கள் வேடமிட்டு வந்த நாகங்கள் சென்றபிறகு அரசன் தனது அமைச்சர்களை அழைத்து, “அந்த அந்தணர்கள் கொடுத்த சதைப்பற்றுள்ள பழங்களை அனைவரும் என்னுடன் சேர்ந்து உண்ணுங்கள்” என்றான். பரீஷித்து தான் சாப்பிடுவதற்காக பழம் ஒன்றை எடுக்க எத்தனித்த போது ஒரு பழத்தில் சிறிய புழு ஒன்று இருந்ததைப் பார்த்தான். அது சிறியதாக கருப்பு நிறக் கண்களுடன் செம்பு நிறத்தில் இருந்தது. அதை எடுத்த அவன் தனது அமைச்சர்களிடம், “கதிரவன் மறையப்போகிறான். இனிமேல் நான் எந்த விஷத்திற்கும் பயப்படத் தேவையில்லை. எனவே இந்தப் புழுவே தட்சகனாக என்னைக் கடிக்கட்டும். அதனால் அந்தத் துறவியின் சாபமும் பொய்க்காது பலித்ததாக ஆகட்டும்” என்றான். அமைச்சர்களும் விதியால் உந்தப்பட்டவர்களாக அரசன் சொன்னதை வரவேற்றார்கள்.

அப்படிச் சொன்ன அரசன் புன்னகையுடன் அந்த சிறிய புழுவை தன்னுடைய கழுத்தில் வைத்தான். கண்ணிமைக்கும் நொடியில் புழுவாயிருந்த தட்சகன் பெருங்குரலெடுத்துப் பேராற்றலுடன் வெளிப்பட்டு அரசனின் கழுத்தைக் கௌவிப் பிடித்தான். அரசனை தட்சகன் கழுத்தைச் சுற்றிக் கௌவிப் பிடித்ததைக் கண்ட அமைச்சர்கள் முகம் வெளிறிப்போய் பெருந்துக்கத்துடன் ஓலமிட்டனர். அப்போது தட்சகன் எழுப்பிய முழக்கத்தைக் கேட்ட அமைச்சர்கள் பயந்து தலைதெறிக்க ஓடினர். அப்படி அவர்கள் ஓடிய போது, பாம்புகளின் அரசனான தட்சகன் தாமரையின் நிறத்தில் மெல்லிய கோடாக ஆகாயத்தை வகிர்ந்து பறந்ததைக் கண்டனர். தட்சகனின் விஷத்தால் அந்த அரண்மனை எரிந்து சாம்பலானது. மின்னலால் தாக்குண்டவன் போல அரசன் கீழே சரிந்தான். அரண்மனை அந்தணர்களுக்கும், அரசாங்கப் புரோகிதர்களுக்கும், அமைச்சர்களுக்கும் பரீஷித்தின் இறுதிச் சடங்கை செய்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.


Related Posts Plugin for WordPress, Blogger...