May 16, 2017

2. உதங்கர்

அடர்ந்த காடு. அந்தக் காட்டின் ஒரு பகுதியில் வண்ண மலர்கள் பூத்துக் குலுங்கும் நந்தவனம். அந்த நந்தவனத்தை ஒட்டியவாறு சலசலத்துச் செல்லும் ஓடை. அந்த ஒடையும் நந்தவனமும் முற்றுப்பெறாத வட்டமாக சுழித்திருக்க அதன் நடுவே ஒரு பர்ணசாலை. பர்ணசாலைக்கு வெளியே முனிவர் வேதாவும் அவரது சீடர்களும், அவர் மனைவியும் மற்றும் பல பெண்களும் நின்றிருந்தனர். முனிவர் வேள்வி நடத்துவதற்காக வெளியூர் செல்வதற்காக விடைபெற்றுக் கொண்டிருந்தார்.

அவர் தனது சீடனான உதங்கரிடம், “உதங்கா! எனது வீட்டிற்கு என்னவெல்லாம் தேவையோ அவை அனைத்தையும் எந்தவிதமான குறையுமின்றி பார்த்துக்கொள்” என்று சொல்லிவிட்டு சீடர்கள் பலருடன் புறப்பட்டுச் சென்றார். உதங்கர் குருவின் வீட்டிலேயே தங்கி தன்னுடைய குருவின் ஆணைப்படி அனைத்தையும் ஒரு குறையுமின்றி செய்துவந்தார். அப்படியிருக்கையில் ஒரு நாள் அந்த வீட்டின் மூத்த பெண் ஒருத்தி அவரிடம், “அப்பனே! உன்னுடைய குருவின் மனைவி கர்ப்பம் தரிப்பதற்கான சரியான பருவத்திலிருக்கிறாள். இப்போது பார்த்து அவள் கணவன் வீட்டிலில்லை. எனவே நீ அவருடைய இடத்திலிருந்து அனைத்தையும் செய்யவேண்டும். அவளுடைய கர்பந்தரிக்கும் பருவம் வீணாகபோய்விடக் கூடாது” என்றாள். அதற்கு உதங்கர், “அம்மா! ஒரு பெண்ணின் பேச்சைக்கேட்டு நான் அவ்வாறு செய்வது சரியாக இருக்காது. எனது குரு அவ்வாறு செய்யுமாறு என்னை பணிக்கவில்லை” என்று அந்தப் பெண் சொன்னதை மறுதலித்தார்.

அதற்குச் சிறிது காலத்திற்குப் பிறகு முனிவர் வீட்டிற்குத் திரும்பினார். அவர் நடந்த அனைத்தையும் அறிந்து மிகவும் மகிழ்ந்து, “உதங்கா! என் மகனே! நான் உனக்கு என்ன கைம்மாறு செய்வேன்? நீ நேர்மையாக இருந்து எது சரியானதோ அதை மட்டுமே செய்திருக்கிறாய். அதனால் நம் இருவருக்கும் இடையான அன்பு ஓங்கி வளர்ந்திருக்கிறது. எனவே இங்கிருந்து செல்ல உனக்கு அனுமதி கொடுக்கிறேன். உனது விருப்பம்போல் சென்றுவா. உனது எல்லா ஆசைகளும் நிறைவேறும்” என்று வாழ்த்தினார்.

“குருவே! தங்களின் விருப்பம் எதுவோ அப்படியே செய்ய எனக்கு ஆணையிடுங்கள். எவனொருவன் சரியாக திருப்பிக்கொடுக்கும் தகுதியில்லாதவனோ அவன் கேட்பதும், எவனொருவன் சரியாக திரும்பப்பெறும் தகுதியில்லாதவனோ அவன் கொடுப்பதும், இருவரில் ஒருவரை மரணத்தில் தள்ளும் என்றும் அவர்களுக்கிடையே பகை வளரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. தற்போது நான் தங்களை விட்டுச்செல்ல அனுமதி அளித்திருக்கிறீர்கள் எனவே தாங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதைச்செய்ய நான் கடமைப்பட்டுள்ளேன்” என்றார் உதங்கர்.

உதங்கரின் வார்த்தைகளைக் கேட்ட வேதா, “உதங்கா! என் மகனே! நீ சிறிது காலம் காத்திரு. காலம் வரும்போது நான் கேட்கிறேன்” என்றார். உதங்கரும் தன் குருவின் கட்டளைக்காகக் காத்திருந்தார். ஆனால் குரு எதுவும் கேளாது அமைதியாக இருந்தார். எனவே உதங்கர் மீண்டும் அவரிடம், “குருவே! தங்களுக்கு என்ன வேண்டும் என்று கட்டளையிடுங்கள்” என்று கேட்டார்.

“உதங்கா! என் மகனே! நீ உனது குருவிற்கு என்ன கொடுப்பது என்று பலமுறை கேட்டுவிட்டாய். ஆகவே நீ என் மனைவியிடம் சென்று அவளுக்கு என்ன வேண்டும் என்று கேள். அவள் என்ன விரும்புகிறாளோ அதையே அவளுக்குப் பரிசாகக் கொடு” என்று சொன்னார் முனிவர்.

தனது குருவின் சொற்படி உதங்கர் அவர் மனைவியிடம் சென்று, “அம்மா! நான் எனது வீட்டிற்குச் செல்ல எனது குரு அனுமதி கொடுத்துள்ளார். ஆனால் அவருக்கு விருப்பமான பரிசொன்றை கொடுத்து அவரை மகிழ்வித்துவிட்டு எந்தப் பொறுப்புமின்றி வீட்டிற்குச் செல்ல விரும்புகிறேன். எனது குரு காணிக்கையாக தங்களுக்கு என்னவேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்று கேட்டார். உதங்கர் அவ்வாறு கேட்க முனிவரின் மனைவி, “பௌசிய அரசனிடம் சென்று அவனுடைய ராணி அணிந்துள்ள காதணிகளைக் கொண்டு வா. இன்றிலிருந்து நான்காவது தினம் புனிதநாள். அந்த நன்னாளில் இங்கு வரும் அந்தணர்கள் முன்னிலையில் அந்தப் பிரகாசமான காதணிகளுடன் பணிவிடை செய்ய விரும்புகிறேன். அதைச் செய்தால் உனக்கு நற்பேறு உண்டாகும்” என்று தன் விருப்பத்தைத் தெரிவித்தாள்.

முனி பத்தினியின் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டு உதங்கர் பௌசிய அரசனைத் தேடி பயணம் மேற்கொண்டார். அப்போது வழியில் அசாதாரணமான பெரிய உருவம் கொண்ட காளையின் மீது அசாதாரணமான பெரும் தோற்றமுடைய மனிதன் ஒருவன் பயணிப்பதைக் கண்டார். அவன் உதங்கரை அழைத்து, “உதங்கா! இந்தக் காளையின் சாணத்தை சாப்பிடு” என்றான். உதங்கர் மறுக்கவே அந்த மனிதன் மீண்டும், “உதங்கா தயங்காமல் சாப்பிடு. இதற்கு முன்னர் உன் குரு இதைச் சாப்பிட்டிருக்கிறார்” என்றான். அதன் பிறகு உதங்கர் அந்தக் காளையின் சாணத்தைச் சாப்பிட்டு, சிறுநீரையும் குடித்தார். அதன் பிறகு பௌசிய மன்னனைத் தேடி மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்தார்.

நீண்ட தூரப் பயணத்திற்குப் பிறகு அவர் பௌசிய அரசனின் அரண்மணையை அடைந்தார். அரசனைச் சந்தித்த உதங்கர் அவனை வணங்கி, “மன்னா! நான் உன்னிடம் ஒரு கோரிக்கையோடு வந்திருக்கிறேன்” என்றார். அரசனும் உதங்கரை வணங்கி, “தவசீலரே! நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டான்.

“அரசே! தங்கள் மனைவி அணிந்துள்ள காதணிகள் எனக்கு வேண்டும். அதை நான் எனது குருவுக்குக் காணிக்கையாகச் செலுத்தவேண்டும்.”

“நல்லது முனிவரே! தாங்கள் அந்தப்புரம் சென்று ராணியிடம் கேளுங்கள்” என்று அரசன் உதங்கரை அந்தப்புரம் அனுப்பி வைத்தான்.

அங்கே ராணியைத் தேடிய உதங்கர் ஒருவரையும் காணாமல் திரும்பி, “மன்னா! உனது ராணி அந்தப்புரத்தில் இல்லை. அங்கே அவளை நான் பார்க்கவில்லை. என்னிடம் இப்படிப் பொய் சொல்வது நல்லதல்ல” என்றார்.

உதங்கர் கூறியதைக் கேட்ட அரசன் சற்று நேரம் யோசித்தான். பிறகு உதங்கரிடம், “உதங்கரே! தாங்கள் ஏதேனும் தீட்டான உணவை உண்டீர்களா? யோசித்துப் பாரும். கற்புக்கரசியான எனது மனைவி தீட்டு உணவை உண்டவர்களின் கண்களுக்குத் தெரியமாட்டாள்” என்றான்.

அரசன் சொன்னதைக் கேட்டதும் நினைவுக்கு வந்தவராக உதங்கர், “ஆமாம். நான் உண்ட பின் நீரில் செய்யவேண்டிய சுத்திகரிப்பு சடங்கை அவசரத்தில் நடந்துகொண்டே செய்தேன்” என்றார்.

“இது சடங்கை மீறிய செயலாகும். சுத்திகரிப்பு சடங்கை நடந்துகொண்டோ நின்றுகொண்டோ செய்யக்கூடாது” என்றான் அரசன்.

அரசன் சொன்னதை ஏற்றுக்கொண்ட உதங்கர் கிழக்கு நோக்கி தரையில் அமர்ந்து, முதலில் கைகால்களையும் முகத்தையும் தண்ணீரால் கழுவினார். பிறகு சத்தமின்றி மூன்று முறை தண்ணீரை உறிஞ்சி தனது உள்ளுருப்புகளைச் சுத்தம் செய்தார். அதன் பிறகு அந்தப்புரம் சென்ற அவருக்கு ராணி தென்பட்டாள்.

அவரைக் கண்ட ராணி எழுந்து நின்று வணங்கி, “முனிவரே! வரவேண்டும். நான் தங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று ஆணையிடுங்கள்” என்றாள்.

“பௌசியனின் மகராணியே! நீ அணிந்திருக்கும் காதணிகளை எனக்குக் கொடு. அதை நான் என்னுடைய குருவுக்கு காணிக்கையாகத் தர விரும்புகிறேன்” என்றார் உதங்கர்.

உதங்கரின் வெளிப்படையான வேண்டுதலைக் கேட்ட ராணி மறுப்பு ஏதும் கூறாமல் தன் காதணிகளைக் கழற்றி உதங்கரிடம் கொடுத்தாள். “பாம்புகளின் அரசனான தட்சகன் இந்தக் காதணிகளின் மீது பெருவிருப்பம் கொண்டுள்ளான். எனவே தாங்கள் இதைக் கொண்டு செல்லும்போது மிகுந்த கவனமாக இருக்கவேண்டும்” என்று எச்சரித்தாள்.

“ராணி! என்னை மீறி இவற்றை தட்சகன் அடைய முடியாது என்று உறுதியளிக்கிறேன். எனவே தாங்கள் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டாம்” என்ற உதங்கர் ராணியிடம் விடைபெற்று பௌசிய அரசனிடம் வந்தார்.

“பௌசிய மன்னனே! நான் பெரிதும் மனம் மகிழ்ந்தேன்” என்றார்.

“தவசீலரே! விருந்தினருக்குரிய பல்வேறு தகுதிகளைத் தாங்கள் கொண்டுள்ளீர்கள். நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்படி ஒருவரை நான் காண்கிறேன். எனவே தங்களை வழிபட விரும்புகிறேன். அதனால் தாங்கள் இன்னும் சற்று காலம் இங்கே தங்கியிருக்க வேண்டும்” என்று பௌசிய அரசன் உதங்கரை கேட்டுக்கொண்டான்.

“மன்னா நான் காத்திருக்கிறேன். ஆனால் நான் விரைவில் செல்ல ஆசைப்படுகிறேன். எனவே என்ன உணவு தயாராக இருக்கிறதோ அவற்றை உடனடியாகக் கொண்டு வா” என்றார்.

அரசனும் தாயாராக இருந்த உணவை உதங்கருக்குக் கொடுத்தான். அந்த உணவு ஆறிப்போய் இருந்ததோடு அதில் தலைமுடியும் இருந்தது. அசுத்தமான உணவை தனக்குக் கொடுத்தமையால் கோபம் கொண்ட உதங்கர், “அரசனே! அசுத்தமான உணவை எனக்குக் கொடுத்தமையால் நீ குருடனாக ஆகக்கடவாய்” என்று சாபமிட்டார். அதைக்கேட்டு கோபம் கொண்ட அரசனும், “சுத்தமான உணவை சுத்தமற்றது என்று கூறும் உங்களுக்குப் பிள்ளைப்பேறு இல்லாமலாகட்டும்” என்று பதிலுக்குச் சபித்தான்.

அதன் பிறகு பௌசிய அரசன் உதங்கருக்கு கொடுக்கப்பட்ட உணவை கவனமாக பரிசோதித்தான். தலைமுடி பின்னப்படாத பணிப்பெண்ணால் தாயரிக்கப்பட்டதால் அந்த உணவில் முடி விழுந்துகிடப்பதையும், அந்த உணவு ஆறிப்போயிருந்ததையும் அரசன் கண்டறிந்தான். தன் தவறை உணர்ந்த அவன் உதங்கரை அமைதிப்படுத்தும் விதமாக, “தவசீலரே! தங்களுக்குக் கொடுக்கப்பட்ட உணவு அசுத்தமாக இருப்பதை அறிந்து வருந்துகிறேன். நடந்துவிட்ட தவறுக்கு நான் தங்களிடம் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். தயவுசெய்து என்னை குருடனாக்கி விடாதீர்கள்” என்று கெஞ்சிக் கேட்டான்.

“நான் என்ன சொன்னேனோ அது நடந்தே தீரும். நீ நிச்சயமாக குருடனாவாய். ஆனால் நீ மிக விரைவில் உனது கண்பார்வையைத் திரும்பப் பெறுவாய். நீ எனக்கு கொடுத்த சாபம் பலிக்காது” என்றார் உதங்கர். “விரும்பினாலும்கூட என்னால் நான் கொடுத்த சாபத்தைத் திரும்ப எடுத்துக்கொள்ள முடியாது. இன்னும் கூட என்னுடைய கோபம் தணியவில்லை. அந்தணர்களின் இதயம் வெண்ணெய் போன்று மிருதுவாக இருப்பினும் அவர்களின் வார்த்தைகள் கத்தியைப் போன்று கூர்மையானவை என்பதை அறிவீர்கள் அல்லவா? ஆனால் ஷத்திரியர்கள் அப்படி அல்ல. அவர்களின் வார்த்தைகள் வெண்ணெயைப் போன்று மிருதுவாயினும் அவர்களின் இதயம் கூர்மையான ஆயுதத்தைப் போன்றது. இப்படியிருக்க நான் எனது சாபத்தைத் திரும்பப் பெற இயலாது. தாங்கள் சென்று வாருங்கள்” என்றான்.

“சுத்தமான உணவை நான் வேண்டுமென்றே அசுத்தமானது என்று சொன்னதாகக் கருதி எனக்குச் சாபமிட்டாய். ஆனால் நீ கொடுத்தது அசுத்தமான உணவுதான் என்பதை நான் நிரூபித்துவிட்டேன். அதனால் நீ இட்ட சாபம் பயனற்றுப்போகும்” என்ற உதங்கர் ராணியின் காதணிகளுடன் அங்கிருந்து வெளியேறினார்.

செல்லும் வழியில் உதங்கர் ஒரு பிச்சைக்காரன் நிர்வாணமாக தன்னை நோக்கி வருவதைக் கண்டார். அவன் சில சமயம் கண்ணால் பார்க்கக்கூடியவனாகவும் மற்றொரு சமயம் பார்க்க முடியாதவனாகவும் இருந்தான். வெகுதூரப் பயணத்தால் களைத்த உதங்கர் தாகம் மேலிட, அடர்ந்த நிழல் தந்த ஒரு மரத்தடியில் தன்னுடைய சுமைகளை வைத்துவிட்டு, அருகில் ஓடிக்கொண்டிருந்த வாய்க்காலில் தண்ணீர் குடிக்கச் சென்றார். அப்போது அங்கு வந்த அந்த பிச்சைக்காரன் உதங்கர் வைத்திருந்த பையிலிருந்த காதணிகளை திருடிக்கொண்டு ஓட முயற்சித்தான். அவனைத் தடுப்பதற்காக வேகமாக வந்த உதங்கர் அவன் மீது மோதி, அவனைப் பற்றிப் பிடித்தார். பிச்சைக்காரன் உருவில் வந்த தட்சகன் தன் சுயரூபத்தை எடுத்து தரையிலிருந்த பொந்து வழியாகப் புகுந்து நிலத்தடியில் மறைந்துபோனான்.

உதங்கர் அதே பொந்து வழியாகப் புகுந்து தட்சகனைப் பின்தொடர்ந்தார். அப்போது நாகங்களைப் பலவிதமாகப் புகழ்ந்து வாழ்த்தினார். அனைத்து நாகங்களையும் புகழ்ந்து வாழ்த்திய உதங்கர் அங்கே அழகான குதிரையுடன் வந்த மனிதன் ஒருவனையும் புகழ்ந்து வாழ்த்த அதைக்கேட்ட அவன், “முனிவரே! தங்களின் வாழ்த்துரையால் நான் மிக்க மகிழ்ச்சியடைந்தேன். உங்களை மகிழ்விக்க நான் என்ன செய்யவேண்டும்” என்று கேட்டான். அதற்கு உதங்கர், “நாகங்கள் அனைத்தும் எனது கட்டுப்பாட்டில் வரவேண்டும்” என்று கேட்டார். “அப்படியானால் இந்த குதிரையின் பிட்டத்தில் ஓங்கி அடி” என்றான் அந்த மனிதன். உதங்கர் அவ்வாறே செய்ய குதிரையின் உடம்பிலிருந்த துவாரங்களின் வழியாக புகையும் நெருப்பும் வெளிப்பட்டன. அது நாகங்களின் உலகத்தையே அழிக்க வல்லதாக இருந்தது. இதனால் எச்சரிக்கை அடைந்த தட்சகன், தீயால் கருகி மாண்டுவிடுவோம் என்று பயந்து உதங்கரின் முன்னே வந்தான். “முனிவரே தங்களின் காதணிகளை பெற்றுக்கொள்ளுங்கள்” என்று அவன் தான் எடுத்த காதணிகளை உதங்கரிடம் கொடுத்தான்.

காதணிகளை திரும்பப்பெற்ற உதங்கர் அப்போதுதான் நினைவு வரப்பெற்றவராக, “குருவின் மனைவி குறிப்பிட்ட புனித நாள் இன்றுதான். ஆனால் நானோ வெகுதொலைவில் இருக்கிறேன். நான் எப்படி இந்தக் காதணிகளை அவரிடம் கொடுப்பது?” என யோசித்தார். அப்போது அந்த மனிதன், “உதங்கரே! இந்த குதிரை மீது ஏறிக்கொள்ளும். இது உடனடியாக குருவின் வீட்டிற்கு உங்களைக் கொண்டு சேர்க்கும்” என்றான். உதங்கர் அதற்குச் சம்மதித்து குதிரை மீது ஏறிய அடுத்த வினாடியே அவரை குருவின் வீட்டில் கொண்டுவிட்டது.

அன்றைய புனிதநாளின் விருந்திற்குத் தயாராகும் பொருட்டு குளித்து முடித்து, தனது சிகையை அலங்கரிக்கையில், உதங்கர் வரமாட்டார் என்று முனிவரின் மனைவிக்குத் தோன்றியது. அவனை சபிக்கவேண்டும் என்று நினைத்தாள். அந்த நேரத்தில் சரியாக அவள் முன்னே தோன்றிய உதங்கர் அவளுக்கு வணக்கம் சொல்லி தான் கொண்டுவந்த காதணிகளை அவளிடம் கொடுத்தார்.

“உதங்கா! நீ சரியான நேரத்தில் சரியான சமயத்தில் வந்துசேர்ந்தாய். நல்ல காலமாக நான் உன்னை சபிக்க நினைத்திருந்த சமயத்தில் சரியாக வந்து சேர்ந்ததால் நற்பேறு உன்னை வந்தடையும் என்று வாழ்த்துகிறேன்” என்றாள் முனி பத்தினி.

அதன் பிறகு உதங்கர் தன்னுடைய குருவை சந்தித்தார்.

“வரவேண்டும் உதங்கா! ஏன் இவ்வளவு காலதாமதம்?” என்று குரு வேதா கேட்டார்.

“குருவே வரும் வழியில் பிச்சைக்காரன் வேடத்தில் வந்த தட்சகன் நான் கொண்டுவந்த காதணிகளை அபகரித்துச் சென்றதால் அவனைத் தொடர்ந்து நாகலோகத்திற்குச் செல்ல நேர்ந்தது. அங்கே ஒரு பெண் கருப்பு வெள்ளை நூல்களைக்கொண்டு துணி நெய்துகொண்டிருப்பதைப் பார்த்தேன். அதன் பொருள் என்ன? அங்கே பன்னிரெண்டு ஆரங்களைக் கொண்ட சக்கரத்தை ஆறு சிறுவர்கள் சுற்றிக்கொண்டிருப்பதைக் கண்டேன். அதனுடைய பொருள் என்ன? மேலும் ஒரு மனிதன் அசாதாரணமான பெரிய குதிரையுடன் வந்தான். அது என்ன? அவன் யார்? வழியில் காளையின் மீது வந்த ஒரு மனிதன் என்னை காளையின் சாணத்தைச் சாப்பிடச்சொல்லவே நானும் சாப்பிட்டேன். அந்த மனிதன் யார்? இவற்றின் அர்த்தமென்ன? தாங்கள் தயவுகூர்ந்து விளக்கவேண்டும்” என்று கேட்டார் உதங்கர்.

“நீ பார்த்தது தாதா விதா என்ற இரண்டு பெண்கள். கருப்பு வெள்ளை நூல்கள் இரவு பகலைக் குறிக்கும். பன்னிரண்டு ஆரங்கள் கொண்ட சக்கரம் வருடத்தின் பன்னிரண்டு மாதங்களையும், அதைச் சுற்றிய ஆறு சிறுவர்கள் காலத்தின் ஆறு பருவங்களையும் குறிப்பதாகும். குதிரையுடன் வந்த மனிதன் மழைக் கடவுளான பர்ஜன்யா. அந்தக் குதிரை நெருப்பின் தெய்வமான அக்னி. வழியில் நீ பார்த்த காளை யானைகளின் அரசனான ஜராவதம். அதன் மீது வந்தவன் இந்திரன். நீ சாட்பிட்ட அந்த மாட்டுச் சாணம் அமிர்தமாகும். அதைச் சாட்பிட்டதாலேயே நீ நாகலோகத்தில் நாகங்களால் கொல்லப்படாமல் தப்பித்தாய். இந்திரன் எனது நண்பன் எனவே அவனது கருணையினால்தான் நீ காதணிகளுடன் திரும்ப முடிந்தது. ஆகவே உதங்கா, இப்போது இங்கிருந்து செல்ல நான் உனக்கு அனுமதி தருகிறேன். உன்னை அனைத்து நற்பேறுகளும் வந்தடையும்” என்று குரு உதங்கரை வாழ்த்தி வழியனுப்பினார்.

Related Posts Plugin for WordPress, Blogger...