May 14, 2017

1. ஜனமேஜயன் சாபமும் தௌம்யரின் சீடர்களும்

பரீஷித்து மகாராஜாவின் மகனும் அரசனுமான ஜனமேஜயன் குருஷேத்திரத்தின் சமவெளியில் ஒரு பெரிய வேள்வி ஒன்றை நடத்திக்கொண்டிருந்தான். ஜனமேஜயனோடு அவன் தம்பியர்கள் சுருதசேனன், உக்ரசேனன், பீமசேனன் மூவரும் வேள்விச்சாலையில் வீற்றிருந்தனர். வேதியர்கள் புடைசூழ வேத மந்திரங்கள் முழங்க அப்பெரும் சமவெளி வார்த்தைகளின் ஒலியால் சூழப்பெற்றிருந்தது. யாக குண்டத்தில் எரிந்துகொண்டிருந்த அக்னி வானத்தைத் தீண்டும் பேராசையில் உயரே எழும்பி தன் செந்நிற நாக்கை நீட்டியது. வேள்வியில் இடப்பட்ட ஆகுதி பொருட்கள் நெருப்பில் கலந்து நெய்யோடு எரியும் வாசனை காற்றில் கலந்து அப்பிராந்தியமெங்கும் வியாபித்தது. 

காற்றில் பரவிய அவ்வாசனையை நுகர்ந்த நாய் குட்டி ஒன்று அந்த வேள்விச்சாலையில் நுழைந்து அங்குமிங்கும் அலைந்தது. அதைக் கண்டு கோபம் கொண்ட ஜனமேஜயனின் தம்பிகள் மூவரும் குட்டி நாயை அடித்து விரட்டினர். வலி தாங்காமல் ஒலமிட்டபடி அந்த நாய் வேள்விச்சாலையிலிருந்து வெளியேறியது. 

தன்னிருப்பிடம் அடைந்த குட்டி நாய் வேதனையால் முனகியபோது, நாய்களின் தெய்வமான சரமா என்ற அதன் தாய், “ஏன் அழுகிறாய்?” என்று குட்டியின் மீதுள்ள வாஞ்சையால் பாசத்தோடும், “யார் உன்னை அடித்தது?” என்று அதை அடித்தவர்களை தண்டிக்க வேண்டும் என்ற கோபத்தோடும் கேட்டது. “அம்மா! நான் ஜனமேஜயன் நடத்தும் வேள்விச்சாலைக்குள் எதிர்பாராதவிதமாக சென்றுவிட்டேன். அதற்காக அவன் தம்பிகள் என்னை அடித்து விரட்டிவிட்டனர்” என்று நாய் குட்டி அழுதுகொண்டே சொல்லியது. 

சரமா தன் சந்தேகத்தை நிவர்த்திசெய்துகொள்ளும் விதமாக, “நீ ஏதாவது தவறிழைத்தாயா? அதனால்தான் அவர்கள் உன்னை அடித்தார்களா?” என்று வினவியது. “இல்லை அம்மா! நான் எந்தத் தவறும் செய்யவில்லை. வேள்விக்கு வைத்திருந்த பொருட்கள் எதனிலும், குறிப்பாக நெய்யில்கூட, நான் வாய் வைக்கவில்லை. இருந்தும் அவர்கள் என்னை அடித்து துன்புறுத்தி விரட்டி விட்டார்கள்” என்று தாயின் கேள்விக்கு அழுதபடி பதில் சொல்லியது குட்டி. 

தனது மகவின் வேதனை பொறுக்காத சரமா, எந்தத் தவறும் செய்யாத தனது குட்டிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நீதி வேண்டி, தனது குட்டியுடன் ஜனமேஜயன் யாகம் நடக்கும் இடத்திற்கு வந்தது. வேள்விச் சாலை இருக்குமிடம் அடைந்த சரமா, “ஜனமேஜயா! ஜனமேஜயா! இந்த அநீதிக்கு பதில் சொல்” என்று பெருங்குரலெடுத்து ஊளையிட்டது. 

அதைக்கேட்ட ஜனமேஜயன், “நாய்களின் தெய்வமே என்ன நடந்தது? வேள்வி நடக்கையில் ஏன் இப்படி ஊளையிடுகிறாய்? என்று கேட்டான். 

“ஜனமேஜயா! எனது மகன் ஒரு தவறும் செய்யாதபோதும் தண்டிக்கப்பட்டிருக்கிறான். அவன் உங்களது யாக நெய்யில் வாய் வைக்கவில்லை. அவன் அதைக் கண்ணால் கூட காணவில்லை. அப்படியிருக்க அவனை உனது தம்பியர் அடித்துத் துன்பப் படுத்தியுள்ளனர். எனவே நீ எதிர்பாராத வேளையில் உன்னை தீமை வந்தடையும்” என்று சரமா ஜனமேஜயனுக்குச் சாபமிட்டது. 

சாபம் பெற்ற ஜனமேஜயன் மிகுந்த வருத்தத்திற்கும் துன்பத்திற்கும் ஆளானான். வேள்வி முடிந்த பின்னர் ஹஸ்தினபுரம் திரும்பிய அவன் தனக்கேற்பட்ட சாபத்திற்கு விமோசனம் பெறும் பொருட்டு பெருமுயற்சியுடன் நல்லதொரு வேதியரைத் தேடினான். 

ஒருநாள் ஜனமேஜயன் தனது ராஜ்ஜியத்திற்குட்பட்ட ஒரு காட்டில் வேட்டையாடிக்கொண்டிருந்த போது ஒரு ஆசிரமத்தைக் கண்டான். அந்த ஆசிரமத்தில் முனிவரான சுருதசிரவன் தனது மகன் சோமசிரவனுடன் வசித்து வருவதை அறிந்தான். அவரிடம் சென்ற ஜனமேஜயன் அவரை வணங்கி, தனக்கேற்பட்ட சாபத்தை விளக்கி, “முனிவரே! தங்களது மகனை எனக்குப் புரோகிதராக இருக்க அனுப்பி வைக்கவேண்டும்” என்று வேண்டினான். 

அதைக்கேட்ட முனிவர், “ஜனமேஜயா! கல்வி கேள்விகளில் சிறந்த எனது மகன் ஒர் ஒப்பற்ற துறவி. எனது விந்தை விழுங்கிய ஒரு பாம்பின் கர்ப்பத்திலிருந்து பிறந்தவன் அவன். எனவே சிவபெருமானுக்கு எதிரான பாவத்தைத் தவிர வேறு எந்தவிதமான பாவத்திலிருந்தும் உன்னை விடுவிக்கும் ஆற்றல் கொண்டவன். ஆனால் அந்தணன் யாரொருவன் வந்து எதைக் கேட்டாலும் அதைத் தயங்காமல் கொடுத்துவிடும் சபதத்தை ஏற்றிருக்கிறான். அதை நீ ஏற்றுக்கொள்வதாக இருந்தால் அவனை உன்னுடன் அழைத்துச் செல்” என்றார். 

ஜனமேஜயன் மனமகிழ்ந்து, “முனிபுங்கரே! தாங்கள் சொன்னபடியே ஆகட்டும்” என்று உறுதியளித்து சுருதசிரவனை தன்னுடைய புரோகிதராக ஏற்றுக்கொண்டு அரண்மணை திரும்பினான். தனது தம்பிகளிடம் சுருதசிரவனை தான் ஆச்சாரியராக ஏற்றுக்கொண்டதாகக் கூறிய ஜனமேஜயன், “அவர் சொல்வதை ஏன் எதற்கு என்று மறுகேள்வியின்றி செய்யவேண்டும்” என்று கேட்டுக்கொண்டான். அவர்களும் அவ்வாறே நடந்துவந்தார்கள். அங்கிருந்து கிளம்பிய ஜனமேஜயன் தஷசீலத்தின் மீது படையெடுத்துச் சென்று அதைத் தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தான்.

அதே காலகட்டத்தில், அயோதா தௌம்யர் என்ற முனிவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு உபமன்யு, ஆருணி, வேதா என்ற மூன்று சீடர்கள் இருந்தனர். பாஞ்சால நாட்டைச் சேர்ந்த ஆருணியை அழைத்த தௌம்யர், வாய்க்காலின் மதில்சுவரில் ஏற்பட்ட உடைப்பை அடைக்க உத்தரவிட்டார். தனது ஆசானின் கட்டளையை ஏற்று அங்கு சென்ற ஆருணி பல முயற்சிகள் செய்தும் அந்த உடைப்பை சரிசெய்ய முடியாததை அறிந்தான். திடீரென அவனுக்கு ஒரு யோசனை தோன்றியது. “அப்படிச் செய்தால்தான் இதை அடைக்க முடியும்” என்று முடிவுசெய்து அவனே அணையின் உடைப்பில் நுழைந்து படுத்துக்கொண்டான். இதனால் தண்ணீர் வெளியேறுவது நின்றது.

சிறிது நேரத்திற்குப் பின் தௌம்யர் தனது சீடர்களை அழைத்து, “பாஞ்சாலத்தின் ஆருணி எங்கே சென்றான்?” என்று வினவினார். சீடர்கள், “குருவே! தாங்கள்தானே அவனை அணையின் உடைப்பை சரிசெய்ய அனுப்பினீர்கள்” என்று நினைவு படுத்தினர். “அப்படியா! அவன் எங்கே இருக்கிறான் என்று அனைவரும் தேடுவோம்” என்று அனைவரையும் அழைத்துக்கொண்டு ஆருணி இருக்குமிடம் வந்தார். எங்கும் அவனைக் காணாமல், “பாஞ்சால தேசத்து ஆருணி நீ எங்கே இருக்கிறாய்? வா வெளியே” என்றழைத்தார். 

தனது குருவின் குரல் கேட்டதும் அணையின் உடைப்பில் படுத்திருந்த ஆருணி எழுந்து அவர் முன்னே சென்றான். “இங்கே என்ன செய்கிறாய்?” என்று குரு வினவ, “குருவே! அணையின் உடைப்பை வேறு எந்தவகையிலும் சரிசெய்ய முடியாமல் போகவே, அதன் உடைப்பில் நானே படுத்துக்கொண்டு நீர் வெளியேறாமல் தடுத்தேன். இப்போது தங்களது குரல் கேட்டு வெளியே வந்தேன். இதனால் தடுப்பின்றி நீர் மீண்டும் வெளியேறுகிறது. இப்போது தங்கள் கட்டளை என்னவென்று கூறுங்கள்” என்றான். 

“அணையின் உடைப்பலிருந்து எழுந்து மீண்டும் தண்ணீர் வெளியேற அனுமதித்ததால் இன்றுமுதல் நீ உத்தாலகன் (உத்தாலகன்-பிளப்பவன். மடையைப் பிளந்து வந்தவன்) என்று அறியப்படுவாய்” என்று ஆருணியை வாழ்த்திய தௌம்யர், “நீ என்னுடைய கட்டளையை சிரமேற்கொண்டு செய்துமுடித்ததால் உனக்கு நற்பெறு உண்டாகும். அனைத்து வேதங்களும் தர்மசாஸ்திரங்களும் உன்னில் ஒளிரும்” என்று வரமளித்தார். அதைக்கேட்டு மகிழ்ந்த ஆருணி அவரை வணங்கி விடைபெற்று மீண்டும் தன் நாட்டிற்குச் சென்றான். 

தௌம்யர் தனது மற்றொரு சீடனான உபமன்யுவை அழைத்து, “மகனே! நீ எனது பசுக்களை பார்த்துக்கொள்வாயாக” என்று கட்டளையிட்டார். அவனும் அவரது கட்டளையை ஏற்று தினமும் பசுக்களை மேய்ப்பது, பராமரிப்பது போன்ற பணிகளைச் செய்துவிட்டு மாலையில் குருவைச் சந்திந்து வந்தான். நாளுக்கு நாள் உபமன்யு குண்டாவதைக் கண்ட தௌம்யர், “மகனே நீ எதை உண்டு வாழ்கிறாய்? நீ மிகவும் பருத்துவிட்டாயே?” என்று கேட்டார். அதற்கு உபமன்யு, “குருவே நான் பிச்சை எடுத்து உண்டு வாழ்கிறேன்” என்றான். “இனிமேல் நீ பிச்சை எடுப்பதை எனக்குக் கொடுத்தபிறகுதான் உண்ணவேண்டும்” என்று தௌம்யர் உபமன்யுவிற்கு உத்ரவிட்டார். 

அதன்பிறகும் உபமன்யு முன்பு போலவே குண்டாக இருப்பதைக் கண்ட தௌம்யர், “மகனே! பிச்சை எடுப்பதை எனக்குக் கொடுத்தபிறகு, நீ உணவுக்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டார். “குருவே, நான் எடுத்த பிச்சையை தங்களுக்குக் கொடுத்த பிறகு மீண்டும் பிச்சை எடுத்து உண்டு வாழ்கிறேன்” என்றான் உபமன்யு. அதைக்கேட்ட தௌம்யர் கோபமடைந்து, “இதுதான் நீ குருவுக்குக் கொடுக்கும் மரியாதையா? இப்படிச் செய்வதால் பிச்சை எடுத்து உண்ணும் பலரது தேவைகளை உன்னுடைய ஆசையால் நீ ஒருவனே அபகரித்துக் கொள்கிறாய் என்பதை அறிவாயா?” என்று கேட்டார். அவரது வார்த்தைக்குக் கட்டுப்பட்ட உபமன்யு இனிமேல் தான் அப்படிச் செய்மாட்டேன் என்று உறுதியளித்துச் சென்றான். 

அதற்குப் பல நாட்களுக்குப் பிறகு உபமன்யு தௌம்யரை சந்தித்தபோது அவன் இன்னும் குண்டாகவே இருப்தை அறிந்து, “இப்போது உணவுக்கு என்ன செய்கிறாய்? என்று கேட்டார். “குருவே! நான் பசுக்களின் பாலை உண்டு வாழ்கிறேன்” என்று தௌம்யருக்கு பதிலளித்தான் உபமன்யு. ”என்னுடைய அனுமதியின்றி பசுக்களின் பாலை உண்டது தவறு. எனவே நீ அப்படிச் செய்யலாகாது” என்று குரு கட்டளையிட்டார். அவ்வாறே பணிவதாக உபமன்யு சொல்லிச் சென்றான். 

ஆனால் இதற்குப் பிறகும் அவன் குண்டாகவே இருப்பதை அறிந்த தௌம்யர் அதற்கான காரணத்தை வினவினார். “குருவே! பசுவின் கன்றுகள் தங்கள் தாயின் மடியில் பாலருந்தும்போது சிந்தும் பாலை உண்டு வாழ்கிறேன்” என்று உபமன்யு பதிலளித்தான். “கன்றுகள் உன்னிடம் உள்ள வாஞ்சையால் அளவுக்கு அதிகமான பாலை சிந்தச்செய்து உனக்கு அளிக்கிறது. எனவே நீ கன்றுகளின் உணவை அபகரித்து உண்கிறாய், இனிமேல் நீ கன்றுகள் சிந்தும் பாலை அருந்தக்கூடாது” என்று கட்டளையிட்டார். உபமன்யு உண்பதற்கான அனைத்து வழிகளையும் தௌம்யர் தடைசெய்துவிட்டதால் உண்பதற்கு ஏதுமின்றி அவன் பசுக்களைப் பராமரித்து வந்தான். பசியால் வாடிய அவன், பசி பொறுக்கமுடியாமல் காட்டில் விளைந்த கசப்பும் எரிச்சலும் மிக்க எருக்கச் செடியின் இலைகளை உண்டான். அதனால் அவனது கண்கள் குருடாகியது. பார்வையிழந்த அவன் வழிதெரியாமல் அங்குமிங்கும் அலைந்து திரிந்தான். 

உபமன்யு திரும்பாததைக் கண்ட தௌம்யர், “சீடர்களே! நான் உபமன்யுவின் உணவிற்கான அனைத்து வழிகளையும் தடைசெய்துவிட்டதால் அவன் என் மீது கோபம் கொண்டு இன்னும் வராமலிருக்கிறான். எனவே நாம் அவனைத் தேடிச் செல்வோம்” என்று சீடர்களோடு தௌம்யர் காட்டிற்குள் நுழைந்தார். “உபமன்யு! நீ எங்கேயிருக்கிறாய். எங்கேயிருந்தாலும் என் முன்னர் வா” என்று உரத்த குரலில் கூப்பிட்டார். தனது குருவின் குரல் கேட்ட உபமன்யு, “குருவே! நான் கிணற்றில் விழுந்து கிடக்கிறேன்” என்று பதிலளித்தான். 

குரல் வந்த திசையை நோக்கிச் சென்ற தௌம்யர் உபமன்யு விழுந்துகிடந்த கிணற்றை அடைந்து, “உபமன்யு! நீ எவ்வாறு இந்தக் கிணற்றில் விழுந்தாய்?” என்று கேட்டார். 

“குருவே! நான் எருக்கச்செடியின் இலைகளை உண்டதால் குருடாகிவிட்டேன். எனவே வழிதெரியாமல் அலைந்து இந்தக் கிணற்றில் விழுந்துவிட்டேன்.” 

“கவலைப்படாதே. சூரியனின் புத்திரர்களும் சிறந்த மருத்துவர்களுமான இரட்டை அஸ்வினிகளைப் போற்றிப்பாடு. அவர்கள் உன்னுடைய இழந்த பார்வையை மீட்டுத் தருவார்கள்” என்று தௌம்யர் உபமன்யுவிற்கு ஆறுதல் வார்த்தை சொன்னார்.

குருவின் வார்த்தைகள் கேட்ட உபமன்யு ரிக்வேதத்திலிருந்து பாடல்களைச் சொல்லி அஸ்வினிகளை பிரார்த்தனை செய்து, “அஸ்வினிகளே! எனது பார்வையை எனக்குத் திரும்ப அளித்து எனக்கு வாழ்வு கொடுங்கள்” என்று மனமுருக வேண்டினான்.

அவன் வேண்டுதலால் மனம்மகிழ்ந்த அஸ்வினிகள் அவன் முன்னே தோன்றி, “உனது பிரார்த்தனையால் நாங்கள் மகிழ்ந்தோம். இதோ இந்த ரொட்டியை வாங்கி உண்டு உன் பார்வையை திரும்பப் பெருவாயாக” என்று அஸ்வினிகள் உபமன்யுவிடம் ரொட்டித் துண்டு ஒன்றைக் கொடுத்தனர்.

“அஸ்வினிகளே உங்களது வார்த்தைகள் ஒருபோதும் பொய்யாக இருக்கமுடியாது. ஆனால் முதலில் எனது குருவிற்கு கொடுக்காமல் நான் எதையும் சாப்பிடமாட்டேன். எனவே நான் எப்படி இந்த ரொட்டியைச் சாப்பிட முடியும்?”

“பல வருடங்களுக்கு முன்னால் உனது குரு எங்களை வேண்டிய போது நாங்கள் மகிழ்ந்து அவருக்கு ரொட்டி ஒன்றைக் கொடுத்தோம். அதை அவர் தன் குருவுக்குக் கொடுக்காமல் தானே சாப்பிட்டார். அவர் அப்போது செய்ததையே நீ இப்போது செய். தயங்காமால் வாங்கிச் சாப்பிடு” என்று அஸ்வினிகள் உபமன்யுவை வற்புறுத்தின.

“அஸ்வினிகளே! ‘என்னை மன்னியுங்கள்’ என நான் உங்களிடம் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறேன். நான் எனது குருவுக்குக் கொடுக்காமல் ஒருபோதும் இந்த ரொட்டியை என்னால் சாப்பிட முடியாது” என்று பார்வையிழந்த உபமன்யு அஸ்வினிகளிடம் மன்றாடினான்.

“உபமன்யு! நீ உன் குருவின் மீது வைத்திருக்கும் பக்தியை மெச்சினோம். எனவே உனக்கு உன் பார்வையை திரும்ப அளிக்கிறோம். நீ எல்லா நற்பேறுகளையும் பெற்று வளமுடன் வாழ்வாயாக” என்று வாழ்த்தி அஸ்வினிகள் அங்கிருந்து மறைந்தன.

பார்வை திரும்பப்பெற்ற உபமன்யு கிண்ற்றிலிருந்து மேலேறி தன் குருவை வணங்கி நடந்தவற்றை உரைத்தான். அதைக்கேட்டு மனம் மகிழ்ந்த தௌம்யர் அஸ்வினிகள் கூறியது போலவே எல்லா நற்பேறுகளையும் பெற்று வாழ்வாய் என்று கூறி, “எல்லா வேதங்களும் உன்னில் ஒளிரும்” என வாழ்த்தினார்.

ஒரு நாள் தௌம்யர், வேதா என்ற தனது மற்றோர் சீடனை அழைத்து, “வேதா என் மகனே! என்னுடைய வீட்டில் தங்கியிருந்து எனக்குப் பணிவிடைகள் செய்” என்று பணித்தார். வேதாவும் மிக நீண்ட காலம் குருவின் வீட்டிலேயே தங்கியிருந்து, அவர் சொற்படி நடந்து, அவருக்கு வேண்டிய பணிவிடைகள் செய்துவந்தான். அதிகமான சுமை சுமக்கையில் நுகத்தடி கழுத்தில் அழுந்தி துன்பம் தந்தபோதும் மாடு எப்படி மௌனமாக இருக்குமோ அப்படி வெய்யில் குளிர் என்று பாராமலும் பசி தாகத்தை பொருட்படுத்தாமலும் தௌம்யருக்குப் பணிவிடைகள் செய்தான். இப்படியே நீண்ட காலம் சென்றபின்னர் வேதாவின் பணிவிடையில் தௌம்யர் திருப்தியடைந்தார். தன்னுடைய குருவை திருப்தியடையச் செய்ததன் வாயிலாக வேதா பரிபூரண உண்மையை அறிந்ததோடு நற்பேற்றையும் பெற்றான்.

குருவின் அனுமதி பெற்றபின்னர் தன்னுடை வீட்டிற்குத் திரும்பிய வேதா, வாழ்க்கையில் கிரகஸ்தன் என்ற நிலையை அடையத் தலைப்பட்டான். அவனுடன் சேர்ந்து வாழ மூன்று சீடர்கள் இணைந்தனர். ஆனால் வேதா ஒருபோதும் அவர்களுக்கு எந்த வேலையும் தரவில்லை என்பதோடு அவர்களைத் தனக்கு பணிவிடை செய்யுமாறும் கட்டளையிடவில்லை. தான் தன்னுடைய குருவினால் பட்ட கஷ்டங்களை அவன் தன்னுடைய சீடர்களுக்குத் தர விரும்பவில்லை.

Related Posts Plugin for WordPress, Blogger...