May 27, 2017

9. கருடன்

தக்க சமயம் வந்ததும் வினதையின் இன்னொரு முட்டையை உடைத்துக்கொண்டு, தன் தாயின் உதவியில்லாமலே, மிகுந்த ஆற்றலுடன் வெளிவந்தான் கருடன். எரியும் தீ ஜூவாலையை ஒத்தவனாக, பார்ப்பவர் அஞ்சும் தோற்றத்துடன் அவன் இருந்தான். பிறந்தவுடனே அதிவேகமாக வளர்ந்து மிகப் பெரிய உருவை அடைந்து வானத்தில் பறந்தான்.

அவனைக் கண்ட அனைத்து உயிர்களும் தங்களைக் காக்க வேண்டி அக்னியிடம் தஞ்சமடைந்தனர். தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்திருந்து முழுதளாவிய உருவம் கொண்ட அக்னியை வணங்கிய அவர்கள். “ஹே அக்னி! உனது உருவத்தை பெருக்காதீர். நீர் எங்களை எரிப்பதென்று முடிவுசெய்து விட்டீரா? பெரிய, பரந்த ஜூவாலை எங்கும் வியாபிப்பதைப் பாருங்கள்” என்றனர்.

“அசுரர்களைத் துன்பப்படுத்துகிறவர்களே! அது நீங்கள் நினைப்பது போலல்ல. அது என்னுடைய ஆற்றலுக்கு நிகரான வல்லமைமிக்க கருடனாவான்” என்றார் அக்னி. அதைக்கேட்டவர்கள் நேராக கருடனை சந்தித்தனர்.

கருடனுக்கு அருகே நெருங்காது தூரத்திலேயே நின்ற அவர்கள், “பறவைகளின் அரசனே! நீயே ரிஷி. நீயே யாகங்களின் அவிர்பாகத்தைப் பெருமளவில் பெருபவன். நீயே கடவுள். நீயே எங்களின் ஒப்பற்ற காவலன். நீயே வலிமையின் ஆழம். நீயே தூய்மையின் சிகரம். நீயே குணங் குற்றங்களுக்கு அப்பாற்பட்டவன். நீயே அனைத்து சினத்தின் இருப்பிடம். நீயே வெல்வதற்கரியவன். நீயே அனைத்து நிகரற்ற செயல்களிலும் செய்பவன். நீயே இருந்தது இல்லாதது அனைத்தும். நீயே ஞானம். சூரியக் கதிர்களைக் கடந்துசெல்லும் ஆற்றல் மிக்க நீயே நிலையானது நிலையற்றது அனைத்திற்கும் ஆதாரம். சூரிய ஒளியை இருளாக்கும் சக்தி கொண்ட நீயே அனைத்தையும் அழிப்பவன்.

அழிவது அழிவற்றது அனைத்தும் நீயே. சினத்தால் உயிர்களை எரிக்கும் கதிவரன் போல உன்னுடைய ஒளியின் ஜூவாலையால் அனைத்தையும் விழுங்குபவன் நீயே. அழிவின் சுழற்சியாக யுகத்தின் முடிவில் அனைத்தையும் அழிக்கும் அச்சம் தரும் அக்னி நீயே. பறவைகளின் அதிபதியே! நாங்கள் உன்னிடம் வந்து, உன்னையே தஞ்சம் அடைகிறோம். மேகங்களை எட்டும் ஆற்றல் மிக்க கருடப் பறவை நீயே. வரம் கொடுக்கும் கொடையாளி நீயே. இணையற்ற ஆற்றல் மிக்கவன் நீயே” என்று கருடனைப் புகழ்ந்து துதித்தார்கள். அதனால் மகிழ்வுற்ற அவன் தன் ஆற்றலையும் ஒளியையும் குறைத்துக்கொண்டு சாதாரண வடிவம் கொண்டான்.

அதன் பிறகு, தன் விருப்பம்போல் எங்கும் பயணிக்கும் அவன், கடலுக்கு அப்பால் இருந்த தன்னுடைய தாயின் வீட்டிற்குச் சென்றான். பந்தயத்தில் தோற்றதால் அடிமையான வினதை, வேதனையில் துன்புற்று அங்கே வசித்து வருவதைக் கண்டான். ஒரு நாள், கத்ருவை தன் முன் வருமாரு வினதை கட்டளையிட, வினதை அவள் முன் வணங்கி நின்றாள். “அன்பே வினதை! என்னை நாகங்களின் அழிகிய இருப்பிடமான கடலுக்கு அழைத்துச் செல்” என்றாள் கத்ரு. வினதை கத்ருவை தூக்கிக்கொள்ள, தன் தாயின் வேண்டுகோளுக்கிணங்க கருடன் கத்ருவின் மகன்களை தன் முதுகில் ஏற்றிக்கொண்டான். அவ்வாறு ஏற்றிக்கொண்டு பறந்தவன் மிக உயரே சூரியனுக்கு அருகில் பறந்தான். இதனால் சூரியனின் வெப்பம் தாங்காத நாகங்கள் மயக்கமுற்றன.

தன் குழந்தைகளின் நிலைகண்ட கத்ரு இந்திரனை வேண்டினாள். “கடவுளின் அதிபதியே! உன்னை வணங்குகிறேன். பாலா, நமுசி ஆகியோரைக் கொன்றவனே உன்னை வணங்குகிறேன். ஆயிரங் கண் கொண்ட சச்சியின் மணாளனே! என்னுடைய குழந்தைகள் சூரியனின் வெப்பம் தாங்காது தவிக்கிறார்கள். உன்னுடைய கருணை மழையால் அவர்களைக் காப்பாயாக. எங்களின் சிறந்த பாதுகாவலனே. கடவுளர்களில் மேலானவனே! ஓ புரந்தரா! நீயே வாயு; நீயே மேகம்; நீயே அக்னி. வானத்தின் ஒளி நீயே. பெருந்திரளான மேகங்களை திரளச்செய்து அடர்த்தியான மேகமானவனே. இணையற்ற இடியும், கர்ஜிக்கும் மேகமும் நீயே. அனைத்து உலகங்களையும் காப்பவனும் அழிப்பவனும் நீயே. வெல்ல முடியாதவன் நீயே. அனைத்து உயிர்களின் உள்ளுறையும் ஜோதியாகத் திகழ்பவன் நீயே. நீயே நீரும் நெருப்புமாவாய். ஞானத்தின் பிறப்பிடம் நீயே. ஆயிரம் கண்கொண்ட விஷ்ணு நீயே. தேவர்கள் அனைவருக்கும் கடவுள் நீயே.

வருடமும், பருவ காலங்களும், மாதங்களும், இரவு பகலும் நீயே. மலைகளும், காடுகளும் கொண்ட அழகான பூமி நீயே. சூரியனோடு பிரகாசமான வானமும் நீயே. சுறாக்களும், சுறாக்களை விழுங்கும் உயிரினங்களையும், முதலைகளையும், மீன்களையும் கொண்ட அலைகள் நிறைந்த கடலும் நீயே. ஞானமடைந்தவர்களும், விழிப்படைந்தவர்களும், ரிஷிகளும் எப்போதும் துதிப்பது உனையே. யாக வேள்வியில் சொரியும் சோமபானத்தையும் பிற ஆகுதிப் பொருட்களையும் ஏற்பவன் நீயே. பலன் கருதி அந்தணர்கள் செய்யும் யாகத்தில் எப்போதும் வணங்கப்படுபவன் நீயே. ஆகவேதான் உன்னுடைய ஒப்புவமையற்ற ஆற்றலை வேதங்கள் புகழ்ந்து சொல்கின்றன. எனவேதான் வேள்வியில் ஈடுபடும் சிறந்த அந்தணர்கள் வேதாந்தங்களை சிரத்தையுடன் பயில்கிறார்கள்”

இவ்வாறு கத்ரு இந்திரனை துதித்ததும், பழுப்பு நிறக் குதிரையில் பயணிக்கும் ஒப்பற்ற கடவுளான இந்திரன் முழு வானத்தையும் நீல மேகத்தால் மறைத்தான். மின்னுலுடன் கூடிய அந்த மேகங்கள் ஏராளமான மழையைப் பொழியச்செய்தன. வானத்தில் தொடர்ந்து இடியோசை எழுப்பிய அந்த மேகங்கள் இடைவெளியின்றி அபரிமிதமான மழையைச் சொரியச்செய்தன. காற்றின் பேரொலியும், இடியின் கைதட்டலும், மழைப் பொழிவும் வானத்தைப் பித்துப்பிடித்து நடனமிடச் செய்தன. இந்திரன் பொழிந்த மழையால் நாகங்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தன. அனைத்துலகும் எங்கும் நீரால் நிரம்பிற்று.

கருடனால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து நாகங்களும் விரையில் ஒரு தீவை அடைந்தன. அத்தீவு கடலால் சூழப்பெற்று, பறவைகளின் இன்னிசை எதிரொலிக்க அமைந்திருந்தது. அங்கிருந்த காடுகளில் எண்ணற்ற கனிகள் கொண்ட மரங்களும், பலவகையான வண்ண மலர்கள் பூத்துக்குலுங்கும் செடிகளும், நீர்நிலைகளில் அழகிய தாமரைகளும் நிறைந்திருந்தன. தெள்ளிய நீர் நிரம்பிய அழகிய குளங்கள் பலவற்றைக் கொண்டு அந்தத் தீவு அணிசெய்யப்பட்டிருந்தது. தெய்வீக மணத்தைச் சுமந்த சுத்தமான காற்று அங்கே வீசியது. மலய மலையில் மட்டும் வளர்கின்ற மரங்கள் அங்கே நிறைந்து அத்தீவை ஒளிபொருந்தியதாக பிரகாசிக்கச் செய்தன. விண்ணை முட்டும் உயரத்திற்கு வளர்ந்திருந்த அந்த மரங்கள் காற்றால் உலுக்கப்பட்டு அழகிய மலர்களை நிலத்தில் சொரியச்செய்தன. அப்படிச் சொரிந்த மலர்கள் நாகங்களின் மீது விழுந்து அவற்றைக் குளிப்பாட்டின. அழகானதும் ஆனந்தம் தருகின்றதுமான அந்த தெய்வீக இடம் கந்தர்வர்களுக்கும் தேவகன்னிகைகளுக்கும் மிகுந்த உவப்பானதாக இருந்தது. எங்கும் ஒலிக்கின்ற பறவைகளின் மெல்லிசை கத்ருவின் குழந்தைகளை மகிழ்ச்சியில் திளைக்கச் செய்தது.

தீவின் கானகத்தில் சுற்றித்திரிந்த நாகங்கள் அளவற்ற மகிழ்ச்சியடைந்தன. எனவே அவைகள் கருடனிடம், “எங்களை தண்ணீரால் நிரம்பிய மற்றொரு அழகான தீவிற்கு அழைத்துச் செல். பறவையே! நீ வானத்தில் பறக்கையில் பல அழகான நாடுகளைக் கண்டு களித்திருப்பாயே?” என்றன. அதைக்கேட்ட கருடன் தனது தாய் வினதையிடம், “தாயே! இந்தப் பாம்புகள் சொல்வதை நான் ஏன் கேட்கவேண்டும்?“ என்று கேட்டது. “மகனே! இந்த நாகங்கள் ஏமாற்றியதால் நான் பந்தயத்தில் என் தங்கையிடம் தோற்றுவிட்டேன்” என்றாள் வினதை.

அதைக்கேட்டு வேதனையடைந்த கருடன் நாகங்களிடம், “நாகங்களே! உங்களுக்கு என்ன வேண்டும்? உங்களுக்காக நான் எதைக் கொண்டு வரட்டும்? உங்களுக்காக எத்தகைய அருஞ்செயலை நான் செய்யட்டும்? உண்மையாகச் சொல்லுங்கள், இந்த அடிமைத் தனத்திலிருந்து மீள்வதற்கு வழி என்ன?” என்று கேட்டது. அதற்கு நாகங்கள், “நீ உன்னுடைய ஆற்றலால் அமிர்தத்தைக் கொண்டு வா. அப்போது உன்னுடைய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை கிடைக்கும்” என்றன.

தன்னிடம் நாகங்கள் கூறியதை வினதையிடம் சொன்ன கருடன், “நான் அமிர்தத்திற்காகச் செல்கிறேன். வழியில் நான் ஏதாவது சாப்பிட விரும்பினால் நான் என்ன சாப்பிடுவது?” என்று கேட்டது. “கடலின் ஒதுக்குப்புறமான இடத்தில் நிஷாதர்களின் அருமையான வசிப்பிடம் உள்ளது. ஆயிரம் நிஷாதர்களை உண்டு, அமிர்தத்துடன் திரும்பி வா. ஆனால் ஒருபோதும் அந்தணனைக் கொள்ள நினைக்காதே. அனைத்து உயிர்களிலும் அந்தணன் நெருப்பைப் போன்றவன் என்பதால் அவனைக் கொல்லக்கூடாது. கோபம் கொள்கையில் அந்தணன் நெருப்பாக, சூரியனாக, விஷமாக அல்லது கூரிய ஆயுதமாக இருப்பான். அனைத்து உயிர்களிலும் யாகவேள்வியின் முதல் பாகத்தைப் பெறுபவன் அவனே. அனைத்து வர்ணங்களிலும் முதன்மையானவன், தந்தையைப் போன்றவன், மற்றும் தலைவனும் அவனே” என்றாள் வினதை.

“தாயே! நான் கேட்கிறேன். எத்தகைய சூசகமான அடையாளம் மூலம் நான் ஒரு அந்தணனைக் கண்டுபிடிக்க முடியும்? அதைச் சொல்” என்று கேட்டான் கருடன்.

“மகனே! ஒரு மனிதன் உன்னுடைய தொண்டைக்குள் இறங்கும்போது, மீனின் முள்ளைச் சாப்பிட்டது போல வேதனை கொடுப்பவன் எவனோ அல்லது சூடான தணலைப்போல எரிபவன் எவனோ, அவன் அந்தணர்களில் ஒருவன் என்பதை அறிவாயாக” என்ற வினதை தனது மகன் மீதுள்ள பாசத்தால் மேலும் சொன்னவற்றேயே திரும்பக் கூறினாள். அவள் தனது மகனின் அளவற்ற ஆற்றலை அறிந்திருந்த போதும் அவனை வாழ்த்தினாள், “மருதன் உனது சிறகுகளையும், நிலவு உனது பின்புறத்தையும், அக்னி உனது தலையையும், சூரியன் உனது அனைத்து அங்கங்களையும் பாதுகாக்கட்டும். மகனே! எப்போதும் நான் உனது நலன் கருதி பிரார்த்தித்துக் கொண்டிருப்பேன். பத்திரமாகச் சென்று உனது காரியத்தை முடிப்பாயாக” என்றாள். தனது தாயின் சொற்களைக் கேட்ட கருடன், பிறகு தன் சிறகுகளை விரித்து வானத்தில் பறந்தான்.

Related Posts Plugin for WordPress, Blogger...