May 25, 2017

8. கத்ரு வினதை சகோதரிகள்

பல வருடங்களுக்கு முன்னால் நாகங்களின் அரசனான தட்சகனுக்கு, கத்ரு, வினதை என்ற இரு அழகான பெண்கள் இருந்தனர். அவர்கள் இருவரும் கசியபருக்கு மனைவிகளாயினர். அவர்கள் இருவராலும் வாழ்க்கையில் மிக்க மகிழ்ச்சியுற்ற கசியபர் இருவருக்கும் ஆளுக்கொரு வரம் கொடுக்க விரும்பினார். அதைக்கேட்டு மனைவியர் இருவரும் அளவற்ற ஆனந்தம் அடைந்தனர்.

கத்ரு, ஆயிரம் நாகங்கள் தனக்குப் பிள்ளைகளாக வேண்டுமென்றும் அவர்கள் அனைவரும் நிகரான வல்லமை உடையவர்களாக இருக்கவேண்டும் என்றும் கேட்டாள். வினதை, தனக்கு இரண்டு மகன்கள் வேண்டுமென்றும், அவர்கள் கத்ருவின் குழந்தைகளை விட அதிக பலமும் ஆற்றலும் கொண்டவர்களாக இருக்க வேண்டுமென்று கேட்டாள். அவ்வாறே அவர்கள் விரும்பிய வண்ணம் வரத்தை வழங்கிய கசியபர், “உங்கள் கருக்களை கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு கானகம் ஏகினார்.

அதற்குச் சில நாட்களுக்குப் பிறகு கத்ரு ஆயிரம் முட்டைகளை ஈன்றாள். வினதை இரு முட்டைகளை ஈன்றாள். அவர்களின் பணியாள் அவற்றைத தனித்தனியே பாதுகாத்து வைத்தான். ஐநூறு வருடங்கள் சென்றன. 500 வருடங்களுக்குப் பிறகு கத்ருவின் குழந்தைகள் முட்டைகளிலிருந்து வெளிவந்தனர். ஆனால் வினதையின் முட்டையிலிருந்து ஒன்றும் வெளிவரவில்லை. இதனால் பொறாமையும் கோபமும் கொண்ட வினதை தனது முட்டைகளில் ஒன்றை உடைத்துப் பார்த்தாள். உடலின் மேற்பகுதி வளர்ச்சியடைந்தும், கீழ்பகுதி வளராமலும் உள்ள மகனைப் பார்த்தாள். இதனால் கோபமடைந்த மகன், “தாயே! உன்னுடைய பேராசையால் அவரசப்பட்டு முட்டையை உடைத்ததால் என்னை வளரவிடாமல் தடுத்துவிட்டாய். நீ உனக்குச் சரிநிகர் தகுதியுடைய பெண்ணாக யாரைக் கருதுகிறாயோ அவளிடம் ஐநூறு வருடங்கள் அடிமையாகச் சேவகம் செய்யக்கடவாய். உன்னுடைய மற்றொரு மகன் உன்னை அந்த அடிமைத் தளையிலிருந்து விடுவிப்பான். எனவே மீண்டும் அவசரப்பட்டு இன்னொரு முட்டையை உடைக்காமல் பொருமையாக காத்திரு. அப்போதே நீ விரும்பும் ஆற்றல் கொண்ட மகன் கிடைப்பான்” என்ற மகன் விண்ணுலகம் நோக்கிக் கிளம்பினான்.

ஒரு நாள் இரு சகோதரிகளும் வெளியே உலவிக்கொண்டிருந்த போது குதிரைகளின் அரசனான உச்சிரவஸ் அந்த இரு சகோதரிகளின் கண்ணில் பட்டான். பெருமதிப்புடைய, குதிரைகளில் சிறந்த அவன், பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்படுகையில் அனைத்துக் கடவுளர்களாலும் வணங்கப்பட்ட சிறப்புடையவன். அழிவற்ற இளமையும், கட்டுப்படுத்த முடியாத ஆற்றலும் மிக்க அவன் குதிரைகளுக்குரிய அனைத்து லட்சணங்களும் பொருந்தியவனாக, அதிசயத்தக்க வகையில் இருந்தான்.

ஈடு இணையில்லாத ஆற்றல் மிக்க அந்தக் குதிரையைக் கண்ட கத்ரு வினதையிடம், “அன்புடையவளே! உச்சிரவஸின் நிறம் என்ன? உடனடியாக இப்போதே கூறு” என்று கேட்டாள். அதற்கு வினதை, “வாழ்த்தப்பட்டவளே! குதிரைகளின் அரசனான இவனுடைய நிறம் வெண்மையானது. நீ அதை என்ன நிறமென்று நினைத்தாய்? நமக்குள் ஒரு பந்தயம் வைத்துக்கொள்வோம். நீ என்ன நினைக்கிறாய் என்பதைச் சொல்” என்றாள்.

“இனிய சிரிப்பை உடையவளே! இந்தக் குதிரையின் வால் கருப்பு நிறமானது என நினைக்கிறேன். யாருடைய வார்த்தை தவறாகிறதோ அவர்கள் பிறருக்கு அடிமையாக வேண்டும் என்று பந்தயம் வைத்துக்கொள்ளலாம்” என்றாள் கத்ரு.

இவ்வாறு தங்களுக்கு பந்தயம் வைத்துக்கொண்டு வீட்டிற்குத் திரும்பிய அவர்கள் மறுநாள் குதிரையை பரிசோதிக்க முடிவுசெய்தனர்.

வினதையை ஏமாற்ற எண்ணங்கொண்ட கத்ரு, தனது ஆயிரம் மகன்களிடம், அனைவரையும் கருமை நிறம்கொண்ட முடியாக மாறி குதிரையின் வால்பகுதியில் இருக்கும்படி பணித்தாள். தான் ஒரு அடிமையாக மாறிவிடக்கூடாது என்றே அவள் இதைச் செய்தாள். தன்னுடைய கட்டளையை ஏற்க மறுத்த மகன்களிடம் கோபம் கொண்ட கத்ரு, “பாண்டவ வம்சத்தில் தோன்றிய ஜனமேஜயன் நடத்தும் நாக வேள்வியில் விழுந்து நீங்கள் அனைவரும் மடியவேண்டும்” என்று சாபமிட்டாள்.

கத்ரு இத்தகைய கொடூரமான சாபத்தை வழங்கியதைக் கேட்ட பிரம்மனும், விதியால் உந்தப்பட்டவனாக, அனைத்து உயிர்களின் நலன்களை மனதில் கொண்டு, நாகங்கள் எண்ணிக்கையில் பன்மடங்காக பெருகக் கூடியவை என்பதால், கடவுளர்களோடு சேர்ந்துகொண்டு, சாபம் நிறைவேற சம்மதித்தான். நாகங்கள் கொடிய விஷத்துடன், அதிக ஆற்றலும், பலமும் பொருந்தியவை. யாரையும் எவரையும் கடிப்பது அவற்றின் குணம். எனவே உலக உயிர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அவற்றின் கொடிய விஷத்தை முறியடிக்கும் வண்ணம் கத்ரு கொடுத்த சாபம் சரியானதே என்று அனைவரும் கருதினர்.

இரவு சென்று காலையும் வந்தது. அடிமையாவதாகப் பந்தயமிட்ட சகோதரிகள் இருவரும் பொறாமையால் உந்தப்பட்டு உச்சிரவஸை காண அவசரமாகச் சென்றனர்.

அவர்கள் சென்ற வழியில் ஆழமான பெரிய கடலைக் கண்டனர். திமிங்கிலங்களை விழுங்கும் எண்ணற்ற பெரிய மீன்களும், எண்ணிடலங்கா சுறாக்களும், பல்வேறு உருவங்களில் ஆயிரக்கணக்கான உயிரினங்களும் அந்தக் கடலில் இருந்தன. ஒருபோதும் குறையாத பயங்கரமான முதலைகளும், ஆமைகளும் இருந்தமையால் ஏனைய உயிரினங்கள் அணுக முடியாததாக இருந்தது. ரத்தினங்களுக்கு ஆதாரமாக, வருணனின் வசிப்பிடமாக, நாகங்களுக்கு மேன்மையான வீடாக, கடல்களின் அரசனாக, பூமிக்கடியில் உள்ள நெருப்புக்கு இருப்பிடமாக, அசுரர்களின் புகலிடமாக, அனைத்துயிர்களுக்கும் அச்சம் தருவதாக இருந்தது அந்தக் கடல். தண்ணீரின் வற்றாக ஊற்றாக, அமிர்தத்திற்கு ஆதாரமாக, விளங்கிய அந்தக் கடல் அளவிடமுடியாததாக, கற்பனைக்கெட்டாததாக, புனிதமானதாக விளங்கிற்று.

கடலில் வாழும் நீர்வாழ் உயிரினங்களின் பயங்கரமான உறுமலும், ஆழ்கடல் அலைகளின் பெருத்த ஓசையும் அச்சமூட்டுவதாக இருந்தது. படபடக்கும் காற்றின் வேகத்தால் கொந்தளித்து கிளர்ந்தெழும் அலைகள் தங்கள் கைகளை ஆட்டி எங்கும் நடனமிடுவது போலத் தோன்றியது. நிலவின் மாற்றங்களுக்கேற்ப கடலின் அலைகள் எழும்பித் துடிக்கும் இந்தக் கடலே, சிறந்த ரத்தினங்களுக்கும், வாசுதேவனின் பாஞ்சஜன்யத்திற்கும் மூலம்.

முன்பொரு முறை விஷ்ணு பன்றி வடிவமெடுத்து பூமியைக் குடைந்து நிலத்தின் அடியைக் கண்டடைந்தது இந்தக் கடலில்தான். பிரம்ம ரிஷி அத்ரி நூறு வருடங்கள் முயன்றும் ஆழங்காண முடியாதது இந்தக் கடலே. ஒவ்வொரு யுகத்தின் தொடக்கத்திலும் விஷ்ணு உறக்கத்தில் ஆழ்ந்து யோகத் துயில் கொள்கையில் படுக்கையாக அமைவது இந்தக் கடல்தான். இது புனிதமனாது; அநாதியானது; பரந்தது; எல்லையற்றது; ஆறுகளுக்கெல்லாம் அரசனானது.

இதற்கிடையே, தாயின் விருப்பம் நிறைவேறாது போனால் அவள் தங்களை எரித்துவிடுவாள் என்ற பயத்திலும், அவள் விருப்பத்தை நிறைவு செய்தால் ஒருவேளை அவள் தங்களுக்கிட்ட சாபத்திலிருந்து விடுவிப்பாள் என்றும் கருதி ஆயிரம் நாகங்களும் குதிரையின் வாலில் முடிகளாக அமைந்து வாலைக் கருப்பு நிறமாக்கினர்.

இத்தகைய கடலையே கத்ருவும் வினதையும் கண்டனர். ஆயிரக்கணக்கான ஆறுகள் வேகத்துடனும் பெருமையுடனும் ஒடிவந்து காதலர்கள் போலக் கடலில் கலந்ததைக் கண்டனர். கடலைக் கடக்கையில் கத்ரு வேகமாகச் செல்ல அவளைப் பின்தொடர்ந்து சென்றாள் வினதை. இருவரும் குதிரை இருக்குமிடம் வந்து, குதிரையின் வாலை பரிசோதிக்கையில் அது கருப்பு நிறமாக இருப்பதைக் கண்டனர். எனவே பந்தயத்தில் தோற்ற வினதை கத்ருவுக்கு அடிமையானாள்.

Related Posts Plugin for WordPress, Blogger...