May 24, 2017

7. தேவாசுர யுத்தம்

வெகு காலத்திற்கு முன்னர், தன்னுடைய ஆற்றலால் பிரகாசிக்கும் மேரு எனும் பெயரை உடைய மலை ஒன்றிருந்தது. பொன்னிறமான அதன் சிகரங்களில் சூரியனின் கதிர்கள் விழுகையில் அவை எத்திசையும் பிரகாசித்தன. தங்கத்தால் அணிசெய்யப்பட்டது போல ஜொலிக்கும் அந்த மலைக்குக் கடவுளர்களும் காந்தர்வர்களும் அடிக்கடி வந்துபோவார்கள். ஆனால் பாவமிழைத்தவர்கள் அந்த மலையை அணுக முடியாமலிருந்தது புரிந்துகொள்ள முடியாததாக இருந்தது. பல்வேறு மூலிகைகளால் பிரகாசிக்கும் அந்த மலைச் சிகரங்களில் இரையைத் தேடி காட்டு விலங்குகள் பல பயத்துடன் உலவி வந்தன. கற்பனையிலும் நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் சொர்க்கத்தின் கதவுகளைத் தொட்டுவிடுவது போல அந்த மலை உயர்ந்து நின்றது. பல மரங்களாலும், ஆறுகளாலும், பாடும் பறவைகளின் இன்னிசையாலும் அந்த மலை சூழப்பட்டிருந்தது. பல யுகங்களாக அந்த மலை அப்படியே நின்றிருந்தது.

ஒரு முறை, மதிப்பு மிக்க கடவுளர்களால் கூடிய சபை ஒன்று, ரத்தினங்களால் ஆன ஆபரணம் பூண்டது போல அந்த மலையை  அலங்கரித்தது. அவர்களில் தவத்தில் சிறந்தவர்களும், விரதங்களைக் கடைபிடிப்பவர்களும் என பலரும் அமிழ்தத்தை பெறுவது எப்படி என்று ஆலோசனை செய்தனர். அனைவரும் தங்கள் கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்து விவாதம் செய்தபோது, நாராயணன் பிரம்மனிடம், “தேவர்களையும் அசுரர்களையும் கொண்டு பாற்கடலை கடையச்செய்வோம். அப்படிச் செய்தால் அமிர்தமும், மூலிகை மருத்துகளும், ரத்தினங்களும் கிடைக்கும்” என்றார்.

மேகங்களால் சூழப்பெற்ற மந்தரா என்ற பெயரை உடைய மலை ஒன்றிருந்தது. எண்ணற்ற செடிகொடிகளாலும், பறவைகளின் மெல்லிசையாலும், உணவிற்காக வேட்டையாடித் திரியும் கொடிய விலங்குகளாலும் சூழப்பட்ட அந்த மலைக்கு அடிக்கடி கின்னரர்களும், தேவர்களும், தேவகன்னிகைகளும் வந்து செல்வார்கள். பூமிக்கு மேலாகப் பதினோராயிரம் யோஜனை உயரமும், பூமிக்குக் கீழாக பதினோராயிரம் யோஜனை அடியிலுமாக விஸ்தாரம் கொண்டிருந்தது அந்த மலை. பாற்கடலைக் கடைவதற்காக அந்த மலையைப் பெயர்த்தெடுக்க முயன்று தோற்ற தேவர்கள் விஷ்ணு மற்றும் பிரம்மனிடம், “எங்களது நன்மைக்காக இந்த மந்தரா மலையைப் பெயர்த்தெடுக்கும் வழியைக் கூறுங்கள்” என்று முறையிட்டனர்.

“அதற்கு உரிய வழி ஒன்றுதான்” என்ற நாராயணனும் பிரம்மனும் அதைச் செய்வதற்காக ஆற்றல் மிக்க அனந்தா என்ற நாகத்தை வரவழைத்தனர். விஷ்ணுவின் படுக்கையாகத் திகழும் அந்த ஆதிசேஷன் தன்னுடைய ஆற்றலால் அந்த மலையை, அதில் உள்ள காடுகளோடும், அந்தக் காடுகளில் வாழும் உயிரினங்களோடும் பெயர்த்தெடுத்தான். அந்த மலையுடன் கடற்கரைக்குச் சென்ற தேவர்கள், “ஓ கடலே! அமிர்தத்தைப் பெறும் பொருட்டு நாங்கள் உன்னைக் கடையப்போகிறோம்” என்றனர். அதற்கு கடல்தேவன், “அப்படியே செய்யுங்கள். ஆனால் எனக்குரிய பங்கைக் கொடுத்துவிட வேண்டும். அப்போதுதான் என்னைக் கடைவதால் ஏற்படும் அளவற்ற அழுத்தத்தை என்னால் பொருத்துக்கொள்ள முடியும்” என்றான். அதன் பிறகு தேவர்களும் அசுரர்களும் அக்குபரா என்ற ஆமைகளின் அரசனிடம் சென்று, “மந்தரா மலையை உன்னுடைய முதுகில் சுமக்கவேண்டும்” என்றனர். ஆமையும் அவ்வாறே ஒப்புக்கொள்ள, இந்திரன் மலையை ஆமையின் முதுகில் பொருத்தினான்.

இவ்வாறாக, மந்தரா மலையை மத்தாகவும், வாசுகி நாகத்தைக் கயிறாகவும் கொண்டு தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்தனர். அசுரர்கள் வாசுகியின் தலைப்பகுதியையும், தேவர்கள் வால் பகுதியையும் பிடித்துக்கொண்டு கடலைக் கடைந்தனர். அருகிலிருந்த நாராயணர் நாகத்தின் தலையை உயர்த்துவதும் தாழ்த்துவதுமாக இருந்தார். அப்படிக் கடைந்தபோது வாசுகியின் வாயிலிருந்து கரும்புகையும் நெருப்பும் வெளிப்பட்டது. அவ்வாறு வெளிப்பட்ட புகை மேகமாக உருக்கொண்டு மின்னலுடன் மழையாகப் பொழிந்தது. அவ்வாறு பெய்த மழை சோர்வுற்றுக் களைத்திருந்த அவர்களைக் குளிர்வித்தது. மந்தரா மலையிலிருந்து கொட்டிய நானாவித வண்ண மலர்கள் அசுரர்களையும் தேவர்களையும் புத்துணர்வு கொள்ளச் செய்தது. அவர்கள் அவ்வாறு மலையைக் கடைந்தபோது, மேகங்களிலிருந்து வெளிப்படும் பெருத்த இடியோசையை ஒத்த அதிபயங்கரமான கர்ஜனை ஒலித்தது. அனைத்து வகையான கடல் வாழ் உயிரினங்களும் மலையின் அழுத்தம் தாங்காமல், அந்த உப்புக் கடலில் தங்களது உயிரை விட்டன. கடலின் ஆழத்தில் வசித்த பலவகை உயிரினங்களும் தங்கள் அழிவைச் சந்தித்தன.

சுழலும் மந்தரா மலையால் மரங்கள் ஒன்றோடு ஒன்று மோதி, பூமியில் பதிந்திருந்த வேர்களோடு பெயர்ந்து, அதில் வசிக்கும் பல்வேறு பறவைகளோடு கீழே விழுந்தன. மரங்கள் ஒன்றுடன் ஒன்று உராய்ந்து, அதிலிருந்து அவ்வப்போது தீ ஜூவாலைகள் எழுந்தன. கரும் மேகங்களை ஒளியால் கோடிட்டது போல மந்தரா மலை காட்சியளித்தது. சிங்கங்கள், யானைகள் மற்றும் பிற உயிரினங்கள் அனைத்தும் எரிந்தழிந்தன. அதைக்கண்ட இந்திரன் எரியும் ஜூவாலைகளை அமைதிப்படுத்தும் விதமாக மேகங்களிலிருந்து மழையைப் பொழியச் செய்தான். பலவகையான மூலிகைச் செடிகளின் சாறுகளும், பல்வேறு பெரிய மரங்களின் மரப்பிசின்களும் கடல் நீரில் கலந்தன. அவ்வாறு வெளிப்பட்ட சாறானது, உருகிய தங்கத்தோடு கலந்து, அமிர்தத்திற்கு நிகராக, தேவர்களை அழிவற்றவர்களாக்கியது. மூலிகைச் செடிகளின் சாறும் மரப்பிசினும் கலந்தமையால் கடல் பாற்கடலாகி, பிறகு சுத்தமான வெண்ணையாகத் திரண்டது.

அப்படியும் அமிர்தம் வெளிப்படாதது கண்ட தேவர்கள் பிரம்மனிடம் சென்று, “பகவானே! நாங்கள் எவ்வளவு முயன்றும் அமிர்தம் வெளிப்படவில்லை. நாரயணர் உதவவில்லையெனில் இனி மேற்கொண்டு எங்களால் கடலைக் கடைய முடியாது” என்று முறையிட்டனர்.

உடனடியாக பிரம்தேவன் நாரயணனிடம், “விஷ்ணுவே! நீங்கள்தான் எங்களின் இறுதிப் புகலிடம். இவர்களுக்கு தெய்வத்தின் ஆற்றலைக் கொடுங்கள்” என்று வேண்டினார். “எவரெல்லாம் இந்த நற்செயலில் ஈடுபடுகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் நான் ஆற்றலைக் கொடுக்கிறேன். எனவே மீண்டும் கடலைக் கடையுங்கள்” என்று உத்ரவிட்டார் நாராயணர். அனைவரும் தங்கள் ஆற்றல் பெருகியதைக் கண்டு, மீண்டும் மந்தரா மலையைக் கடைந்தனர்.

அவ்வாறு கடையத் தொடங்கியதும், கடலிலிருந்து சப்தமில்லாத, குளிர்ந்த, பிரகாசமான நிலவு வெளிப்பட்டது. பிறகு வெள்ளை உடையணிந்த இலக்குமி வெளிப்பட்டாள். அதன் பிறகு தேவர்களின் சோமபானமும், வெள்ளைக் குதிரையும் வெளியேறியது. அதன் பின்னர் நாராயணரின் மார்பை அலங்கரிக்கப் போகும் கௌஸ்துபா என்ற ரத்தின ஆரம் வெளிப்பட்டது. இறுதியாக அழகே வடிவான தன்வந்தரி தன்னுடைய கையில் வெள்ளை நிறப் பாத்திரத்துடன் அமிர்தத்தை ஏந்தி வந்தார். அதைக் கண்டதும் அசுரர்கள், “அது எங்களுடையது” என்று பெருங் கூச்சலிட்டு அபகரித்தனர்.

அப்போது நாராயணர் அழகிய பெண்வடிவம் எடுத்து அசுரர்களிடம் சென்று அவர்களை மதிமயங்க வைத்து அவர்களிடமிருந்த அமிர்தத்தைத் திரும்பப் பெற்றார். அதன் பிறகு சுதாரித்த அவர்கள் ஒன்றுகூடி, யுத்தம் செய்யும் பொருட்டு பல்வேறு ஆயுதங்களுடன் தேவர்களை நோக்கி விரைந்து சென்று அமிர்தத்தைக் கைப்பற்றினர். அப்போது பெண் வடிவிலிருந்த நாரயணன் அசுரர்களின் தலைவனிடமிருந்த அமிர்தத்தை மீண்டும் பறித்தார். இந்தக் குழப்பத்தில் அனைத்து தேவர்களும் நாராயணனிடமிருந்து அமிர்தத்தை வாங்கிக் குடித்தனர். அதைக் கண்ட ரகு என்ற அசுரன் தேவன் வடிவமெடுத்து அமிர்தத்தை வாங்கிக் குடித்தான். அதைக் கண்ட சூரியனும் சந்திரனும், தேவர்களின் நலன் கருதி, அமிர்தம் அந்த அசுரனின் தொண்டையை அடைவதற்கு முன்னரே நாராயணனிடம் தெரிவித்தனர். எனவே அமிர்தமானது அந்த அசுரனின் தொண்டையில் இறங்கும் போதே நாராயணர் தன்னுடை சக்கராயுதத்தால் அவன் தலையை வெட்டி எடுத்தார். பெரும் ஓலமிட்டுக் கொண்டே அந்த அசுரனின் தலை தரையில் விழுந்தது. அப்போதிருந்து ரகுவிற்கும் சந்திர சூரியனுக்கும் இன்றும் பகை இருந்துகொண்டே இருக்கிறது.

அப்போது தனது பெண் வடிவத்திலிருந்து நீங்கிய நாராயணன் அசுரர்கள் அஞ்சும்படி பல்வேறு ஆயுதங்களை அவர்களை நோக்கி வீசினார். இப்படியாக அந்த உப்பு நிரம்பிய கடலின் கரையில் தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் பயங்கரமான போர் மூண்டது. ஆயிரக்கனக்கான கூரிய ஈட்டிகளும், கூர்மையாக சீவப்பட்ட கம்புகளும் இன்னபிற ஆயுதங்களும் அவர்களுக்கிடையே சுழன்றன. ஆயுதங்களால் வெட்டப்பட்ட அசுரர்களின் உடம்பிலிருந்து வெளியேறிய குருதி அந்தக் கடற்கரையை நனைத்தது. அந்த பயங்கரமான போரில் வெட்டப்பட்ட அசுரர்களின் தலைகள் தொடர்ச்சியாகத் தரையில் விழுந்த வண்ணம் இருந்தன. தரையெங்கும் குருதியில் நனைந்து விழுந்துகிடந்த அசுரர்களின் உடல்கள் பார்ப்பதற்குச் சிவப்பு நிற மலை முகடுகளாகத் தெரிந்தன. 

சூரியன் சிவப்பு நிறம் பெற்று மங்கத் தொடங்கிய வேளையில் ஆயிரக்கணக்கான குரல்களின் ஓலம் அந்தக் கடற்கரையெங்கும் ஒலித்தது. “வெட்டு” “குத்து” பிடி” “விடாதே” “கிழே தள்ளு” “முன்னேறு” என்ற ஒலிகள் நாலா பக்கங்களிலும் கேட்டுக்கொண்டிருந்தது. இவ்வாறு சீற்றத்துடன் போர் நிகழ்ந்து கொண்டிருந்த போது நரனும் நாராயணனும் போரில் பங்கெடுத்தனர். நரணின் கையிலிருந்து வில்லைக்க கண்ட நாராயணன் சுதர்சன சக்கரத்தை மனதில் நினைத்தார். நினைத்த மாத்திரத்தில், எதிரிகளை பொசுக்குவதும், சூரியனைப் போன்ற ஒளி பொருந்தியதுமான அந்தச் சக்கரம் ஆகாயத்திலிருந்து அவரெதிரே வந்ததது. யானை துதிக்கை போன்ற கைகளை உடைய நாராயணன் அந்தச் சக்ரத்தைப் பெற்று, மிகுந்த ஆற்றலுடன், எதிர்படும் அனைத்தையும் அழிக்கும் வேகத்தில் வீசினார். உலகத்தை அழிக்கையில் வெளிப்படும் ஒளி பொருந்திய ஜூவாலையைப் போன்று அங்குமிங்கும் பறந்து சென்ற நாராயணின் சக்கராயுதம் தைத்தியர்களையும் தானவர்களையும் சந்ததியின்றி கொன்றழித்தது.

சிலசமயம் எரியும் ஜூவாலையாகவும், சில சமயம் பூதங்களை அழிக்கும் எமனாகவும் சக்கராயுதம் சுழன்று சுழன்று வந்தது. ஒரு சமயம் அது வானலிருந்தது. மற்றொரு சமயம் அது தரையிலிருந்தது. துர்க்குணம் கொண்ட ஆவியாக அந்தச் சக்கரம் யுத்தத்தில் அசுரர்களின் இரத்தத்தைக் குடித்தது. அப்போதும் உறுதி குலையாத அசுரர்கள் ஆகாயத்தில் எழும்பி மேகங்களாகக் கலைந்து மலைகளைத் தூக்கி தேவர்களின் மீது வீசினார்கள். மரங்களையும் முகடுகளையும் தன்னகத்தே கொண்ட அந்த மலைகள் பெரும் மேகக்கூட்டமென ஆகாயத்திலிருந்து இறங்கி ஒன்றுடன் ஒன்று மோதி பயங்கராமான சத்தத்தை உண்டாக்கின. தேவர்கள் ஓலமிட, காடுகளோடு கூடிய பெரும் மலைகள் கீழே விழுந்து பூமியை ஸ்தம்பிக்க வைத்தது.

அப்போது ஒப்பற்ற நரன் அங்கே தோன்றி பொன் நிறம் பூணப்பட்ட முனைகள் கொண்ட அம்பால் அந்த மலைகளைச் சிதறடித்து புழுதியாக்கி பூமியில் விழச்செய்தான். அப்போது தேவர்கள் ஒருபுறம் அசுரர்களை விரட்டியடிக்க, சுதர்சன சக்கரம் மறுபுறம் அவர்களை விரட்டியது. இரு புறமும் தப்பியவர்கள் கடலில் குதித்தோடினர். இவ்வாறு வெற்றியடைந்த தேவர்கள் மந்தரா மலையை மீண்டும் அதனிடத்தில் வைத்தனர். அதன் பிறகு அமிர்தம் யாரும் அணுகமுடியாதவாறு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.

Related Posts Plugin for WordPress, Blogger...