May 29, 2017

10. கருடன் பசியாறியது

வெகுதூரம் பறந்த களைப்பிலும், பசியிலும் வாடிய கருடன், தன் பசியைத் தீர்த்துக்கொள்ளும் பொருட்டு, நிஷாதர்கள் என்ற மீனவர்கள் வசித்த தீவில் எமனைப் போல இறங்கினான். நிஷாதர்களை அழிக்கும் எண்ணத்தோடு வேகமாக இறங்கி, ஆகாயத்தை மறைக்கும்படியாக புழுதியைக் கிளப்பினான். அவனால் எழுப்பப்பட்ட புழுதிப் படலம் கடல் நீரை வற்றச்செய்ததோடு சுற்றியிருந்த மலைகளையும் அசைத்தது. நிஷாதர்கள் செல்லும் வழியில் தன்னுடைய வாயைப் பெரிதாகத் திறந்துவைத்து வழியை அடைத்தான். மிகுந்த எச்சரிக்கையுடன் ஒடிய நிஷாதர்கள், புழுதியால் மறைக்கப்பட்டு கண் தெரியாமல், நாகங்களை உண்ணும் கருடனின் வாயை வழியென்று கருதி அதில் நுழைந்தனர். அப்படி அவர்கள் நுழைந்த பிறகு, பெரும்பசியோடிருந்த கருடன் தன் வாயை மூடினான். இப்படியாக மீன்களை பிடித்து வாழ்ந்த நிஷாதர்களை கருடன் கொன்றழித்தான்.

அப்போது ஒரு அந்தணனும் அவன் மனைவியும் கருடனின் வாயில் நுழைந்து, அவனது தொண்டையை தணலைப்போல எரியச்செய்தனர். எனவே கருடன், “ஓ அந்தணரே! நான் என்னுடைய வாயைத் திறக்கையில் திறந்த வாயின் வழியே சீக்கிரம் வெளியேறுங்கள். ஒரு அந்தணன் எவ்வளவுதான் பாவம் செய்தவன் என்றாலும் என்னால் கொல்லப்படக் கூடியவன் அல்ல” என்றான். அதற்கு அந்த அந்தணன், “ என்னுடைய மனைவி ஒரு நிஷாதப் பெண். அவளும் என்னுடன் வெளியேவரட்டும்” என்றான். “அவளையும் உன்னுடன் அழைத்துக்கொண்டு, என்னால் ஜீரணிக்கப்படும் முன் சீக்கிரமாக வெளியேறுங்கள்” என்று கருடன் அவசரப்படுத்தினான். இவ்வாறு தன் மனைவியுடன் வெளியேறிய அந்தணன் கருடனை புகழ்ந்துவிட்டு, எந்த நாட்டுக்குச் செல்ல விருப்பினானோ அங்கே சென்றான். அவர்கள் வெளியே வந்த பிறகு, சிறகுகளை விரித்து மனோ வேகத்தில் ஆகாயத்தில் பறந்தான் கருடன்.

வழியில் தன்னுடைய தந்தையான கசியபரைச் சந்தித்தான் கருடன். அவர் அவனுடைய நலனைப் பற்றி கேட்டார். “நான் நாகங்களின் சொற்படி அமிர்தத்தைக் கவரச் செல்கிறேன். இன்றைக்குள் அதைக்கொண்டு வந்து என்னுடைய தாயை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பேன். என்னுடைய தாய் நிஷாதர்களை உண்ணும்படி சொன்னாள். அப்படியாக ஆயிரம் நிஷாதர்களை உண்ட பின்னும் என்னுடைய பசி அடங்கவில்லை. எனவே நான் சாப்பிடக்கூடிய வேறுவகையான உணவுகளை எனக்குக் காட்டுங்கள். அமிர்தத்தைக் கவர்ந்து செல்லும் பொருட்டு நான் ஆற்றலுடன் இருக்கவேண்டியது அவசியம்” என்றான் கருடன். 

“முன்னொரு காலத்தில் விபாவசு என்ற ரிஷி வாழ்ந்து வந்தார். அவர் ஒரு முன்கோபி. அவருக்கு சுப்ரதிகா என்ற இளைய சகோதரன் இருந்தான். அவன் ஒரு சிறந்த துறவி. தனது சகோதரனுடன் சேர்ந்து சொத்துக்களை பராமரிப்பதை அவன் விரும்பவில்லை. எனவே எப்போதும் சொத்துக்களை பாகப்பிரிவினை செய்வது பற்றியே பேசிக்கொண்டிருந்தான். சில நாட்களுக்குப் பிறகு விபாவசு தன் தம்பியிடம், “செல்வத்தின் மீதுள்ள மாயத்தோற்றத்தால், பலரும் சொத்துக்களைப் பிரித்து அனுபவிக்கவே ஆசைப்படுகிறார்கள். அப்படிப் பிரித்த பிறகு செல்வத்தின் மீதுள்ள அளவற்ற ஆசையால் தாங்கள் ஏமாற்றப்பட்டுவிட்டதாக நினைக்கிறார்கள். சுயநலத்தின் அறியாமை பகையை வளர்க்க, தங்களது உறவை மூடிமறைத்து விடுகிறார்கள். செல்வத்தைப் பிரித்துக்கொண்ட வேறுசிலர், தங்களது பகையை வேறுவகையில் வளர்த்துக்கொள்கிறார்கள். இப்படிப் பிரிந்தவர்கள் வெகுசீக்கிரமே வீழ்ச்சியைச் சந்திக்கிறார்கள். எனவே இப்படிப் பிரிந்தவர்களை விரைவில் பெரும் நாசம் வந்தடைகிறது. இதன் காரணமாகவே, கற்றவர்கள் சகோதரர்களுக்கிடையே பிரிவினையை அனுமதிப்பதில்லை. அப்படிப் பிரிவினையைச் செய்தவர்கள் சாஸ்திரங்களாலும் சடங்குகளாலும் கிடைக்கும் பலனைப் பெறும் தகுதியை இழந்துவிடுகிறார்கள். சுப்ரதிகா! இப்போது நீ என்னுடைய கட்டுப்பாட்டிலிருந்து விலகிவிட்டாய். செல்வந்தனாகும் ஆசையில், என்னுடைய அறிவுரைகளை புறந்தள்ளிவிட்டு, பிரிவினையைக் கேட்கிறாய். ஆகவே நான் உன்னை ஒரு யானையாக மாறும்படி சபிக்கிறேன்” என்றான் விபாவசு. அதைக்கேட்ட சுப்ரதிகா, “நீ தண்ணீரில் வாழும் ஆமையாக ஆவாயாக” என்று தன் அண்ணனை பதிலுக்குச் சபித்தான்.

இவ்வாறு ஒருவரை ஒருவர் சபித்துக்கொண்டு அவர்கள் அவ்வாறே ஐந்தறிவு கொண்ட யானையாக, ஆமையாக ஆனார்கள். அவ்வாறு மாறிய பின்னரும் அவர்கள் தங்களுக்கிடையான பகையைத் தொடர்ந்தபடி தடாகம் ஒன்றினருகே வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் பார்க்க நேர்ந்தபோதெல்லாம் சண்டையிட்டுக் கொள்வார்கள். நீயே பார்! இப்போது கூட யானையின் பிளிறலைக் கேட்ட பூதாகரமான ஆமை நீருக்கடியிலிருந்து, தண்ணீரை குழப்பியபடி மேலே வருகிறது. அதைக் கண்ட பேராற்றல் கொண்ட யானை ஆக்ரோஷமாக தனது தந்தம் தும்பிக்கை இரண்டையும் ஆட்டியபடி, வேகமாக நடைவைத்து, தன்னுடைய வால் ஆட, தண்ணீருக்குள் இறங்குகிறது. நீரிலிருந்த எண்ணற்ற மீன்கள் குழம்பித் தெரித்து விழுகின்றன. யானையுடன் சண்டையிடுவதற்காக தன்னுடைய தலையை உயர்த்தியபடி ஆமை மேலே வருவதைப் பார். யானை ஆறு யோஜனை உயரமும், அதைப்போல இருமடங்கு நீளமும் கொண்டது. ஆமையோ மூன்று யோஜனை உயரமும், பத்து யோஜனை அகலமும் கொண்டிருக்கிறது. அவையிரண்டும் பித்துப் பிடித்தவையாக, சண்டையிடுவதற்கான சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருந்தவர்கள் போல, ஒருவரை ஒருவர் கொல்லத் துடிக்கிறார்கள். எனவே இவர்களே உனது பசிக்கு ஏற்றவர்கள். அவர்களைச் சாப்பிட்டு, உன்னுடைய காரியத்தை விரைவாக முடிப்பாயாக” என்றார் கசியபர்.

தன் தந்தையின் வார்த்தைகளைக் கேட்ட கருடன் ஆகாயத்திலிருந்து இறங்கி அந்த யானையையும், ஆமையையும் இரண்டு கால் நகங்களிலும் பற்றிப்பிடித்தான். அவ்வாறு பிடித்தவனாக ஆகாயத்தில் பறந்தான். அவ்வாறு பறந்தவன் பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்ளும் அலம்பா என்ற, தெய்வீக மரங்கள் நிறைந்த, இடத்தில் இறங்கினான். அவன் தனது சிறகுகளை அடித்தபடி தரையிறங்கிய போது வீசிய காற்றில் அங்கிருந்த மரங்கள் பயத்தில் நடுங்கின. அந்த தெய்வீகமான மரங்கள், தங்களுடைய தங்கத்தாலான கிளைகள் உடைந்து விடுமோ என்று அஞ்சின. கனிகளும் காய்களும் நிறைந்து, வடிவத்திலும் வண்ணத்திலும் ஒன்றை ஒன்று ஒப்பிட முடியாத, வேண்டியவர்க்கு வேண்டிய வரம் தரும் அந்த மரங்களின் அருகில் சென்றான் கருடன். அந்த மரங்களின் கனிகள் தங்கத்திலும், வெள்ளியிலும் ஜொலிக்க, அதன் கிளைகள் நீல வண்ணத்தில் இருந்தன. அவைகள் கடலின் நீரால் தூய்மையாக குளிப்பாட்டப் பட்டிருந்தன.

அங்கே நின்றிருந்த மிகப்பெரிய சந்தனமரம், மனோவேகத்தில் இயங்கும் கருடனிடம், “நூறு யோஜனை தூரம் நீண்டிருக்கும் என்னுடைய மிகப்பெரிய கிளை ஒன்றில் அமர்ந்து யானையையும், ஆமையையும் சாப்பிடு” என்றது. அதைக்கேட்ட கருடன் ஆயிரக்கணக்கான பறவைகளின் இருப்பிடமாக உள்ள அந்தக் கிளையை அசைத்தும், இலைகளால் நிரம்பிருந்த கிளைகளை உடைத்தும் அந்த மரத்தின் மீது இறங்கினான்.

ஒப்பற்ற ஆற்றல் மிக்க கருடன் அந்த மரத்தின் கிளையை தன்னுடைய கால்களால் தொட்டபோது நடுவில் முறிந்தது. முறிந்த கிளை கீழே விழும் தருவாயில், அதைத் தாவிப் பிடித்தான் கருடன். அப்படி முறிந்து விழப்போன அந்தக் கிளையைக் கூர்ந்து பார்த்த கருடன், அதில் வாலகிய முனிவர்கள் பலர் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வியப்படைந்தான். அவர்கள் கீழே விழுந்தால் கொல்லப்பட்டு விடுவார்கள் என்று அஞ்சிய அவன், அந்தக் கிளையை தன்னுடைய அலகால் பற்றிப் பிடித்து மேலேற்றினான். மலைகள் அசையும் வண்ணம் யானை, ஆமை, மற்றும் வாலகியர்களோடு, வானத்தை வட்டமிட்டபடி பல நாடுகளைச் சுற்றினான். அப்படியும் அவன் தரையிறங்குவதற்குத் தோதான ஒரு இடம் கூட தென்படவில்லை. இறுதியாக அவன் அழிக்கமுடியாத கந்தமாதன எனும் சிறந்த மலைக்குச் சென்றான்.

அங்கே அவனது தந்தையான கசியபர் தவம் செய்துகொண்டிருப்பதைப் பார்த்தான். அவரும் அவனைக் கண்டார். தெய்வீகமானவனை, ஆற்றல் மிக்கவனை, பலம் மிக்கவனை, வாயு வேகம் மனோ வேகம் கொண்டவனை, பெரும் மலைச்சிகரம் போன்றவனை, உயர்ந்த அந்தணனைப் போன்றவனை, புத்திக்கு எட்டாதவனை, விவரிக்க முடியாதவனை, அனைத்து உயிர்களுக்கும் அச்சம் தருபவனை, வீரம் மிக்கவனை, அக்னியைப் போன்று பிரகாசமானவனை, தேவர்கள், அசுரர்கள், ராட்சஷர்கள் மூவராலும் வெல்லமுடியாதவனை, மலைச் சிகரங்களை நொருங்கச் செய்பவனை, பெருங்கடலையும் வற்றச்செய்பவனை, எமனைப் போன்றவனை கசியபரும் கண்டார்.

அவனையும் அவனது நோக்கத்தையும் அறிந்த கசியபர், “மகனே! அவசரப்பட்டு எதையும் செய்யாதே. அப்படிச் செய்தால் அது துன்பத்தில்தான் முடியும். சூரியனின் கதிர்களால் உயிர் தரித்திருக்கும் வாலகியர்கள் கோபமடைந்தால் உன்னை எரித்துவிடுவார்கள்” என்றவர் தனது மகனின் நலன் கருதி, வாலகியர்களைச் சாந்தப்படுத்தும் விதமாக, “தவத்தை மேற்கொண்ட முனிவர்களே! கருடனின் செயல்கள் அனைத்து உலக உயிர்களுக்கு நன்மையாகவே முடியும். அவன் மிகச் சிறந்த ஒரு காரியத்தைச் செய்யத் தலைப்பட்டுள்ளான். தயவுசெய்து அதைச் செய்வதற்கு அவனை அனுமதியுங்கள்” என்று வேண்டிக்கொண்டார்.

இவ்வாறு கசியபர் கேட்டுக்கொண்டதால், மரக்கிளையை விட்டுவிட்டு வாலகியர்கள் புனிதமான இமய மலைக்குச் சென்றார்கள். அவர்கள் சென்றபிறகும், தன்னுடைய அலகால் மரக்கிளையை கௌவிக்கொண்டிருந்த கருடன், “தந்தையே! நான் இந்த மரக்கிளையை எங்கே தூக்கி எறிவது? அந்தணர்கள் இல்லாத ஒரு இடத்தை எனக்குச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.

மனிதர்கள் வாழமுடியாத, எவரும் எளிதில் அணுக முடியாத, யாரும் நுழைய முடியாத, மனதாலும் நெருங்க முடியாத, பனிப்பொழிவும் குகைகளும் நிரம்பிய மலை ஒன்றை கசியபர் கருடனுக்குச் சொன்னார். பறவையிற் சிறந்த கருடன் யானை, ஆமை இவற்றோடு, நூறு தோல்களால் பின்னப்பட்ட கயிற்றாலும் சுற்ற முடியாத பெருத்த சுற்றளவு கொண்ட கிளையையும் தன்னுடைய அலகால் கௌவியபடி, ஒரு இலட்சம் யோஜனை தூரம் பறந்து, வாயுவேக மனோவேகத்தில், மிகச் சீக்கிரமாகத் தன் தந்தை சொன்ன இடத்தில் வந்துசேர்ந்தான். மலைக்கு மேலே பறந்தவாறு மரக்கிளையை தன் அலகிலிருந்து விடுவித்து கீழே போட்டான். அந்த மரக்கிளை பலத்த சப்தத்துடன் தரையில் விழுந்தது. கருடப் பறவையின் சிறகடிப்பால் ஏற்பட்ட காற்று மலைச்சிகரங்களை அதிரவைத்தது. கிழே சரிந்த மரங்கள் நானாவித மலர்களைச் சொரிந்தன. அந்த மலையை அணிசெய்த தங்கங்களும் வைரங்களும் நாலாபுறமும் சிதறி ஒடின. கீழே விழுந்த மரக்கிளை, தங்க மலர்களைக் கொண்ட பல மரங்களை மோதிச் சிதறடித்து, மின்னலைப் பிரகாசிக்கும் மேகங்களாயின. தங்கத்தைப் போல பிரகாசித்த மரங்கள் கீழே விழுந்து அம் மலையின் கனிமங்களோடு கலந்து, சூரியனின் செந்திறக் கதிர்கள் போன்று ஒளிவீசின. பறவைகளிற் சிறந்த கருடன் அந்த மலையின் சிகரமொன்றில் அமர்ந்து யானையையும் ஆமையையும் உண்டு பசியாறினான்.

Related Posts Plugin for WordPress, Blogger...