June 18, 2015

தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள்: படைப்பின் சிகரம்

தேர்ந்த புகைப்படக் கலைஞன், ஓவியன், ஒளிப்பதிவாளன் அத்தனையும் தன்னுள் ஒருசேரப்பெற்ற ஆற்றல் கொண்ட படைப்பாளி தி.ஜா. இதற்கு அவர் படைப்பின் மிகச்சிறந்ந உதாரணமாகத் திகழ்வது அவரது அம்மா வந்தாள். நாவலின் புறம், மனித மனங்களின் அகம் இரண்டையும் அவரைப்போல் சித்தரிக்கும் படைப்பாளி வேறு எவருமில்லை. பெண்களைப்பற்றிய அவருடைய விவரிப்புகள், பெண்களைப் போலவே நளினமும் அழகும் கொண்டவை. அவற்றில் நம் மனம் பாகாய்க்கரைந்து போகிறது. சர்க்கரைக் கட்டியைச் சுற்றும் எறும்பாய் நம் மனம் அவரின் வருணனைகளில் மன மயக்கத்துடன் சுற்றிச் சுழல்கிறது. அவரது நடையின் வசீகரம் நம் மனதை மயக்குகிறது. அவரது அனாசயமான வார்த்தைகளும் வாக்கியங்களும், அவரை எழுத்துப் பிரம்மாவாக பூஜிக்க வைக்கிறது. உரையாடலின் நடுவே, உரையாடுபவரின் அந்தரங்கத்தை நாம் உணரும் விதமாக, அதே சமயம் வெளிப்படையாகச் சொல்லாமல் கொண்டு செல்லும் வல்லமை அவருக்கே உண்டு. மனித மனத்தில் சஞ்சரிக்கும் வித்தை கைவரப்பெற்றவர் அவர்.

மனிதர்களுக்கு அவரவர்க்கென்று ஆசா பாசங்கள் உள்ளன. உறவு என்று வந்துவிட்டதாலேயே அவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்க யாருக்கும் அதிகாரம் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்லும் நாவல்தான் அம்மா வந்தாள். மனிதன் எங்கே இருந்தாலும் ஏதாவது ஒரு குறை அங்கே வந்துவிடுகிறதே என்ன செய்ய? அந்தக் குறை முள்ளாக தைத்துக் கொண்டிருக்கும் போது சாதாரண மனிதர்கள் என்ன செய்ய முடியும்? தவறு செய்வது தவிர்க்க முடியாததாகிவிடுகிறது. ஆனால், சரி தவறு என்று நிர்ணயிப்பது யார்? என் சரி தவறை, என்னதான் முயன்றாலும் அடுத்தவர் புரிந்துகொள்ள முடியுமா என்ன? அடுத்தவர் குற்றம் சாற்றுவார்கள் என்பதற்காக என் சரி தவறை, பிறர் தீர்மானிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்? எல்லோருமே அப்படியான சரி தவறுகளை மனதளவில் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். இல்லை என்று சொல்ல முடியுமா? பலர் செயலில் இறங்கவில்லை, அவ்வளவுதானே? இதே சரி தவறு ஆகியவற்றை பெண்களுக்கு ஒரு மாதிரியும் ஆண்களுக்கு வேறு மாதிரியாயும் இந்த சமூகம் நியாயங்களைக் கற்பித்து வைத்திருக்கிறதே அது ஏன்? எல்லோரும் மனிதர்கள்தானே? போன்ற எண்ணற்ற கேள்விகளை நம் மனதில் எழுப்பி, நம்மையும் நம் மனத்தையும் முட்டிமோத வைத்து அமைதியின்மையை ஏற்படுத்துகிறது அம்மா வந்தாள்.

வேதபாடசாலையில் பதினாறு வருடங்கள் பயின்று வீடு திரும்புகிறான் அப்பு. பாடசாலை நடத்தும் பவானியம்மாளின் மருமகள் இந்து கணவைனை இழந்தவளாக அங்கேயே இருக்கிறாள். திருமணத்திற்கு முன்னரே இந்துவிற்கு அப்புவின் மீது விருப்பம் உண்டு. கணவனை இழந்து அங்கே வந்திருப்பதில் அவளுக்குச் சந்தோஷமே இருப்பதாகத் தெரிகிறது. இன்னும் நான்கு நாட்களில் அப்பு ஊருக்குச் செல்லவிருக்கும் நிலையில் பவானியம்மாள் திருமணம் ஒன்றிற்குச் சென்றுவிடுகிறாள். அந்த சமயத்தில் இந்து தன் உள்ளக்கிடக்கையை அப்புவிற்கு உணர்த்துகிறாள். அப்பு அது தவறென்று சொல்கிறான். அப்பு தன் அம்மாவைப்பற்றிப் பேசப்போக இந்துவிற்கு கோபம் வருகிறது. அவனது அம்மாவின் நடவடிக்கை குறித்துத் தவறாகச் சொல்கிறாள். அப்புவிற்கு அவள் மீது கோபம் எழுகிறது. தான் உயர்வாக மதிக்கும் தன் அம்மாவைப்பற்றி இந்து அவ்வாறு சொன்னது அவனால் பொறுக்கமுடியாததாக இருக்கிறது. எப்படியோ ஊருக்குக் கிளம்புகிறான்.

கதையின் தொடக்கத்திலேயே இந்துவின் இப்படியான விருப்பத்தைச் சொல்வதின் மூலம் நம்மை நாவலின் அடுத்த கட்டத்திற்கு தயார் செய்கிறார் ஜானகிராமன் என்றே சொல்லவேண்டும். இங்கே இதை நாம் தவறாக நினைக்காதபோது அப்புவின் அம்மா அலங்காரத்தம்மாவின் செயலையும் நாம் தவறாகக் கூறமுடியாது என்று குறிப்பாக உணர்த்துகிறார். குழப்பத்துடன் வீடு வந்துசேரும் அப்பு வீட்டில் நுழைந்ததும் காணும் காட்சி முக்கியத்துவம் வாய்ந்தது. இங்கேதான் ஜானகிராமனை ஒரு தேர்ந்த திரைப்பட இயக்குனராக காணமுடிகிறது. இதற்கு முந்தைய காட்சியில் தான் சொன்னவற்றை பின்னால் எப்படி சொல்லப்போகிறார் என்ற தவிப்பு நாம் நாவலைப் படிக்கும்போது நம்முள் ஏற்படுகிறது. ஆனால் அப்பு வீட்டில் நுழைந்ததும் சிவசுவை தன் அண்ணன் என நினைத்து, “ஏன் மீசையை எடுத்துவிட்டாய்?” என்று கேட்கிறான். பிறகுதான் அது தன் அண்ணனல்ல வேறு ஆள் என்று உணர்கிறான். பக்கம் பக்கமாக எழுதுவதைவிட ஒரே ஒரு கேள்வியில் மொத்த நாவலின் கதையை நமக்கும், முக்கியமாக அப்புவுக்கும் உணர்த்திவிடுகிறார் தி.ஜா.

தன்னைத் தவிர வீட்டில் எல்லோருக்குமே அம்மாவைப்பற்றி தெரியும் என்று அறியும்போது அப்பு கூனிக்குறுகிவிடுகிறான். தன் அப்பாவிற்கு தெரிந்தும் ஒன்றும் செய்யாமலிருப்பது அவனுக்குக் கோபத்தை ஏற்படுத்துகிறது. ஏன் ஊருக்கு வந்தோம் என வருந்துகிறான். அப்போது பவானியம்மாள் உடல் நலத்துடன் இல்லை என்று கடிதம் வருகிறது. இங்கே இருக்க இருப்புக்கொள்ளாது தவிக்கும் அப்பு இதுதான் சமயமென்று மீண்டும் பயணிக்கிறான். பவானியம்மாள் அவனிடமும் இந்துவிடமும் பாடசாலையை ஒப்படைக்கும் முடிவை எடுக்கிறாள். நாட்களாகியும் அப்பு திரும்பாமலிருக்கவே அவன் அம்மா அங்கே வருகிறாள். தன் பாவத்தின் பிரயாச்சித்தமாக காசிக்குச் செல்வதாகக் கூறிச் செல்கிறாள்.

மனதில் ஏற்றப்பட்டுவிட்ட சமூகத்தின் தாக்கத்திலிருந்து மீண்டு வருவது அவ்வளவு எளிதல்ல. எனவேதான் அப்புவை வேதம் படிக்கச்சொல்லி அவன் காலடியில் வீழ்ந்து தன் தவறுக்கு, குறிப்பாக கணவர் தண்டபாணிக்கு தான் செய்துவிட்ட அநீதிக்கு மன்னிப்புக்கோரி நிற்க முற்படுகிறாள் அலங்காரத்தம்மாள். ஏனென்றால், அவர் எல்லாம் தெரிந்தும் ஒன்றும் சொல்லாமலிருப்பது அவள் மனதை அரிக்கிறது. அவள் காசிக்குச் செல்வதும் அதனால்தான். இங்கே இன்னொன்றையும் நாம் கவனிக்கவேண்டும். அலங்காரத்தம்மாவின் தோற்றத்தை வர்ணிக்கும்போது, தேஜஸ், அசாத்திய உயரம், கம்பீரம், வசீகரம் என்றவிதத்தில் ஜானகிராமன் சொல்லிச்செல்கிறார். குற்றமுடைய நெஞ்சில் இவைகள் இருக்கச் சாத்தியமில்லை. தன் மனதில் ஏற்பட்ட மாசுக்காக அல்ல, தன் மீதான பிறர் மனங்களின் மாசைத்துடைக்கவே அவள் காசிக்குச் செல்கிறாள் என்று புரிந்து கொள்ளும்போது நாவலை நாம் வேறோர் தளத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.

ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலிக்குக் குற்ற உணர்வு இருந்ததா என்ன? ஐந்து கணவர்களோடு, தன் மனம் வேறோர் ஆடவனையும் விரும்புமோ என்று தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டதால்தானே பழம் மீண்டும் மரத்தில் ஒட்டியது? அவள் சபதம் போடவில்லையா? அந்த சபதமும் பலிக்காமல் போகவில்லையா? இந்துவை ஏற்கத்தயாராய் இருக்கும் அப்பு தன் அம்மாவை நிராகரிக்க முடியுமா என்ன? அவன் பார்வை ஆணின் பார்வை என்பதாலும் அலங்காரத்தம்மாவின் பார்வை பெண் சார்ந்த பார்வை என்பதாலும் அவள் மீது குற்றம் சுமத்துவது எவ்விதத்திலும் நியாயமாக முடியுமா? இத்தகைய சிக்கல்களில், உளவியல் ரீதியான பிரச்சினைகளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை. அது தனி நபர் சார்ந்தது. அதன் மீதான பிறரின் பார்வைகள் எவ்வாறு சரியானதாக இருக்கும்? போன்ற பல விடைதெரியாத கேள்விகள் நம்முள் எழுவதை நாம் தவிர்க்கமுடியாதவாறு நாவல் அமைந்துவிட்டிருக்கிறது.

ஆரம்பத்தில் அலங்காரத்தம்மாள் மீது சொல்லமுடியாத கோபம் நமக்கும் வருகிறது. ஆனால் போகப்போக அவள் மீது நமக்கு அனுதாபம் பிறக்கிறது. அவளும் மனுஷிதானே என்று தோன்றிவிடுகிறது. இது ஜானகிராமன் எழுத்தின் மாயாஜாலம். ஒரு படைப்பாளியின் படைப்பின் வெற்றி என்பது இதுதான். நம் முடிவுகளை நிர்மூலமாக்கி தன் முடிவை நிலைநிறுத்துவது. அதில் தி.ஜா. சிகரத்தைத் தொட்டிருக்கிறார். (மோக முள்ளிலும் அவர் இதை சாதித்திருப்பது நம் கவனத்திற்குரியது).

நாவல் முழுதும் வாசக இடைவெளிக்கும், ஊகத்திற்கும் கணிசமான இடைவெளிகள் இருக்கின்றன. அந்த இடைவெளிகளை, நம் மனம் கட்டற்ற வெள்ளம்போல் பாய்ந்து ஓடி நிரப்ப முயற்சிக்கிறது. அதற்கான தேடலாகவே மேலே சொன்ன கேள்விகள் நம் மனதில் எழுந்து மோதி நுரைப்பது. நாவலின் காலம் நம்முள் போதுமான அளவிற்கு பரந்த வெளியில் சஞ்சரித்ததான ஒரு உணர்வைக் கொடுக்கிறது. ஜானகிராமனின் ஆகச்சிறந்த படைப்பு அம்மா வந்தாள் என்பதில் சந்தேகமில்லை. நம் மனோபாவங்களுக்கு ஏற்ப நாவலை விரித்துக் கொள்வதற்கு அம்மா வந்தாள் இடமளிப்பது அதன் முக்கியச் சிறப்பு. மீண்டும் பிரிதொரு வாசிப்பில் நமக்கு வேறுவகையான தரிசனத்தை நாவல் வழங்குவதற்கு தயாராய் இருக்கிறது. நாம் திறந்த மனத்துடனும், முன்முடிவுகள் ஏதுமின்றியும் நாவலை எதிர்கொள்ள விழையும்போதே அது சாத்தியமாகும்.

நாவல் இப்படித்தான் ஆரம்பிக்கிறது:
சரஸ்வதி பூஜையன்று புத்தகம் படிக்கக் கூடாது என்பார்கள். ஆனால் ஒரு நாளுமில்லாத திருநாளாகப் புத்தகத்தின்மேல் வருகிற ஆசை! கீழே கிடக்கிற-பல்பொடி மடிக்கிற-காகிதத்தையாவது எடுத்துப் படிக்க வேண்டும் என்ற மோகம்!
சாதாரண புத்தகத்திற்கே இப்படியெனில். வாழ்க்கை எனும் புத்தகம் எத்தகய பிரம்மாண்டமானது. அங்கே நம் மனம் எதை வேண்டாமென்கிறதோ அதைச் செய்ய நினைப்பதில் ஆச்சர்யமேது? மனதுக்கு ஏன் இந்த குணம்? ஒன்றை வலியுறுத்த வலியுறத்த அதன் எதிர்த்திசையை நோக்கி பயணப்படும் அதன் விசித்திரத்தை என்னவென்பது? தன் கதையின் தீர்மானத்தை முதல் வரியிலேயே சொல்லிவிட்ட தி.ஜாவின் படைப்பின் நேர்த்தியை என்ன சொல்ல? புத்தகத்தை முடித்ததும் படைப்பையும் தாண்டி நம் மனதில் ஜானகிராமன் நிலைத்து நிற்பது அதனால்தான்.

1966-ல் இந்நாவல் எழுதப்பட்டபோது அவரது சொந்த கிராமமான தேவங்குடிக்குள் நுழைய ஜானகிராமனுக்குத் தடை விதிக்கப்பட்டது. இன்று மனித வாழ்க்கையின் காலங்களும் கோலங்களும் மாறிவிட்டன. ஒழுக்கம், கட்டுப்பாடு, நியதி எல்லாம் இன்று வேறு அர்த்தத்தைப் பெற்றுவிட்டிருக்கின்றன. ஜானகிராமனுக்கு முன்பாகவே ருஷ்ய இலக்கியத்தில் இதே மாதிரியான கருத்தை முன்னிருத்தியவர் டால்ஸ்டாய் என்பது அனைவரும் அறிந்ததே. அவரது அன்னா கரீனினா நாவலின் தாக்கத்தாலேயேகூட ஜானகிராமன் இந்நாவலை எழுதியிருக்கக்கூடும்.

(இன்று தி.ஜானகிராமனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்தப் பதிவு மறுபிரசுரம் செய்யப்படுகிறது. முதல் பிரசுரம் 14.01.2013)

Related Posts Plugin for WordPress, Blogger...