February 10, 2015

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம்: உடல், மனம், ஆத்மா என்ற மூன்றின் சஞ்சாரம்

நட்சத்திரத் தகுதி: ✰✰½
வெளியீடு: உயிா்மை
முதல் பதிப்பு: டிசம்பர் 2014
விலை ரூபாய்: 370
பக்கங்கள்: 376
கட்டமைப்பு: கெட்டி அட்டை
வடிவம்: ராயல்

எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் இசையைக் குறித்து பேசும் ஒரு நாவல். எனக்குத் தெரிந்து தமிழில் இசையைக் களனாகக் கொண்ட நாவல்களில் தி.ஜானகிராமனின் மோகமுள் ஆகச்சிறந்த நாவல். அதன் பிறகு ந.சிதம்பர சுப்ரமண்யத்தின் இதயநாதத்தை ஒரு குறிப்பிடத்தக்க நாவல் எனலாம். (தில்லானா மோகனாம்பாளை நான் நாவல் கணக்கில் சேர்க்கவில்லை). எஸ்.ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் இசையை தனது பின்புலமாகக் கொண்டிருப்பதோடு பலதரப்பட்ட நாதஸ்வரக் கலைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடிக்கிறது. நாவல் குறிப்பிட்ட சில தினங்களில் நடக்கும் கதை என்றாலும் பக்கரி, ரத்தினம் ஆகிய இரண்டு கதாபாத்திரங்களின் வாயிலாக பல்வேறு நாதஸ்வரக் கலைஞர்களின் கதை வாசகனுக்குச் சொல்லப்படுகிறது. கடந்தகால இசை மாந்தர்களின் வாழ்வின் சம்பவங்கள் நிரம்பிய மலர்களின் கதம்பத்தை இந்த இரண்டு கதாபாத்திரங்கள் தங்கள் நினைவின் மூலம் கன்னியாக இணைத்து மாலையாகத் தொடுத்திருக்கிறார்கள்.

திரைப்படத்தின் ஆரம்பக் காட்சிகளுக்கு நிகரான பரபரப்புடன் நாவல் ஆரம்பிக்கிறது. சாதியமும் அதன் மூலம் வெளிப்படும் மனித மனத்தின் வன்மத்தையும் அந்தக் காட்சிகள் வெளிப்படுத்துகின்றன. பக்கிரியும் ரத்தினமும் திருவிழா ஒன்றில் வாசிக்கச் செல்லும்போது இரு தரப்பினருக்கிடையே நிகழும் மோதலில், அடித்து உதைத்து மரத்தில் கட்டப்படுகிறார்கள். அங்கிருந்து ரத்தினத்துடன் தப்பிக்கும் பக்கிரி கோபத்தில் கோயில் பந்தலுக்குத் தீ வைத்துவிட்டு போகவே அவர்களை இரு கோஷ்டியினரும், போலீஸும் தேடுகிறார்கள். அவர்களுக்கு பயந்து இருவரும் ஊர்ஊராக அலைகிறார்கள். அவர்கள் செல்லுமிடமெங்கும் பாத்திரங்கள் முளைத்து நாவலின் பக்கங்களில் நடமாடுகிறார்கள். அவர்கள் காணும் காட்சியிலிருந்தும், கேட்கும் பேச்சிலிருந்தும் தங்கள் நினைவுகளை மீட்டெடுப்பதின் மூலம் பாத்திரங்கள் உயிர் பெறுகிறார்கள். அந்த நினைவினூடே பல்வேறு கரிசல் கிராமங்களும், நாதஸ்வரக் கலைஞர்களும், அந்தக் கலையை ரசிக்கும் ரசிகர்களும் உருக்கொள்கிறார்கள். 

நாதஸ்வரம் என்ற வாத்தியத்தைப் பற்றிய கதைகளும், கில்ஜி, மாலிக்காபூர் பற்றிய கதைகளும் நாவலுக்கு வரலாற்றுப் பின்புலத்தையும் சுவாரஸ்யத்தையும் தருகின்றன. அவைகள் உண்மையா பொய்யா என்பதை விடுத்து, அவைகளை மித் (Myth) என்றவகையில் வாசிக்கும்போது அதன் சுவாரஸ்யம் கூடுகிறது. ஜமீன் கருணாகரபூபதியின் கதை வசீகரம் நிரம்பியது. ஒருவகையில் இது எஸ்.ராமகிருஷ்ணனின் ‘டிரேட் மார்க்’ எனலாம். அவரின் எல்லா நாவல்களிலும் இப்படியாக ஒரு கதை இடம்பெற்றுவிடுவது வாடிக்கை. சஞ்சாரமும் அதற்கு விலக்கல்ல. ஜமீன்தார் காட்டில் மலைசாதிப் பெண் கடம்பியின் காதலில் கட்டுண்டு கிடப்பதும், அவளிடமிருந்து விடுபட முடியாமல் தவிப்பதும், அவளை மோகினி என அறிவதுமான கதை நம்மில் மிகுந்த கற்பனையை, மனவெழுச்சியை ஏற்படுத்துவதாக அமைந்திருக்கிறது.

வெள்ளைக்காரன் ஹாக்கின்ஸ் நாதஸ்வரமும் தமிழும் கற்றுக்கொள்ள காட்டும் சிரத்தையும், வாழ்க்கையும் வியப்பைத் தருவது. அதேபோல் கண்ணில்லாத தன்னாசி நாதஸ்வரத்தில் உச்சத்தைத் தொடுவதும், ஊமை ஐயர் அந்த நாதஸ்வர இசையை விமர்சிப்பதில் சிகரத்தில் நிற்பதுமான கதையும், கால் ஊனமுற்ற அபு என்ற முஸ்லீம் நாதஸ்வரம் கற்றுத் தேர்ந்து புகழ் பெறுவதும் இசைக்கு மொழி, இனம், மதம், உடல் ஊனம் எதுவும் தடையல்ல என்பதை புலப்படுத்துகிறது. உடல் உறுப்புகள் பழுதடைந்தாலும் மனிதனின் புலன்கள் பழுதடைவதில்லை என்பதையே இவைகள் காட்டுகின்றன. இசை அருவமானது என்பதால் அதை யார் வேண்டுமானாலும் தனக்கானதாக மாற்றிக்கொள்ள முடியும் என்பதை அறியும்போது இசையின் அதிகபட்ச சாத்தியத்தை உணர்வதோடு, உண்பதும் உறங்குவதும் மட்டும் வாழ்க்கை அல்ல அதற்கும் அப்பால் மனிதனுக்கு ஏதோ ஒன்று தேவைப்படுகிறது என்பது புரிகிறது. அது ஆத்மாவின் தேவை. உடல் உள்ளம் இரண்டுக்கும் அப்பால் இந்த ஆத்மாவின் தேவையை நிறைவேற்றவே உயிர்கள் தவிக்கின்றன என்பதையே இந்தக் கதைகள் நம்மை உணரச்செய்கின்றன.

சுருங்கச் சொன்னால் பல்வேறு கலைஞர்கள், மனிதர்கள் வாழ்க்கையை, அவர்களின் சுபாவத்தை, சுழிப்பை மிக எளிய நடையில் சொல்கிறது சஞ்சாரம். ஊர்ஊராகச் சஞ்சாரம், நினைவில் சஞ்சாரம், இசையில் சஞ்சாரம் என உடல், மனம், ஆத்மா என்ற மூன்றின் சஞ்சாரத்தை இந்நாவல் படம்பிடிக்கிறது. ஆயினும் எஸ்.ராமகிருஷ்ணனின் வழக்கமான கவித்துவமான மொழியோ நடையோ இந்த நாவலில் அமையவில்லை. எனவே நாவல் நம்மைக் கனவின் வெளியில் சஞ்சரிக்கவிடாமல் யதார்த்தத்தில் சஞ்சாரம் செய்ய வைக்கிறது. அதுமட்டுமல்ல நாவலில் ஆழ்ந்த நுணுக்கமான விவரணைகள் போதுமான அளவில் இடம்பெறவில்லை. நாவலின் பெரும்பாலான பகுதிகள் உரையாடல் மூலமாகவே நகர்கிறது. கரிசல் குளத்தின் ‘ஊரோடிகள்’ கதையும், பொம்மக்காபுரத்தின் காற்றடிக் காலத்தின் கதையும் அந்தக் குறையை சற்றே ஈடுசெய்கின்றன. கதைக்குள் கதை என்ற முறையில் இந்த அத்தியாயம் அமைந்திருக்கிறது. ஊரின் மாற்றம், மனிதர்களின் மாற்றம் மற்றும் காலத்தின் மாற்றம் என்ற மூன்றையும் (நெடுங்குருதி போலவே) நாவலின் இந்தப் பகுதி வெளிப்படுத்துகிறது.

நாதஸ்வரக் கலைஞர்கள் படும் அவமானமும், வேதனையும், சிறுமையும், துயரமும் நாவல் முழுதும் விரவிக்கிடக்கிறது. சொல்லப்போனால் ஒவ்வொரு தொழிலும், வேலையும் அதற்கேயான சிரமங்களும், அவமானங்களும், வேதனைகளும் கொண்டிருக்கவே செய்கின்றன. அதிலிருந்து மீண்டு வெளியேறி வெல்பவர்கள் வெகுசிலரே. எனவே எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு இருப்பதே வாழ்வாக மனிதர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது என்ற புரிதலை நாவல் ஏற்படுத்தித் தருவதன் வாயிலாக  வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வது எளிதாகிறது; நாம் ஆசுவாசம் கொள்ள முடிகிறது.

இசையின் ஸ்வரமும் அபஸ்வரமும் போலவே அதைக் கைக்கொள்ளும் கலைஞர்களின் வாழ்விலும் இந்த இரண்டும் இணைந்தே இருக்கிறது என்பதையும், அபஸ்வரத்தையும் இசையாக்கும் அந்தக் கலைஞர்கள் கொண்டாடத்தக்கவர்கள் என்பதையும் நாவல் அறிவுறுத்துகிறது. நாவலில் ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் நிறைந்திருக்கின்றன. புத்தகத்தின் கட்டமைப்பிலும், அச்சிலும், காகிதத்திலும் கவனம் செலுத்திய உயிர்மெய் இதில் கோட்டைவிட்டிருக்கிறது. சஞ்சாரம் நாம் அவசியம் படிக்கவேண்டிய நாவல் என்று சொல்லமுடியாது, அதேசமயம் அது படிக்காமல் ஒதுக்கவேண்டிய நாவல் என்றும் சொல்லமுடியாது. அது ஸ்வரத்துக்கும் அபஸ்வரத்துக்கும் இடையே இசைக்கிறது. கேட்பவர்களின் காதைப்பொருத்து அது ஸ்வரமாகவும் அபஸ்வரமாகவும் ஒலிக்கக்கூடும்.

Related Posts Plugin for WordPress, Blogger...